Thursday, August 20, 2015

ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்களும் ராணுவ கேன்டீனில் பொருட்கள் வாங்க அனுமதி: தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் பயனடைவர்

பாதுகாப்புத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்களும் ராணுவ கேன்டீன்களில் (சிஎஸ்டி) பொருட்களை வாங்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் பயனடைவர்.

பாதுகாப்புத் துறையில் பணி புரியும் வீரர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தாங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களை சந் தையை விலையை விட குறைந்த விலையில் வழங்குவதற்காக 1948-ம் ஆண்டு ‘சிஎஸ்டி கேன் டீன்’ (CSD-Canteen Stores Department) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. சாதாரண சோப் முதல் ஆடம்பரமான கார் வரையிலான 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும் 34 இடங்களில் கிடங்குகள் (டெப்போ) உள்ளன.

இந்த கேன்டீனில் பாதுகாப்பு படை வீரர்கள் தவிர பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் சிவில் ஊழியர்களும், பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே, கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த கேன்டீனில் பொருட்களை வாங்க ‘ஸ்மார்ட் கார்டு’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பணியில் இருப்ப வர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.5,000-ம் வரை மதிப்பிலான பொருட்களை மட்டுமே வாங்க முடியும். மேலும், பாதுகாப்புத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்களுக்கு பொருட்களை வாங்க அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அவர்களுக்கு ராணுவ கேன்டீனில் பொருட்களை வாங்கி அனுமதி அளித்து மத்திய பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, ராணுவ தளவாட தொழிற்சாலை மற்றும் அதன் சார்பு நிறுவனங்களின் ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.கஜபதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பாதுகாப்புத் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு குறைந்த விலையில் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் முதல் அனைத்து பொருட்களும் சந்தை விலையை விட சுமார் 15 முதல் 20 சதவீதம் வரை குறைத்து ராணுவ கேன்டீனில் விற்கப்படுகின்றன. இதனால், இங்கு விற்கப்படும் பொருட்களுக்கு எப்போதும் கிராக்கி உள்ளது. ‘ஸ்மார்ட் கார்டு’ கொண்டு வந்த பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ராணுவ கேன்டீனில் பொருட்களை வழங்க அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து, நாங்கள் பாது காப்புத் துறை அமைச்சகத்துக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை அனுப்பினோம். எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்தோம்.

இதையடுத்து, எங்கள் கோரிக் கையை பரிசீலித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த மாதம் 31-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஓய்வு பெற்ற சிவில் ஊழியர்களுக்கும் ராணுவ கேன்டீனில் பொருட்களை வாங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் சிவில் ஊழியர்கள் 50 ஆயிரம் பேர் பயனடைவர். நாடு முழுவதும் 15 லட்சம் பேர் பயனடைவர் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024