Monday, August 31, 2015

ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிசய மனிதர்!

ற்போதையை விலைவாசி உயர்வினால் ஹோட்டலில் சென்று சாப்பிட்டால் பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகாத நிலையில், ஈரோட்டில் இன்னமும் ஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு போடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகே ஏ.எம்.வி வீட்டு சாப்பாடு மெஸ் செயல்பட்டு வருகிறது. இந்த மெஸ்சினை வெங்கட்ராமன் என்பவர் நடத்தி வருகிறார். அரசு மருத்துவமனை அருகே மெஸ் இருப்பதால் பெரும்பாலும் நோயாளிகளின் உறவினர்கள் இங்கு சாப்பாடு வாங்க வருவார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு இந்த மெஸ்சுக்கு தோசை வாங்க பெண் ஒருவர் வந்துள்ளார். 10  ரூபாய்க்கு  வெங்கட்ராமன் 3 தோசை கொடுத்துள்ளார். 

அப்போது அந்த பெண்,  இந்த 3 தோசையைதான் தானும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரும் பங்கிட்டு சாப்பிட வேண்டுமென்று வெங்கட்ராமனிடம் கூறியிருக்கிறார். இதனால் மனம் இளகி போன  வெங்கட்ராமன் மேலும் 3 தோசைகளை கட்டி அவரிடம் கொடுத்துள்ளார். அந்த பெண்ணின் வார்த்தைகள் வெங்கட்ராமனின் மனதை உறுத்தியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் படும் அவஸ்தைகளை நேரில் கண்டு மனம் கலங்கியுள்ளார் வெங்கட்ராமன்.  அங்கு பணி புரியும் செவிலியர்கள், பெரும்பாலான நோயாளிகள் இங்கு இட்லி, தோசை வாங்கி சாப்பிட பணம் இல்லாமல் பன், டீ-யுடன் பசியாற்றி கொள்வதாகவும் அவரிடம் கூறியுள்ளனர்.  அந்த சமயத்தில் வெங்கட்ராமன் எடுத்த முடிவுதான் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் இந்த திட்டம்.
முதலில் தினமும்  10 நோயாளிகளுக்கு ஒரு ரூபாயில் மதிய உணவு வழங்கி வந்தார்.  மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் டோக்கன் அளிக்கப்பட்டு கஷ்டப்படும் நோயாளிகள் அடையாளம் கண்டு அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனை கொண்டு வந்து வெங்கட்ராமன் மெஸ்சில் அவர்கள் உணவு பெற்றுக் கொள்ளலாம். மருத்துவமனைக்கு சென்று பங்கிட்டு சாப்பிட்டு கொள்ள வேண்டும். தற்போது  இதுவே தினமும்  70 டோக்கன்களாக உயர்ந்துள்ளது.  

இது குறித்து வெங்கட்ராமன் கூறுகையில், ''கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மூன்று வேளையும் நோயாளிகளுக்கு ஒரு ரூபாயில் உணவு வழங்குகிறேன். காலையில் 10 டோக்கன் அளிப்பேன். ஒரு டோக்கனுக்கு 3 தோசைகளும் 2 இட்லிகளும் வழங்கப்படும். அதே போல் மதியம் 40 டோக்கன்கள் வழங்குவேன். இதில் முழு மதிய உணவு அவர்கள் திருப்தியாக சாப்பிடும் வகையில் கட்டி கொடுத்து விடுவோம். அதே போல் இரவு 20 டோக்கன்கள் வழங்குகிறேன். இரவு நேரத்தில் 3 தோசை 2 சப்பாத்தி இருக்கும். வருங்காலங்களில் இதனை 100 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
இதே மெஸ்சில் பொதுமக்களுக்கு 50 ரூபாயில் உணவு வழங்கப்படுகிறது. இவரது மெஸ்சில் 8 பேர் வேலை பார்த்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இந்த உணவகம் செயல்படுவதில்லை. நஷ்டம் ஏற்பட்டாலும் சேவை மனப்பான்மையுடன் வெங்கட்ராமனும், அவரது மனைவியும் இந்த பணியை செய்து வருகின்றனர்.
முதலில் இலவசமாகவே நோயாளிகளுக்கு உணவு வழங்கலாம் என்று வெங்கட்ராமன் முடிவு செய்திருந்தாராம். ஆனால் உணவுப் பொருட்களின் அத்தியாவசியத்தை உணர்ந்து கொள்ள 
வேண்டும்,வீணாக்கி விடக் கூடாது என்பதற்காகவே பின்னர் ஒரு ரூபாய் வாங்க முடிவு செய்திருக்கிறார். 

சாப்பாடு வாங்க வரும் ஒவ்வொருவரிடமும் வெங்கட்ராமன் சொல்லும் ஒரே வார்த்தை ... உணவை வீணடிச்சுடாதீங்க  என்பதுதான்!

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...