Saturday, August 22, 2015

நோக்கியா கம்பெனி மீண்டும் திறக்கப்படுகிறது தமிழக அரசுடன் மத்திய அரசின் குழு பேச்சுவார்த்தை

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா கம்பெனியை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணிகளில் மத்திய அரசின் பணிக்குழு இறங்கியுள்ளது.

அதிவிரைவு பணிக்குழு

இந்தியாவில் செல்போன் மற்றும் அதன் உதிரிபாக உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான அதிவிரைவு பணிக் குழுவை மத்திய அரசின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறை அமைத்துள்ளது.

இந்த பணிக்குழுவின் தலைவராக இந்திய செல்லுலார் சங்கத்தின் (ஐ.சி.ஏ.) தலைவர் பங்கஜ் மொகிந்த்ரோ நியமிக்கப்பட்டுள்ளார். நோக்கியா, லாவா, சோனி, மைக்ரோசாப்ட், மைக்ரோமாக்ஸ் உள்பட பல்வேறு செல்போன் நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இலக்கு நிர்ணயம்

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது செயல்பாட்டை இந்தப் பணிக்குழு தொடங்கியது. மாநிலங்களின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகளை சந்தித்து இந்தக் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

2019-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் செல்போன் உற்பத்தியை 500 மில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தக் குழு செயலாற்றி வருகிறது. அதாவது உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த செல்போன் உற்பத்தியில் இந்தியா 25 சதவீத இடத்தை பிடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூர்வாங்கப் பணி

இது செல்போன் உற்பத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், கூடுதலாக 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் பணிக்குழு, தற்போது தமிழகத்தில் நிலவும் சாதக சூழ்நிலைகளை பயன்படுத்த முன்வந்துள்ளது.

செல்போன் உற்பத்தியில் நோக்கியா முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பூர்வாங்கப் பணியில் இந்தப் பணிக்குழு இயங்கி வருகிறது.

அமைச்சர், அதிகாரிகளுடன் சந்திப்பு

இதுதொடர்பாக அமைச்சர் தங்கமணி, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் ஆகியோரை நேற்று தலைமைச்செயலகத்தில் பங்கஜ் மொகிந்த்ரோ, பணிக்குழுவின் துணைத் தலைவர் ஜோஷ் பல்கர் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

அரசிடம் கோரிக்கை

அதன் பின்னர் பங்கஜ் மொகிந்த்ரோ அளித்த பேட்டி வருமாறு:

நோக்கியா கம்பெனி மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இதற்கு தமிழக அரசு என்னென்ன செய்ய முடியும்? என்பதையும், அதை ஒரு தொகுப்பாக அளிக்க வேண்டும் என்பதையும் தமிழக அரசிடம் கேட்டுள்ளோம்.

இதுதொடர்பாக தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் நோக்கியா நிறுவனத்தை தற்போது கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை.

நம்பிக்கை

இதில் மத்திய அரசும் தமிழக அரசும் கூறும் விஷயங்களை முன்வைத்து, அதன் பின்னரே நோக்கியா நிறுவனத்தை பேச்சுக்கு அழைக்க விரும்புகிறோம். இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

நோக்கியாவை மீண்டும் செயல்படச் செய்வதற்கான பூர்வாங்க பணிகளை தொடக்கியிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024