Friday, August 14, 2015

நடனக்கலையில் முத்திரை பதித்த நடிகை வைஜெயந்திமாலா


நடனக்கலையில் முத்திரை பதித்த நடிகை வைஜெயந்திமாலா
வைஜெயந்திமாலா சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக அய்யங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்
ஏவி.எம். தயாரித்த 'வாழ்க்கை' படத்தின் மூலம், ஒரே நாளில் புகழின் சிகரத்தை அடைந்த வைஜயந்திமாலா, இந்திப்பட உலகிலும் வெற்றிக்கொடி நாட்டி, முதல் இடத்தைப் பெற்றார். 1952 தீபாவளி தினத்தன்று வெளிவந்த 'பராசக்தி', பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
அதில் அறிமுகமான சிவாஜி கணேசன், ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இதற்கு முன் 1949-ல் ஏவி.எம். தயாரித்த 'வாழ்க்கை' படமும், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில் கதாநாயகியாக அறிமுகமான வைஜயந்திமாலா, ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இதற்குக் காரணம், அந்தக் காலக்கட்டத்தில் திரைப்படக் கதாநாயகிகளில் பெரும்பாலோர் முதிர்கன்னிகளாக இருந்தார்கள்.அல்லது, ஒன்றிரண்டு குழந்தை பெற்றவர்கள்தான் கதாநாயகிகளாக வலம் வந்தார்கள்!
டி.ஆர்.மகாலிங்கம் போன்ற இளம் நடிகர்கள், தங்களைவிட மூன்று நான்கு வயது மூத்த நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது! அந்த நேரத்தில், இளமையும், அழகும், திறமையும், படிப்பும் கொண்ட 17 வயது வைஜயந்தி மாலாவின் திரை உலகப்பிரவேசம், ரசிகர்களைப் பரவசப்படுத்தியது.
எல்லா பத்திரிகைகளும் வைஜயந்தியின் பேட்டியையும், புகைப்படங்களையும் போட்டி போட்டுக்கொண்டு பிரசுரித்தன. 'வாழ்க்கை' படம், 'ஜீவிதம்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'பஹார்' என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டன. அந்தப் படங்களிலும் வைஜயந்திமாலாதான் கதாநாயகி. 'பஹார்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கரன்திவான். 'ரத்தன்' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர்.
'பஹார்' படத்தின் மகத்தான வெற்றியினால், வைஜயந்திமாலா வடநாட்டிலும் புகழ் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தில், நர்கீஸ், மதுபாலா, நளினி ஜெய்வந்த், சுரையா போன்றவர்கள், இந்திப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளாக விளங்கினர். அவர்களும் முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். எனவே, வைஜயந்திமாலாவை வடஇந்திய ரசிகர்களும் விரும்பி வரவேற்றனர். ஏராளமான இந்திப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வைஜயந்தியைத் தேடிவந்தன. இதன் காரணமாக, தமிழ்ப்படங்களை விட இந்திப்படங்களில் அதிகமாக வைஜயந்திமாலா நடிக்க நேரிட்டது.
வெகு விரைவிலேயே, இந்திப்பட உலக கதாநாயகிகளில் முதல் இடத்தைப் பெற்றார். தமிழ்நாட்டில் இருந்து வடநாட்டுக்குச் சென்று, வெற்றிக்கொடி நாட்டிய முதல் நடிகை வைஜயந்தி மாலாதான். . சிறு வயதிலேயே வைஜயந்திமாலா வழுவூர் ராமையாப்பிள்ளையிடம் நடனம் கற்றார்.
1954-ல், ஏவி.எம். தயாரித்த 'பெண்' படத்தில் நடித்தார். இதில் கதாநாயகன் ஜெமினிகணேசன். மற்றும் அஞ்சலிதேவி, எஸ்.பாலசந்தர் ஆகியோரும் நடித்தனர். 'வாழ்க்கை' படத்தைப் போல 'பெண்' பெரிய மெகாஹிட் படம் அல்லவென்றாலும், இனிய பாடல்களும், நடனங்களும் நிறைந்த படம். இந்தப் படத்தில் வைஜயந்திமாலா சிறப்பாகவே நடித்திருந்தார்.
சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா நடித்த ‘இரும்புத் திரை’ என்ற திரைப்படத்தில் (1960 ஆம் ஆண்டு வெளிவந்தது) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, எஸ்.வி.வெங்கடராமன் இசையமைப்பில் டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா 'சண்முகப்பிரியா' ராகத்தில் மிக இனிமையான குரலில் பாடிய ஒரு அருமையான பாடல். சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா இருவரும் அருமையாக நடித்திருப்பார்கள்.
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா .....என்ற பாடல் அனைவரது கருத்தையும் கவர்ந்தது
வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜெமினியின் பிரமாண்டமான படம். இதில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் பங்கு கொண்ட “போட்டி நடனம்”, கண்ணுக்கும், செவிக்கும் அரிய விருந்தாகும். இந்தியப் படங்களில் இடம் பெற்ற மிகச்சிறந்த நடனக் காட்சி எது என்று கேட்டால், “வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி – வைஜயந்திமாலா போட்டி நடனக் காட்சி” என்று தயங்காமல் கூறலாம்.
ஜெமினியின் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் இடம் பெற்ற வைஜயந்திமாலா -பத்மினி போட்டி நடனம், மிகப்பிரமாதமாக அமைந்தது. 1958-ல் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்த பிரமாண்டமான படம்
"வஞ்சிக்கோட்டை வாலிபன்.'' இதில் ஜெமினிகணேசன் கதாநாயகன். அவரை அடைய பத்மினி, வைஜயந்திமாலா இருவரும் போட்டி போடுவார்கள். இதில் பத்மினிதான் வெற்றி பெறுவார்.
படத்தின் சிறப்பு அம்சம், பத்மினியும், வைஜயந்திமாலாவும் ஆடும் போட்டி நடனம். எந்தப்படத்திலும் இதுபோன்ற அற்புத நடனம் இடம் பெற்றது இல்லை. இருபெரும் நடன மணிகள், தங்கள் முழுத்திறமையையும் பயன்படுத்தி அழகாகவும், எழிலாகவும் ஆடினார்கள்.
இந்த நடனக் காட்சி படமாக்கப்பட்டது பற்றி, வைஜயந்திமாலா கூறியதாவது:-
"நானும் பப்பியம்மாவும் (பத்மினி) மிகவும் புகழோடு இருந்த நேரம் அது. எங்கள் இருவரையும் வைத்து, "போட்டி நடனம்'' எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஜெமினி ஐயாவுக்கு (எஸ்.எஸ். வாசனுக்கு) எப்படி வந்ததோ தெரியாது. ஆனால் இது விஷயம் எங்கள் 2 பேருக்கும் சொல்லப்பட்டதும், ரொம்பவே தீவிரமாக டான்ஸ் பயிற்சியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தோம். ஓயாத ரிகர்சல்தான்.
இப்போதுகூட சிலர் என்னைப் பார்க்கும்போது, இந்த நடனத்துக்காகவே 30 தடவை 40 தடவை வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். இன்று இப்படிச் சொல்கிறார்கள் என்றால் எனக்கு வியப்பில்லை. காரணம் அன்று இந்த நடனக் காட்சிக்காக உழைத்த உழைப்பு அப்படி.
இரண்டு பேருக்குமான போட்டி நடனத்தில் கூட, யார் ஜெயித்தது என்கிற மாதிரி காட்சி இல்லை. ஆனால், முழுப்பாடலுக்குள்ளும் இருவரது திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவரவேண்டும். அப்போது இருந்த கலைஞர்களுக்குள் எந்தவித ஈகோவும் கிடையாது. அதனால்தான் இப்படி ஒரு அற்புதமான போட்டி நடனம் அமைந்தது.
நானும் பப்பிம்மாவும் சேர்ந்து ஆடினது 2 நாள்தான். மற்றபடி எனது தனிப்பட்ட காட்சிகளை மட்டும் 12 நாள் எடுத்தார்கள். அதாவது தனித்தனி ஷாட்டுகள் ஒவ்வொரு நாள் தனித்தனியா பண்ணும்போதும் நம்முடைய பார்ட்டை நன்றாக பண்ணிடணும். பப்பிம்மா பண்ணினதைவிடவும் பெட்டரா பண்ணனும் என்று நினைத்துக்கொண்டே டான்ஸ் மூவ்மெண்ட் கொடுப்பேன். அதாவது ஒவ்வொரு நடன முத்திரையையும் பார்த்து பார்த்து தனி ஈடுபாடு காட்டி ஆடினேன். அப்புறம்தான் தெரிஞ்சது.பப்பிம்மாவும் இதே நிலையோடுதான் தனி நடனக் காட்சிகளை பண்ணினாங்களாம். பாடல் காட்சி எடுக்கப்பட்டு `ரஷ்' போட்டுப் பார்த்ததுமே எங்கள் இருவருக்கும் ஒரே பாராட்டு. அப்பவே இந்தப்படம் பேசப்படுகிற அளவுக்கு போட்டி நடனமும் பேசப்படும் என்று எண்ணினேன்.''
இவ்வாறு வைஜயந்திமாலா கூறினார்.
1960-ல் வெளிவந்த "பாக்தாத் திருட''னில் எம்.ஜி. ஆருடன் வைஜயந்திமாலா இணைந்து நடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் இது ஒன்றுதான். இதே ஆண்டில் வெளிவந்த "பார்த்திபன் கனவு'' படத்தில் ஜெமினிகணேசனும், வைஜயந்திமாலாவும் ஜோடியாக நடித்தனர்.
வைஜயந்திமாலா திரைப்படங்களில் நடித்து வந்ததுடன், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். "நாட்டிய மாலா'' என்ற பத்திரிகையையும் நடத்தினார். ஐ.நா.சபை சார்பில் நடந்த "மனித உரிமை நாள்'' விழாவில், வைஜயந்திமாலாவின் பரதநாட்டியம் இடம் பெற்றது.
இங்கிலாந்து ராணி எலிசபெத், ரஷிய பிரதமர் புல்கானின், யூகோ அதிபர் டிட்டோ, கிரீஸ் மன்னர், பெல்ஜியம் மன்னர் ஆகியோர் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்களுக்கு இந்திய அரசாங்கம் அளித்த வரவேற்பில் வைஜயந்திமாலா நடனம் ஆடினார்.

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...