Sunday, August 30, 2015

விஜயகாந்துதான் அடுத்த முதல்வர்: அடித்து சொல்லும் பிரேமலதா!

திருச்சி: "எத்தனை பேர் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தாலும் விஜயகாந்துதான் அடுத்த முதல்வர். அவர் முதல்வர் பதவியில் அமரும் வரை ஓயமாட்டார்" என்று பிரேமலதா விஜயகாந்த் உறுதிபட கூறினார்.
'மக்களுக்காக மக்கள் பணி' என அறிவித்து அந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
இந்நிலையில்  விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, கரூரை அடுத்த தரகம்பட்டியில் 'மக்களுக்காக மக்கள் பணி' திட்டத்தின் கீழ் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தே.மு.தி.க. 10 ஆண்டு கட்சி என்று சொல்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பே ரசிகர் மன்றமாக உருவாகி, தற்போது தே.மு.தி.க. தமிழகம் முழுவதும் ஆலவிருட்சமாக உருவாகி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகளில் சாப்பாடு, அரிசி, குவார்ட்டர் பாட்டில் கொடுக்காமல் ஒரு கட்சி கூட கூட்டம் கூட்ட முடியாது. ஆனால் இங்கு மக்கள், மாநாடு கூட்டம் போல் அமர்ந்து உள்ளனர்.

கேப்டன் விஜயகாந்த்  மக்களை பற்றி சிந்திக்கிறார். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 50 ஆண்டுகள் கொள்ளையடித்து போதாதா? தமிழக மக்களுக்கு என்ன தேவை என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, அடுத்த தேர்தலை பற்றிதான் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் சிந்தித்து வருகின்றனர். 50 ஆண்டுகளாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழகத்தை சீரழித்துவிட்டது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. பிடியில் இருந்து தமிழகத்தை மீட்பது நமது கடமை.
 

இன்று வளர்ச்சியில் பீகார் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு கடைசியில் இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை குறைசொல்லிதான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில்லை. தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கும் வரை எங்கள் மக்கள் பணி ஓயாது. தி.மு.க.வினர் ஒரு மடங்கு மணல் கொள்ளையடித்தால் அ.தி.மு.க.வினர் 10 மடங்கு மணல் கொள்ளையடித்து உள்ளனர். 
மதுவினால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறது என புள்ளி விபரம் கூறுகிறது. இதற்கு மதுதான் காரணம். திமுக ஆட்சியில் போட்ட திட்டங்களை அதிமுக முடக்குகிறது. இதேபோல், அதிமுக போடும் திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முடக்குகிறது. ஆனால், தி.மு.க.வால் கொண்டு வரப்பட்ட மதுக்கடையை மட்டும் இரு அரசுகளும் முடக்குவதில்லை. காரணம், தமிழகத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மது ஆலைகள், இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பினாமிகள் பெயரால்தான் நடத்தப்படுகிறது. 

தி.மு.க. ஆட்சியில் 90 ஆயிரம் கோடியாக இருந்த தமிழக கடன் தொகை, இன்று ரூ.4½ லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 110 வது விதியின் கீழ் பல திட்டங்களை ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதில் எந்த அறிவிப்பும் செயல்திட்டமாக வடிவம் பெறவில்லை. தி.மு.க. மீது மக்களுக்கு வெறுப்பு என்றால், அனைத்திலும் முரண்பட்ட ஜெயலலிதா மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்யும், லஞ்சம் இல்லாத, எளிமையான, திமிர் இல்லாத ஆட்சியை விஜயகாந்த் தருவார். அவர் முதல்வர் பதவியில் அமராமல் ஓயமாட்டார். நாங்கள், 'மக்களுக்காக நான்' என்ற திட்டத்தை தொடங்கியவுடன், தி.மு.க.வில் தமக்குத்தாமே என்ற திட்டத்தை ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.
அ.தி.மு.க.வினர் இப்போதே 64 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கத் தொடங்கிவிட்டனர்.
அனைவரும் வரும் 2016 சட்டப்பேரவை  தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிவிட்டனர். எத்தனை பேர் தேர்தலை சந்தித்தாலும் விஜயகாந்துதான் அடுத்த முதல்வர். அவர் முதல்வர் பதவியில் அமரும் வரை ஓயமாட்டார்" என்றார். 

-சி.ஆனந்தகுமார்

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...