Saturday, August 1, 2015

தாமதம் தகாது!

அண்ணா பல்கலைக்கழகம் நிகழாண்டு நடத்திய பொறியியல் கலந்தாய்வு முடிவுகள் புலப்படுத்தும் விஷயங்கள் இரண்டு. அவை, இதுநாள் வரை பெற்றோரிடமும், மாணவர்களிடமும் காணப்பட்ட பொறியியல் படிப்பு மீதான மோகம் தணிந்துவிட்டது என்பதும், பொறியியல் கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் அதன் தனித்தன்மை, சாதனை, கட்டமைப்பு, புகழ் ஆகியவற்றுக்கே முன்னுரிமை தருகின்றனர் என்பதும்தான் அவை. தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதல் கலந்தாய்வின் முடிவில் 90,649 இடங்கள் காலியாக உள்ளதற்கு அதுதான் காரணம்.
தற்போது பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களில் 55,608 பேர் குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போகிறவர்கள். தங்கள் குடும்பத்தில் முதல் பொறியாளர் ஆகும் ஆசையில் சேர்ந்தவர்கள். இத்தகைய ஆர்வமும் குறையும் என்றால் அடுத்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவோர் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
பொறியியல் கல்லூரி முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 27-ஆம் தேதி முடிவடைந்தது. ஆனால், அழைக்கப்பட்ட 1,48,794 பேரில் கலந்தாய்வுக்கு வந்தவர்கள் 1,01,620 பேர் மட்டுமே. அதாவது 31.4 விழுக்காட்டினர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வுக்கு வராத மாணவர்களில் மிகச் சிலர் மட்டுமே மருத்துவக் கல்விக்கு சென்றிருப்பார்கள். மற்றவர்கள், அதாவது சுமார் 45,000 பேரும் உறுதியாக கலை, அறிவியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொறியியல் படிப்பை முடித்த போதிலும் 75 விழுக்காட்டினர் சாதாரண பட்டதாரிகள் போல, வெறும் ரூ.10,000 ஊதியத்துக்கு வேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால், எதற்காக அதிக பணம் செலவிட வேண்டும்? சாதாரணப் பட்டப் படிப்பை மூன்று ஆண்டுகளில் குறைந்த செலவில் முடித்து வேலை தேடலாமே என்கின்ற எண்ணம்தான் இதற்கு முதன்மையான காரணம்.
இன்னொரு காரணமும் உண்டு. இப்போது பொறியியல் மோகம் கலைந்து, ஐஏஎஸ் மோகம் அதிகரித்துள்ளது. மூன்று ஆண்டு பட்டப் படிப்பை படித்துக் கொண்டே, ஐஏஎஸ் அகாதெமிகளில் சேர்ந்து படிக்கத் தொடங்கி விடுகிறார்கள். ஐஏஎஸ் தேர்ச்சி பெற முடியாவிட்டாலும், மாநில அளவிலான குரூப்-1, குரூப்-2 தேர்வுக்கு இந்தப் பயிற்சி பெரிதும் உதவுகிறது என்ற பரப்புரையும் தற்போதைய கலை அறிவியல் படிப்புகளுக்கான வரவேற்புக்கு ஒரு காரணம்.
எப்படியான போதிலும், கலை அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரிப்பது வரவேற்புக்குரிய மாற்றம் என்றாலும், திடீரென நேர்ந்துள்ள இந்த இடப்பெயர்வு, ஏற்கெனவே கலை அறிவியல் படிப்பில் சேருவதற்கு தீர்மானித்திருந்த மாணவர்களை மிகவும் பாதித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்குப் போகாமல் கலை அறிவியல் கல்லூரியைத் தேடி வந்த மாணவர்கள் 199 முதல் 140 வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்கள். அதாவது, இவர்கள் பிளஸ் 2 தேர்வில் 70 விழுக்காடு முதல் 99 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்கள். ஆகவே, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சிறந்தவற்றுள் அதிக வரவேற்புள்ள பாடப் பிரிவுகளில், இந்த நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களே ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டார்கள்.
நேற்றுவரை, "தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், வாருங்கள், பிற்காலத்தில் நல்ல வாய்ப்பு உருவாகும்' என்று கூவி அழைத்த கலை அறிவியல் கல்லூரிகள் இன்று நன்கு படித்த மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு கதவைச் சாத்திவிட்டன. 60 விழுக்காடு முதல் 70 விழுக்காடு மதிப்பெண் பெற்று, கலை அறிவியல் கல்லூரியில் சேரும் கனவுடன் இருந்த மாணவர்களுக்கு இப்போது இடம் இல்லை.
ஆகவே, இந்த மாணவர்களை பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் வந்து சேருங்கள் என்று பொறியியல் கல்லூரிகள் அழைக்கின்றன. கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளவும் முன்வருகின்றன. ஏனென்றால், பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூடப் போதுமான அளவுக்கு மாணவர் சேர்க்கை இல்லை.
விழாக் காலங்களில் வழக்கமான பயணிகளைவிடக் கூடுதலாகப் பயணிகள் வருவார்கள் என்பதால் சிறப்புப் பேருந்துகள் விடப்படுவதைப்போல, கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விரும்பும் பிரிவுகளில் அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் அனுமதியை பல்கலைக்கழகங்கள் உடனே அளிப்பதுதான், தற்போது பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்குப் பயன் அளிப்பதாக அமையும்.
தற்போது மாணவர் சேர்க்கை இல்லாமல் திண்டாடும் பொறியியல் கல்லூரிகளின் வளாகங்களை, கலை அறிவியல் கல்லூரிகள் "நீட்டிப்பு மையங்களாக' மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளிக்கலாம். இதனால், கலை அறிவியல் படிப்புகளில் இடம் கிடைக்காமல், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள இடைநிலை மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கித் தர முடியும்.
பிளஸ் 1 பாடத்தையே பள்ளிகளில் நடத்துவதில்லை என்பதால், பொறியியல் முதலாண்டு பாடத் திட்டத்தில் பிளஸ் 1 பாடத்தின் சில முக்கிய பகுதிகளை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலை. பிளஸ் 2 படிப்பை நான்கு பருவத் தேர்வுகளாக மாற்றுவது மட்டுமே இதற்குத் தீர்வாக அமையும். இதனால் அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதோடு, கல்வித் தரமும் உயரும்.
கல்வித் துறை தொடர்பான தீவிர மறு சிந்தனை உடனடியாகச் செய்யப்பட்டாக வேண்டும். கால தாமதம் கூடாது!

No comments:

Post a Comment

DRI seizes 20kg gold worth ₹15 crore from 25 flyers Passengers Had Arrived From Singapore

DRI seizes 20kg gold worth ₹15 crore from 25 flyers Passengers Had Arrived From Singapore  Venkadesan.S@timesofindia.com 12.11.2024  Chennai...