Thursday, August 27, 2015

இன்றைய இன்றியமையாத் தேவை!

இன்று மருத்துவச் செலவு என்பது, தனி ஆலோசனைக்காக மருத்துவரிடம் நேரிடையாகக் கொடுக்கும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.100 முதல் ரூ.200 தவிர்த்து, அவர்கள் எழுதிக் கொடுக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, பயாப்ஸி போன்ற சோதனைகளுக்கும், மெய்யான நோய் தெரியும் முன்பாகவே சாப்பிட்டாக வேண்டிய மருந்து, மாத்திரைகளுக்கும் ரூ.1,500 வரை செலவாகிறது. "ஒரு நோயாளியை வைத்து எல்லாரும் பிழைக்கிறார்கள்; நோயாளியைத் தவிர!'- என்கிற கவிப் புலம்பல்தான் இன்றைய சூழல்.
நடுத்தர வருவாய்ப் பிரிவினரைத் திணறடித்து, சேமிப்பைக் கரைக்கும் இத்தகைய "பரிசோதனை'க் காலத்தில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 4 மருத்துவத் திட்டங்களும் இன்றைய இன்றியமையாத் தேவை.
அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா ஆரோக்கியத் திட்டம் ஆகியன பெண்களுக்கு வரப்பிரசாதம் போன்றவை. இத்திட்டத்தில் இடம்பெறும் தைராய்டு, கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை, மார்பகப் பரிசோதனை, எலும்புத் திறன் அறிதல் ஆகியவை அனைத்துப் பெண்களும், குறிப்பாக மாதவிடாய் நின்றுபோன அனைத்துப் பெண்களும் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்.
கணவர்களின் புறக்கணிப்பாலும், விழிப்புணர்வு இல்லாததாலும், தனியார் மருத்துவமனைகளில் மேற்சொன்ன ஒவ்வொரு பரிசோதனைக்கும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் என்பதால் அந்தப் பணத்துக்கு வழியில்லாமலும்தான் பெண்கள் இந்த அடிப்படையான சோதனைகளை செய்து கொள்ளாமல் துன்பத்தை மெüனமாகத் தாங்கிக் கொள்கின்றனர். மற்ற மருத்துவத் திட்டங்களைக் காட்டிலும், மகளிர் முழுஉடல் பரிசோதனைத் திட்டத்துக்கு அதிகபட்சமான அக்கறை கொள்ள வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது.
கர்ப்பிணிகளுக்கான அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டத்தில் சித்த மருத்துவப் பொருள்கள், லேகியம் வழங்கப்பட இருப்பதும் மிகவும் பயனுள்ள, கர்ப்பிணிகளுக்கு உடல்வலு சேர்க்கும் திட்டம்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் மிகக் குறைந்த கட்டணத்தில் தற்போது நடைமுறையில் இருந்தாலும்கூட, அதில் இடம்பெறும் பரிசோதனைகள் மிகச் சிலவே. தற்போது முதல்வர் அறிவித்துள்ள அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தில் எட்டுக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் இடம் பெறுவதோடு, ரத்தத்தில் சர்க்கரையின் மூன்று மாத அளவைக் கணக்கீடு செய்யும் எச்பிஏ1சி பரிசோதனையும் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
385 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரம் இருநாள்கள் இலவச ரத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, சிறுநீர், ரத்தக் கொழுப்பு பரிசோதனை நடத்தப்படும் என்ற அறிவிப்பும் ஊரக மக்களுக்குப் பயன் தருபவை.
இவ்வளவு நல்ல திட்டங்களை முதல்வர் அறிவித்தாலும், இத்தகைய திட்டங்கள் தங்களுக்கு கூடுதல் பணிச்சுமை என்று அறிக்கை விடுவதுதான் அரசு மருத்துவமனை ஊழியர்களின் முதல் எதிர் வினையாக இருக்கும். அடுத்ததாக, இந்த சோதனைகளுக்காக வருவோரை அலைக்கழித்து, இயந்திரம் பழுது என்று பல முறை திருப்பி அனுப்பி, அரசு மருத்துவமனையின் மீது வெறுப்பும் நம்பிக்கை இழப்பும் ஏற்படுத்துவது ஒருசில பொறுப்பில்லாத ஊழியர்களின் வாடிக்கை.
தனியார் மருத்துவமனைகளையும், பரிசோதனைக் கூடங்களையும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் நாடுவதன் காரணம் அவர்களிடம் செலவழிக்கும் சக்தி இருக்கிறது என்பதால் அல்ல, அரசு மருத்துவமனைகளில் இத்தகைய அலைக்கழிப்புகளைத் தவிர்க்கத்தான், வயிறு எரிய, சாபங்களுடன் தனியாரிடம் பணத்தைக் கொடுக்கிறார்கள்.
பல ஊர்களில், கட்டணம் பெறும் தனியார் ரத்தப் பரிசோதனை நிலையங்கள் இந்த ரத்த மாதிரிகளை அரசு மருத்துவமனையில் உள்ள நண்பர் அல்லது ரத்த உறவுகளிடம் கொடுத்து பரிசோதனை முடிவுகளை மட்டும் செல்லிடப்பேசியில் வாங்கி, தங்கள் நிறுவன ரசீதில் எழுதித் தருகிற முறைகேடுகள் நடப்பதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்று கண்டறிந்து தடுப்பது அரசின் கடமை.
இவ்வளவுக்குப் பிறகும் அரசு மருத்துவமனைகளின் சேவை மக்களுக்கு கிடைப்பதன் காரணம் சில அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இருப்பதுதான். மிக அரிய சிகிச்சைகள் குறித்த பேட்டிகளும், நோயாளிகளின் மனம் நெகிழ்ந்த நன்றிகளும் செய்திகளாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. அரசின் கண்டிப்பும், கூடுதல் கண்காணிப்பும் இருந்தால் இன்னும் சிறப்பான சேவை, அரசு மருத்துவமனைகளில் சாத்தியமாகும்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வருவோரில் விபத்தில் காயமடைவோர்தான் அதிகமாக இருக்கிறார்கள். விபத்து நடந்த சில நிமிடங்களில் அவசர உதவி வாகனம் வந்துவிடுகிறது என்றாலும், அவை அடிபட்டவரைக் கொண்டு சேர்க்கும் இடம் 90% தனியார் மருத்துவமனையாகவே இருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்த பிறகு கேட்கும் மிகப் பெருந்தொகை, விபத்தில் பிழைத்த நோயாளியை நடைப்பிணமாக்கிவிடுகிறது.
விபத்தில் காயமடையும் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இருப்பினும் அத்தகைய திட்டத்தை தமிழக அரசே அறிவித்து முன்னோடி மாநிலமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான சந்தா தொகையை வாகன விற்பனை, வாகன ஓட்டுநர் உரிமக் கட்டணம் ஆகியவற்றில் சேர்த்து வசூலிக்கவும், இந்த வரையறைக்குள் வராதவர்களுக்கு அரசே சந்தா தொகையை செலுத்தவுமான ஒரு திட்டத்தையும் முதல்வர் பரிசீலிக்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024