Sunday, August 9, 2015

கோவையில் கவுன்சிலிங்: குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சென்னையில் தாயுடன் தவித்த கல்லூரி மாணவி


தகுதியும் திறமையும் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான் கிராமத்து மாணவ–மாணவிகள் பலர் வாய்ப்புகளை கோட்டை விடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி.

நேற்று காலை 6.30 மணி.

கிண்டி அண்ணாபல்கலை கழக வளாகத்தில் வழக்கம் போல் பலர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேரம்.

அப்போது தளைய தளைய புடவை கட்டிய ஒரு பெண், அவர் அருகில் அழகாக சுடிதார் அணிந்து, நேர்த்தியாக வாரப்பட்ட தலையுடன், கையில் லெதர் பேக்கையும் வைத்துக் கொண்டு திரு... திரு... என்று முழித்து கொண்டிருந்தார்கள்.

பார்த்ததுமே ஒரு கிராமத்து தாயும், மகளும் இடம் தெரியாமல் தவிக்கிறார்கள் என்பது புரிந்து விட்டது. நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களிடம் எங்கே போகணும்? என்று விவரம் கேட்டனர்.

கவுன்சிலிங்குக்கு வந்தோம் என்று அவர்கள் சொன்னதும் ‘‘என்ஜினீயரிங் கவுன்சிலிங் முடிந்து விட்டதே...’’ என்றார்கள்.

கவுன்சிலிங் முடிந்து விட்டதா? அய்யய்யோ எனக்கு இன்று காலை 8.30 மணிக்குத்தான் கவுன்சிலிங்... அண்ணா அரங்கத்தில் நடக்கிறது. நீங்கள் அந்த அரங்கம் எங்கே இருக்கிறது என்பதை மட்டும் சொல்லுங்கள் என்றார் அந்த இளம் பெண். அப்படி ஒரு அரங்கமே இங்கு இல்லையம்மா...

எங்கே, உங்கள் அழைப்பு கடிதத்தை காட்டுங்கள் பார்ப்போம் என்று அதை வாங்கி பார்த்தார்கள். அப்போதுதான் கவுன்சிலிங் இங்கு அல்ல. கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் என்பது தெரிய வந்தது.

அந்த மாணவியின் பெயர் சுவாதி. திருச்சி அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர். பிளஸ்–2 தேர்வில் 1200க்கு 1017 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பி.எஸ்.சி. பயோடெக்னாலஜி படிப்பதற்காக கோவை வேளாண்மை பல்கலை கழகத்தில் விண்ணப்பித்துள்ளார். நேற்று காலை 8.30 மணிக்கு அண்ணா அரங்கில் கவுன்சிலிங்குக்கு வருமாறு அழைப்புக் கடிதம் அனுப்பி இருந்தார்கள்.

வெளியூர்களை பற்றி அவ்வளவாக அறியாத கிராமம். சுவாதியின் தாயாரும் படிக்காதவர். விவசாய வேலை செய்து மகளை படிக்க வைத்துள்ளார். அண்ணா அரங்கம் என்றதும் அண்ணா பல்கலை கழகம்தான் என்ற தவறான வழிகாட்டுதலால் அந்த ஏழைத்தாய் தன் மகளை அழைத்து கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து விட்டார்.

இடம் மாறி வந்து விட்டதை அறிந்ததும் தவித்து போனார்கள். மாணவி சுவாதியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. தனது ஆசை கனவுகள் அனைத்தும் முடிந்து விட்டது. இனி நான் படிக்க முடியாது என்று அழுது புலம்பினார்.

தவறான வழிகாட்டுதலால் வழிமாறி வந்த ஏழை மாணவியின் கல்லூரி வாழ்க்கைக்கு உதவி செய்ய நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் முன் வந்தனர்.

அப்போது நேரம் 7.30 மணி இன்னும் ஒரு மணி நேரத்தில் கோவை செல்வது எப்படி? விமான டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்ப சிலர் முன் வந்தனர்.

ஒரு அதிகாரி உடனடியாக கோவை வேளாண்மை பல்கலைகழக பதிவாளரை போனில் தொடர்புகொண்டு நடந்த விபரங்களை சொன்னார்.

அந்த மாணவியை உடனடியாக விமானம் மூலம் கோவைக்கு அனுப்பி வைப்பதாகவும் காலதாமதத்தை ஏற்றுக் கொண்டு அந்த மாணவியை கவுன்சிலிங்குக்கு அனுமதிக்கும்படி வேண்டினார். உண்மையை நிலையை அறிந்ததும் பதிவாளரும் சம்மதித்தார்.

அடுத்ததாக சென்னை விமான நிலையத்துக்கு காரும் ஏற்பாடு செய்தார்கள். தாய்–மகள் இருவருக்கும் கோவைக்கு செல்ல விமான டிக்கெட் எடுத்து கொடுத்தார்கள்.

கோவை விமான நிலையத்தில் இருந்தும் பல்கலைகழகத்துக்கு உடனடியாக காரில் அழைத்து செல்ல நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்தார்கள்.

காலை 10.05 மணிக்கு கோவைக்கு விமானம் புறப்பட்டது. அதோ பார் ஆகாய விமானம் என்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து ரசித்த சுவேதாவும், அவரது தாயாரும் ஆகாய விமானத்தில் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தார்கள். வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும்! ஆனால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று மனதுக்குள் எண்ணிய அவர்களுக்கு விமான பயண அனுபவத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியவில்லை.

கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியுமா? கல்லூரியில் படிக்க இடம் கிடைக்குமா? என்ற கேள்விகளுடன் தாய்–மகளின் இதயங்கள் துடித்து கொண்டிருந்தன.

சரியாக 11.40 மணிக்கு விமானம் கோவையில் தரையிறங்கியது. அங்கே அவர்களை அழைத்து செல்ல சென்னை வாசிகளின் நண்பர் காருடன் தயாராக இருந்தார்.

சரியாக 12.15 மணிக்கு சுவேதாவை காரில் கோவை வேளாண்மை பல்கலை கழகத்துக்கு அழைத்து சென்றனர். பதிவாளரை சந்தித்தும் கவுன்சிலிங்குக்கான ஏற்பாடுகள் நடந்தன.

மதியம் 2 மணிக்கு நடந்த கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தான் விரும்பிய பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜி பாடப்பிரிவை தேர்வு செய்தார். காலையில் தொடங்கிய மன போராட்டத்துக்கு விடை கொடுத்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

திக்கு தெரியாத இடத்தில் தவித்த நேரத்தில் கடவுளின் வடிவமாக வந்து தனக்கு வாழ்வு கொடுத்த நல்ல இதயங்களை நினைத்து சுவேதா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

மனிதாபிமானம் மரத்துபோகவில்லை. வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் செய்து கொண்டிருக்கும் பெரிய மனிதர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். பெயரை கூட வெளியே சொல்ல விரும்பாத அந்த பரோபகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024