Wednesday, August 12, 2015

பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி





நடிப்புக் குயில் எஸ்.வரலட்சுமி நினைவாக
பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி 1927-இல் பிறந்தவர்
வெரைட்டி வரலக்ஷ்மி என்றே இவர் அழைக்கலாம். அவ்வளவு பாத்திரங்களையும் அனாயாசமாய் செய்யக்கூடிய திறமைசாலி. குடும்பப் பாங்கான முக லட்சணம் கொண்ட நடிகை. அதுமட்டுமல்ல மிகத் திறமையான இனிய குரல் வளம் கொண்ட நடிகையும் கூட. வில்லி, கதாநாயகி, அம்மா என்று பலகாலம் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகை ஆக்கிரமித்தவர். 1938 இல் தெலுங்கிலும் மற்றும் தமிழிலும் வெளிவந்த 'பாலயோகினி' யில் இளவயது நட்சத்திரமாக அறிமுகமானார்.
பழம்பெரும் இயக்குனர் K.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த 'சேவாசதானம்' படத்தில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் தோழியாக நடித்தார். பின் 1940இல் டி ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து பரசுராமன் (1940) நடித்தார்.
பின் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, போஜன், நவஜீவனம், மச்சரேகை, மோகனசுந்தரம் என்று வரிசையாகப் படங்கள்.
பி.யூ.சின்னப்பா, நாகையா, NTR, நாகேஸ்வரராவ், ரங்காராவ், எம்ஜியார், டி .ஆர்.மகாலிங்கம் ரஞ்சன், ஜெமினி என்று அத்துணை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார்.
சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.
இவர் பாடிய 'இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்....' என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருக வைப்பது.
அதேபோல குணா படத்தில் கமல்ஹாசனின் தாயார் வேடத்திலும் நடித்து ஒரு பாடலையும் பாடியிருந்தார் வரலட்சுமி.
ஆனால் நடிகர் திலகத்துடன் இவர் ஜோடி சேர்ந்த 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' இவருக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தந்து விட்டது. தலைவரின் ஆண்மையான ஆஜானுபாகுவான, கம்பீரத் தோற்றத்திற்கு வரலக்ஷமி அவர்களின் உருவ அமைப்பு தோதாக,கனகச்சித்தமாகப் பொருந்தி கட்டபொம்மனுக்கேற்ற ஜக்கம்மாவாக ஜோடி சேர்ந்து வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றுவிட்டது.
'ஜக்கம்மா' என்ற தனது தனித்துவமான கம்பீரக் குரலாலே நடிகர் திலகம் இவரை அழைப்பதைக் கேட்கும்போதெல்லாம் வரலக்ஷ்மிதானே ஞாபகத்திற்கு வருவார்!
கட்டபொம்மனில் அதிக ஸ்கோர் இவருக்கு இல்லையென்றால் கூட போருக்கு விடை கொடுத்து அனுப்பும் அந்த அற்புதக் காட்சியில் அருமையாக செய்திருப்பார்.
"ஆம்! என் கணவர் எத்தனை சிரம் கொணர்ந்தார் என்று எண்ணி எண்ணி எண்ண மாளாது அது ஒரு கோடி இருக்கும் போ...
கொண்டு போய்க் கொல்லைக் காட்டிலே கொட்டு... அங்கு எருக்கு முளைத்து அதை எருவாக்கி செந்நெல் விளைத்து நாட்டை செழிப்பாக்கு என்று நான் சொல்லி சிறக்கவேண்டும்"
என்று இவர் உணர்வுபூர்வமாக பேசும் அந்த குறிப்பிட்ட வசனத்தை மறந்துவிட முடியுமா!"
"வெற்றிவடிவேலனே" முடிந்ததும் அமைதியாய் மனம் வருடும் "மனம் கனிந்தருள் வேல்முருகா!" என்ற தேன் சொட்டும் குரலின் இனிமையைத் தான் மறக்க முடியுமா?
அருமையான குரல்வளம். 'டக்குன்னு டக்குன்னு அடிக்கடி துடிக்கும்', 'சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே' என்று இனிமை பரப்பும் பாடல்கள் இவர் குரல் வளத்தில்.
நடிகர் திலகத்துடன் டூயட் பாடாத அபூர்வ கதாநாயகி. ஒரு படம் ஜோடி என்றாலும் உலகப் புகழ் பெற்ற காவியத்தில் ஜோடி என்ற மகா பெருமையைத் தட்டி சென்றவர். பம்பர் பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி
திரையிட்ட இடங்களில் எல்லாம் வெள்ளிவிழாவைத்தாண்டி இருநூறு நாட்களுக்கு மேல் ஓடியது வீரபாண்டிய கட்டபொம்மன் படம்.
அதோடு மட்டும் அல்ல எகிப்தில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் கலந்து கொண்டு நான்கு பரிசுகளை - முதல் பரிசுகளை வாங்கிக் குவித்து தமிழ் திரை உலகை மட்டும் அல்ல .. அனைத்து தமிழர்களையும் பெருமை கொள்ளவைத்தது இந்தப் படம்.
அதில் சிறந்த இசைக்காக ஜி. ராமநாதனுக்கு பரிசு கிடைத்தது. ராமநாதனின் கலை உலக வாழ்வில் அவருக்கு கிடைத்த மிகச் சிறப்பான அங்கீகாரம் இது.
ஆனால் அந்த மேதையின் உள்ளத்தில் இது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவே இல்லை.. "அது வேற ஒன்னும் இல்லே.. நம்ம வரலக்ஷ்மியோட குரலிலே மயங்கி கொடுத்துருப்பா" என்று மிகச் சாதாரணமாகவே இதனை எடுத்துக்கொண்டார். என்றாலும்.
. இப்படி ஒரு கௌரவத்தை தனக்கு கொடுத்தமைக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் எகிப்து அதிபர் நாசர் இந்தியா வந்தபோது அவரை வரவேற்று தனது நினைவுப் பரிசாக ஒரு வெள்ளி வீணையை பரிசாக வழங்கினார் அவர்.
1.10.2007 அன்று நடிகர் திலகத்தின் 79 ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழவில் நடிகை எஸ்.வரலக்ஷ்மி அவர்களுக்கு டாக்டர் சிவாஜி கணேசன் மெமோரியல் அவர்ட் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
எஸ். வரலக்ஷ்மி தனது 84 வது வயதில்.22.09.2009 ல் காலமானார்
மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.




No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024