Saturday, August 22, 2015

ஆங்கிலம் அறிவோமே - 71: ராக்கெட்டும், பாக்கெட்டும்

ஒருவர் போகிற போக்கில் “ராக்கெட்டுக்கும், பாக்கெட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கூறுங்கள்’’ என்று கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எனக்கும் அதே உணர்வுதான் முதலில் எழுந்தது. பிறகு இதிலும் முக்கிய விஷயம் இருப்பதை உணர முடிந்தது.

Racket, Rocket இடையே வித்தியாசம் உண்டு - எழுத்துகளிலும், அர்த்தங்களிலும்.

அதேபோல் Packet, Pocket இடையேகூட வேறுபாடு உண்டு.

டென்னிஸ் ராக்கெட் என்று நாம் குறிப்பிடும்போது அது Racket. இந்த வார்த்தைக்கு இன்னொரு பொருளும் உண்டு. எக்கச்சக்கமான ஒலியை எழுப்புவதை Racket என்போம். அதாவது நமக்குப் பிடிக்காத ஒலி. The traffic made a terrible racket in the street.

சட்ட மீறல்களை ஒரு குழுவாகச் செய்யும்போது அதையும் racket என்பதுண்டு. The latest weight reducing racket, Emu farm racket என்பதுபோல.

சிலர் Racquet என்ற வார்த்தையையும் Racket என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்துகிறார்கள். Racket கொண்டு ஆடப்படும் விளையாட்டைக் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுகிறது.

Rocket என்பது விண்கலம் தொடர்பானது. அது உயர எழும்பும் பொருள். விண்கலம் ஏவும் இடமான தும்பாவிலும் எழும்பும். தீபாவளியின்போது பட்டாசு வடிவிலும் எழும்பும். விலைவாசி rocket வேகத்தில் எழுவதை நாம் எவ்வளவு முறை பார்த்திருப்போம்!

இப்போது பாக்கெட்டுக்கு வருவோம்.

Packet என்றால் ஒரு பொட்டலம் என்று வைத்துக் கொள்ளலாம். A packet of sweets.

நாம் சட்டைப் பாக்கெட் என்று குறிப்பிடுவது pocket. அதாவது சிறிய பொருள்களை வைத்துக் கொள்வதற் காக உடைகளில் தைக்கப்படுபவை.

சில சமயம் பொதுவான ஒன்றிலிருந்து விலகி நிற்கும் சின்னச் சின்ன ‘அறைகளைக்’ குறிக்கவும் pocket என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உண்டு. Pockets of resistance. A pocket of poverty in the affluent city.

சாதக பாதகம்

பயிற்சி வகுப்பு ஒன்றில் ‘எதைச் செய்வதற்கு முன்னாலும் அதன் pros and cons என்னவென்று யோசித்துவிட்டுச் செய்ய வேண்டும்.’ என்றேன்.

“ஏன் poetry-ஐ நினைக்கக்கூடாது?’’ என்று ஒருவர் முணுமுணுத்தது கேட்டது. நல்லவேளை காதில் விழுந்தது.

நான் குறிப்பிட்டது அந்த prose அல்ல. இது pros. இதற்கு சாதகங்கள் என்று அர்த்தம். Cons என்றால் பாதகங்கள். ஒரு செயலின் சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகு அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் நான் கூறிய ஆங்கில வாக்கியத்தின் பொருள்.

I wanted to weigh up the pros and cons before accepting the job.

லத்தீன் மொழியில் pro என்றால் ஆதரவாக. Contra என்றால் எதிராக. Contra என்பதுதான் con ஆகிவிட்டது. அந்த மொழியில் pro et contra என்பார்கள். அதாவது for and against எனலாம்.

அருவி

ஒரு வாசக நண்பர் “Cascade, cataract ஆகிய இரண்டுமே அருவியைக் குறிக்கும் சொற்கள்தானே?’’ என்கிறார்.

ஆமாம். ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. Cascade என்பது மிக மெல்லிய அருவி என்று சொல்லலாம். பல தீம் பார்க்குகளில் காணப்படலாம். பாறைகளின் மீது படர்ந்து வரும் அருவி. Cataract என்பது சக்தி மிகுந்த அருவி. கொஞ்சம் பயங்கரமானது, ஆபத்தானது என்றும் சொல்லலாம்.

அருவியில் வேறு சில வகைகளும் உண்டு. Chute எனப்படும் அருவியில் அது சரியும் வழி மிகவும் குறுகலானது. இதன் காரணமாக மிகமிக அதிக வேகத்தோடு அந்தக் குறைவான பகுதியில் அருவி நீர் வெளிப்படும். Frozen Waterfalls என்றால் பனிக்கட்டியாக மாறிவிட்ட அருவி என்று அர்த்தம். இதன்மீது ஏறுவதைக்கூட ஒரு சாகசமாக எண்ணுபவர்கள் உண்டு.

இது தொடர்பான Catadupa என்ற வார்த்தை கூட சுவாரசியமானதுதான். இது பிரம்மாண்டமான அருவிக்கு (பெரும்பாலும் நைல் நதி தொடர்பான அருவிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது) அருகில் வசிக்கும் மக்களைக் குறிக்கிறது. தொடர்ந்து அருவியின் பலத்த ஓசையைக் கேட்டுக் கொண்டிருப்பதால் இவர்கள் பெரும்பாலும் கேட்கும் திறனை இழந்துவிட்டிருப்பார்களாம்.

வருமா,வராதா?

“He did not go” என்பது சரியா? அல்லது “He did not went” என்பது சரியா?”என்று கேட்ட நண்பரிடம் முதல் வாக்கியம்தான் சரியானது என்றேன். அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. Did என்பது past tense. எனவே went என்பதுதானே வர வேண்டும் என்றார்.

இது போன்ற தவறுகளை சில வாசகர்களின் அஞ்சல்களிலும் (Why you did not replied?) காண முடிகிறது. எனவே, இந்தச் சந்தேகம் குறித்து கொஞ்சம் விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

Auxiliary verb குறித்து இந்தப் பகுதியில் முன்பு குறிப்பிட்டிருக் கிறேன். என்றாலும் அது குறித்து ஒரு சுருக்கமான revision இப்போது நலம் பயக்கும்.

VERB-களில் பலவும் main verbs என்ற பிரிவில் அடங்கிவிடும். stand, runs, forgot, allow என்பவை சில உதாரணங்கள்.

auxliary verb என்பது tense, voice போன்றவற்றைச் சுட்டிக்காட்டி வாக்கியத்தை இலக்கணப்படி அமைக்க உதவுபவை. இவற்றை helping verbs என்றும் கூறுவார்கள். இவை பெரும்பாலும் main verb-உடன் காணப்படுகின்றன. auxliary verbs க்கு சில எடுத்துக்காட்டுகள் - am, has, do, may, are, was, have, does, will, could, is, did.

இந்த இரண்டு வகை VERBS-ஐ கண்டுபிடிக்க குறுக்குவழி ஒன்றும் தோன்றுகிறது.

ஒரு verb அருகிலேயே NOT என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடிந்தால் அது auxiliary verb. இல்லையேல் main verb.

Cannot வரும். Write not வராது. Do not வரும். See not வராது. (கவிதைகளில் எப்படி வேண்டு மானாலும் வரலாம், அதை விடுங்கள்).

பலவித இலக்கணச் சிக்கல்களை நீக்கிவிட்டு எளிமையாகச் சொல்வ தென்றால் Did என்ற auxiliary verb-ஐத் தொடர்வது infinitive ஆகத்தான் இருக்கும். Past tense verb அல்ல.

(go, come, read, write, stand, take, give, run போன்ற அடிப்படையான verbs ஆக நாம் கருதுபவற்றை infinitive என்பார்கள். இவற்றை present tense verb என்று நாம் கருதுவது வழக்கம்).

அதாவது did என்ற வார்த்தையைத் தொடர்ந்து come, go, write, stand போன்றவைதான் வரும். இந்த ஒரே வாக்கியத்தை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டாலும் போதும்.

எனவே Did he go?-தான். Did he went? அல்ல. He did not go-தான். He did not went அல்ல.

He did not write-தான். He did not wrote அல்ல.

I went to the house but did not enter.

எதிரொலி: Due to வின் பயன்பாடு

Due to வை phrase preposition மாதிரிப் பயன்படுத்தக்கூடாது. Due to என்பது predicative adjective. இதை is, was, are, were போன்ற ‘to be’ verb-க்கு பின்னால்தான் பயன்படுத்த வேண்டும்.

Due to rain the match was postponed என்றோ The match was postponed, due to the rain என்றோ சொல்லக்கூடாது. due to க்குப் பதிலாக Owing to பயன்படுத்த வேண்டும். Owing to the rain the match was postponed என்று சொல்ல வேண்டும்.

To be verb-க்குப் பின்னால் due to- வை பயன்படுத்த வேண்டும். Collapse ஐ பயன்படுத்த விரும்பினால் Noun-ஆக பயன்படுத்தி his collapse and death was due to heart attack என்று சொல்ல வேண்டும்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்

Owing to, Due to ஆகிய இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றே. Part of speechம் ஒன்றே. (Ref: Oxford dictionary).

ரத்தம் என்று நான் எழுதினால் ‘இரத்தம்’ என்று எழுதாதது பெரும்பிழை என்று ஒருவர் காட்டலாம்தான். ஒரு குறிப்பிட்ட நோக்கில் பார்க்கும்போது ‘ரத்தம்’ தவறுதான். சில மொழிப் பயன்பாடுகள் காலப்போக்கில் மாற்றங்கள் கண்டு நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அப்படித்தான் due to பயன்பாடும். Because of என்பது போலவே அது மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Keywords: ஆங்கில அறிவு, ஆங்கில இலக்கணம், மொழி அறிவு, ஆங்கிலம் அறிவோமே

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024