சென்னை : பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்திற்கான ஏற்பாடுகள் பக்தர்களுக்கு அதிருப்தி அளிப்பதால், முதல்வர் நேரிடையாக இதில் தலையிட, பக்தர்கள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.
கும்பகோணம் மகாமகம் திருவிழா நடக்க, இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முறையான பொறுப்பாளர்கள் இல்லாததால், மகாமக ஏற்பாடுகள் அனைத்தும் மந்தமாகவே நடைபெற்று வருவதாக, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது மகாமகம்:
இதுவரை இரண்டு மகாமகத்தை கொண்டாடிய அ.தி.மு.க., அரசு, இப்போது மூன்றாவது மகாமகத்தை கொண்டாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது.
மகாமகம் குறித்து, இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் கூறியதாவது:பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகாமக திருவிழா, 'தென்பாரத
கும்பமேளா' என பிரசித்தி பெற்றது. வடமாநிலங்களில் நடைபெறும் கும்பமேளாவிற்கு, அந்தந்த மாநில அரசுகள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்யும். மாசி மக நட்சத்திரத்தில் நடைபெறும் இந்த மகாமக திருவிழா, கொடியேற்றத்துடன், 10 நாள் தீர்த்தவாரி திருவிழாவாக நடை பெறும். முன்னர் தினமும் இரண்டு லட்சம் பக்தர்கள் வந்த இந்த விழாவிற்கு, இந்த முறை, 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த இரண்டு மகாமகத்திற்கும், ஆதீன பக்தர்கள், மடாதிபதிகள், தொழிலதிபர்கள், உபயதாரர்கள் என ஒரு கமிட்டி அமைத்து, சாலைப் பணிகள், கழிப்பறை வசதி, போக்குவரத்து பணிகள், கோவில் திருப்பணிகள் உள்ளிட்டவற்றை, அதிகாரிகள் நடைமுறைப்படுத்தினர்.
கருத்து கேட்பு :
ஆனால், இந்தமுறை உபயதாரர்கள், உள்ளூர் மக்களிடம் முறையாக கருத்து கேட்கவில்லை. இது ஒரு சமய விழா என்பதால் ஆன்மிக அமைப்புகளிடமும், ஆன்மிக தலைவர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்.
ஆனால் அரசு சார்பில் நிதி ஒதுக்கி, முதற்கட்ட வேலைகள் தொடங்கியதோடு சரி; அதன் பின், எல்லா வேலைகளும் மந்தமாகவே நடைபெற்று வருகின்றன. மகாமகத்திற்கு அரசு சார்பில், கமிட்டி அமைக்கவில்லை. எந்த பணிகளும் இதுவரை முழுமையாகவும் நடைபெறவில்லை. இதற்கென, 260 கோடி நிதி ஒதுக்கியதோடு, எந்த முன்னெடுப்பும் இல்லை. சரியான பொறுப்பாளர்கள் இல்லாததால் பாதிக்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் பாதியில் நிற்கின்றன. மேலும் சில கோவில்களில், பாலாலய திருப்பணிகள் துவக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் சார்பில் வாய்க்கால்களை சுத்தப்படுத்துவதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. தற்போது தற்காலிக கழிப்பறைகள் மற்றும் பொதுகழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மகாமக ஏற்பாட்டில் முதல்வர் தலையிட்டு, அதன் பணிகள் தீவிரமாக நடக்க ஆவன செய்ய வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
குளங்கள் எங்கே?
மகாமக குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இப்போதே தண்ணீர் விட்டு நீர் ஆதாரத்தை பெருக்கினால் தான், மகாமகம் நேரத்தில், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். கும்பகோணத்தில், 44 குளங்கள் இருக்கின்றன. அதில், 12 குளங்கள் தான் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. 17 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; 15 குளங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. மூன்று குளங்களில் பக்தர்கள் நீராடுவது தான், மகத்தின் சிறப்பே. மகாமக குளத்தில் நீராடி, காவிரியில் குளிக்க வேண்டும். ஆனால், காவிரியின் படித்துறை, நீண்ட படிகளைக் கொண்டது. இதில் இறங்கித்தான் பக்தர்கள் நீராட வேண்டும். இடிந்த நிலையில் உள்ள படித்துறைகளை சீரமைத்தால் தான் பக்தர்கள் எந்தவிதமான சிரமங்களும் இல்லாமல் குளத்தில் இறங்கி நீராட முடியும். திருமஞ்சனத்திற்கான தீர்த்தவாரி மண்டபங்களும் சேதமடைந்து, ஆக்கிரமிப்புகளுடன் காணப்படுகின்றன. சேதமடைந்து கிடக்கும் படித்துறைகளையும், மண்டபங்களையும் சீரமைப்பதற்கோ, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கோ, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் சார்பில், எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறது.
No comments:
Post a Comment