அது எம்.ஜி.ஆர் சூப்பர் ஸ்டாராக உச்சத்தில் இருந்த நேரம். விலங்குகளையும் முக்கிய கதாபாத்திரமாக வைத்து படங்களைத் தயாரித்து வந்த சாண்டோ சின்னப்பா தேவர் தனது ‘தண்டபாணி பிலிம்ஸ்’ என்ற பட நிறுவனத்தை ‘தேவர் பிலிம்ஸ்’ என்ற தன் சொந்தப்பெயரில் ‘தாய்க்கு பின் தாரம்’ படத்தை முதன்முதலாகத் தயாரித்துக் கொண்டிருந்தார்.
பண்ணையார் பாலைய்யாவின் காளையை ஜல்லிக்கட்டில் அடக்கி பானுமதியை கரம்பற்றுவது போன்ற காட்சி. எம்.ஜி.ஆர் காளையை அடக்குவது போன்ற 50 ஷாட்டுகள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்படாமல் பாக்கியிருந்தது. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆருடன் மோதும் காளைக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் தேவர். காளைக்கு பயிற்சி முடிந்ததும் ஜல்லிக்கட்டுக் காட்சியில் நடித்துத் தருவதாக எம்.ஜி.ஆர் கூறியிருந்தார்.
ஆனால் எம்.ஜி.ஆரை வைத்து உங்களால் ஜல்லிக்கட்டு காட்சியை எடுக்க முடியாது என்று எச்சரிக்கை செய்தார் அந்தப் படத்தின் இன்னொரு பங்குதாரராக இருந்த தயாரிப்பாளர். தேவர் "அண்ணே யாரு உங்க படத்துல ஹீரோ?" "எம்.ஜி.ஆர்." "நல்ல ஆளுண்ணே நீங்க. மொத மொதலாப் படம் எடுக்கறீங்க. ஒழுங்கா வேல நடக்க வேணாமா?" "ஏம்ப்பா, எம்.ஜி.ஆர். உனக்கென்ன கெடுதல் செஞ்சார்?" - கோபத்தோடு சின்னப்பா தேவர் கேட்டார். சக தயாரிப்பாளர் அசரவே இல்லை. "அண்ணே நான் சொல்றேன்னு தப்பா எண்ணாதீங்க. நீங்க எம்.ஜி.ஆர். காளையை அடக்குற மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படறீங்க. இன்னும் எம்.ஜி.ஆரை நீங்க சரியாப் புரிஞ்சிக்கிடவே இல்ல. அவர் வரவே மாட்டார்." தேவர் பேசாமலிருந்தார். எம்.ஜி.ஆருக்கும் அவருக்குமான நட்பைப் பற்றித் தெரியாத அந்த சக தயாரிப்பாளர், "வரேங்க’" என்றபடி காரில் ஏறினார்.
எம்.ஜி.ஆர். மீதான குற்றச்சாட்டுகள் நெருப்பாகப் பரவியிருந்தன. எல்லோருமே குறை கூறினர். தயாரிப்பாளர்களோடு ஒத்துழைப்பது குறைவு. எம்.ஜி.ஆர். தன்னிச்சையாகச் செயல்படுகிறார். அவரால் படங்கள் வெளிவருவது தாமதமாகிறது. அதற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான். ஒழுங்காக பக்தியோடு தொழில் செய்தவர், நாத்திகவாதிகளுடன் சேர்ந்து நாசமாகி விட்டார் என்பது போன்ற செய்திகள் எம்.ஜி.ஆரின் இமேஜைப் பாதித்தன. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் 'அல்லா மீது ஆணையாக' என்ற வசனத்தைப் பேச மறுத்தார். அதை ‘அம்மா மீது ஆணையாக’ என்று மாற்றித் தரும்படி வசனகர்த்தா ஏ.எல். நாராயணனை வலியுறுத்தினார்.
முதலாளி டி.ஆர்.எஸ், "டயலாக் என்ன இருக்கோ, அதையே பேசு ராமச்சந்திரா" என்று உத்தரவே போட்டார். ஆனால் எம்.ஜி.ஆர். ஷூட்டிங்குக்கு தொடர்ந்து போகவில்லை. அவர் இல்லாமலேயே ஒரு சண்டைக் காட்சியையும் பாட்டு சீனையும் எடுத்து டி.ஆர்.எஸ். படத்தை முடித்தார். எம்.ஜி.ஆர். மீண்டும் சேலம் சென்றார். "ராமச்சந்திரா படத்தை ஒரு தடவை பார்த்துட்டுப் போ" என்று வழியனுப்பினார் டி.ஆர்.எஸ். கரடிமுத்து என்கிற நகைச்சுவை நடிகர், எம்.ஜி.ஆருக்கு பதிலாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். அதிசயித்தபடி வெளியே வந்தார். அவருக்கே அசலையும் பதிலியையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.
குற்றச்சாட்டுகள் எதையும் தேவர் பொருட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆரை நம்பினார். 1956 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ஆண்டாக இருந்தது. அதனாலேயே தாய்க்குப் பின் தாரம் படத்தையும் மிகுந்த அக்கறையோடு தயாரித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு ஷெட்யூல் மட்டுமே பாக்கி. தேவர் உற்சாக நடை போட்டார். மருதமலை முருகன் அருளால் படம் நல்லபடியாகவே தயாராகி விட்டது
. காளைச் சண்டையை காமிராவில் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. எம்.ஜி.ஆரிடம் பேசினார் தேவர். "அண்ணே! உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில செட் தயார். வந்து பார்க்கறீங்களா? பெரிய மைதானம். போதுமா சொல்லுங்க. வர்ற தை அமாவசை அன்னிக்கு வேலையை ஆரம்பிச்சாப் பரவாயில்லயா?" "காளைக்கு நல்லா ட்ரெயினிங் கொடுத்தாச்சா?" - எம்.ஜி.ஆர். கேட்டார். "நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா?" "பயமா, எனக்கா?" "இல்லண்ணே ஒரு பேச்சுக்கு…" தேவருக்குச் சட்டென்று மனத்துக்குள் சிநேகித நூல் அறுவது போலிருந்தது. எம்.ஜி.ஆரின் உரையாடலும் நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாகத் தெரிகிறதே. ஒழுங்காக முடித்துக்கொடுக்க மாட்டாரா? எல்லோரும் சொன்னதெல்லாம் அனுபவித்து அவஸ்தையுற்று வெளியிட்ட சத்திய வார்த்தைகள்தானா? என் எம்.ஜி.ஆர். இல்லையா இவர்? தேவர், எம்.ஜி.ஆரை ஏறிட்டு நோக்கினார். மகிழ்ச்சி போனது. எனக்கு பதில் சொல்லிட்டுப் போ என்கிற பிடிவாதமும் மிரட்டலும்
கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தன. "அண்ணே…" "என் கால்ஷீட்டை இப்பப் பெரியவருதான் பார்க்குறாரு. நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க" - எம்.ஜி.ஆர். சொன்னார். "தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே. நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும்." - தேவர் சூடானார். "புரிஞ்சுக்குங்க அண்ணே. எல்லா முதலாளிகளும் அண்ணன்கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு சொன்னா ஓகே. ஒரே குடும்பமா வாழறோம். பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல."
தேவர் அமைதியாக வெளியேறி விட்டார். தேவர் பிலிம்ஸின் முதல் தயாரிப்பான தாய்க்குப் பின் தாரமே தேவருக்குச் சுளையாக முப்பதாயிரம் ரூபாயை லாபப் பங்காக அளித்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால் தேவர் பிறந்த ஊருக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருந்தார். ஆனால் அவரது பேனரில் தாய்க்குப் பின் தாரம் அள்ளிய வசூலை வேறு எந்தப் படமும் பெறவில்லை. எம்.ஜி.ஆர். தேவரைச் சந்தித்தார். தன் சந்தோஷத்தைத் தெரியப்படுத்தினார். "அடுத்த ரிலீஸ் எப்ப அண்ணே?" என்றார் ஜாலியாக. "பார்க்கலாம்’"தேவர் சுருக்கமாக முடித்துக் கொண்டார். "மனசுல எதையும் வெச்சுக்காதீங்கண்ணே. நீங்களே என்னைப் புரிஞ்சுக்கலண்ணா வேறு யார் கிட்டப் போய் நிக்குறது?" எம்.ஜி.ஆர். இறங்கி வந்தார். தேவர் பிடி கொடுக்கவில்லை.
தாய்க்குப் பின் தாரம் தெலுங்கும் பேசியது. எம்.ஜி.ஆர். வீறுகொண்டு எழுந்தார். "யாரைக் கேட்டுப் படத்தை டப் செய்தீர்கள். எனக்கு எப்படி இன்னொருவன் குரல் கொடுக்கலாம்?" விளக்கங்கள் கேட்டு வக்கீல் நோட்டீஸ் பறந்தது தேவர் பிலிம்ஸுக்கு. அலறியடித்துக் கொண்டு வாகினியில் நின்றார் தேவர். அதன் அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி சிநேகமாகச் சிரித்தார். தேவர் வசமிருந்த வழக்கறிஞரின் ஓலையை வாங்கி வாசித்துப் பார்த்தார். நாகிரெட்டி ஓடி வந்தார். அவரும் படித்துப் பார்த்து விட்டு கலகலப்பானார். சக்ரபாணி, எம்.ஜி.ஆருக்குத் தக்கபடி பதிலடி கொடுத்தார். "காளையை நீங்கள் நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது டூப்தான் மோதி வெற்றி பெற்றார். ஆனால் அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில் அக்கறையோடு நீங்களே மாட்டை வென்றிருந்தால் இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான நஷ்டத்தை உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்." தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்த எம்.ஜி.ஆர்.அடங்கிப் போய்விட்டார். அந்தக் காளையை அடக்கியவர் சாண்டோ சின்னப்பா தேவர்.
No comments:
Post a Comment