Friday, August 21, 2015

சென்னையில் ரோந்து பணிக்கு 135 மாருதி ஜிப்சி களம் இறங்கியது!

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையினரின் ரோந்து பணிக்கு 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட  135 புதிய மாருதி ஜிப்சி  வாகனங்களை, முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். 
 
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம்  ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை காவல் துறை ஆற்றி வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையினர் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக ஆற்றும் வகையில், புதிய காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக 225 இன்னோவா மற்றும் பொலிரோ ரோந்து வாகனங்களையும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களையும் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே வழங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகரின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறையினர் ரோந்து பணிகளை மேற்கொள்ள குறுகிய சக்கர அமைப்பு கொண்ட 135 வாகனங்கள் வழங்கப்படும் முதலமைச்சர் சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை பெருநகர காவல் துறையினரின் ரோந்துப் பணிக்கு 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 135 புதிய மாருதி ஜிப்சி வாகனங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இப்புதிய மாருதி ஜிப்சி ரோந்து வாகனங்களில் நவீன மின்னணு அறிவிப்பு பலகைகள், தொலைத் தொடர்பு கருவிகள் மற்றும் இதர நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

135 மாருதி ஜிப்சி ரோந்து வாகனங்களுடன் சேர்த்து சென்னை பெருநகர காவல்துறையில் தற்போது 360 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும், 403 இருசக்கர ரோந்து வாகனங்களும் செயல்பாட்டில் உள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024