Monday, August 10, 2015

இந்தியா முழுவதும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு மத்திய அரசுக்கு குழு சிபாரிசு


புதுடெல்லி

இந்தியா முழுவதும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு நியமித்த குழு சிபாரிசு செய்துள்ளது.

ஆய்வுக்குழு

அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலை மறுவடிவமைப்பு செய்யவும், வலுப்படுத்தவும் ஏற்ற வகையில் ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக முன்னாள் கல்வித்துறை செயலாளர் எம்.கே.காவ் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமைத்தது.

இந்த குழு, அதன் ஆய்வு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் அளித்துள்ளது.

பல தேர்வுகள்

அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இன்றைக்கு ஒரு மாணவர் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் கீழ் வருகிற ஒரு கல்லூரியில் சேர்வதற்கு, மிகுதியான நுழைவுத்தேர்வுகளை எழுதுகிற நிலை உள்ளது. பொறியியல் கல்வி படிப்பதற்கு ‘ஜேஇஇ– மெயின்’ என்னும் கூட்டு நுழைவுத்தேர்வினை (முதன்மை) எழுத வேண்டி உள்ளது. மேலாண்மை படிப்புக்கு ‘சிமேட்’ என்னும் பொது மேலாண்மை சேர்க்கை தேர்வு எழுத வேண்டிய நிலை இருக்கிறது.

மேலும் பல்வேறு மாநிலங்களும் தங்களுக்கென்று நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன. பல்வேறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் பல்கலைக்கழகங்களும் சொந்தமாக நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன.

ஒரே நுழைவுத்தேர்வு

எனவே அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் கீழ் ‘தேசிய தேர்வு பணிகள் அமைப்பு’ என்ற ஒன்றை அமைக்க வேண்டும். இந்த அமைப்பு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் கீழான அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே நுழைவுத்தேர்வினை நடத்த வேண்டும்.

அதாவது, நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும். இதே போன்று மேலாண்மைப் படிப்புகளுக்கும் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும்.

அனைத்து பல்கலைக்கழகங்கள்

அந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மாநில அரசு நடத்துகிற பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் என எந்தவொரு கல்வி நிறுவனமும் மாணவர்களை சேர்க்க வேண்டும்.

கவுன்சிலிங் முடிந்த பிறகு இடங்கள் காலி ஏற்பட்டால், அந்த இடங்களை நிர்வாக ஒதுக்கீடு என கருதக்கூடாது. அவற்றை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலை உச்ச அரசியலமைப்பு அதிகார அமைப்பாக மாற்றி அமைக்க வேண்டும். அங்கீகாரம் பெற வேண்டும் என்ற விதிமுறையை 10 ஆண்டில் ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024