Sunday, August 30, 2015

சட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி தரத் தயார்: விஜயகாந்த் அதிரடி!

திருச்சி: "சட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி ஆகும் என்கிறார்கள். நான் அந்த பணத்தை தருகிறேன். நிகழ்வை ஒளிபரப்பச் சொல்லுங்கள். அப்போது சட்டசபைக்கு போக தயாராக உள்ளேன்!" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, 'மக்களுக்காக மக்கள் பணி' என அறிவித்து, அந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக திருச்சி, கரூர் மாவட்டங்களில் நடந்த நிகழ்சிகளில் கலந்து கொண்டார் விஜயகாந்த்.

நேற்றிரவு கரூரை அடுத்த தரகம்பட்டியில் 'மக்களுக்காக மக்கள் பணி' திட்டத்தின் கீழ் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் கே.வி.தங்கவேல் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில்,  விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், "சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என கடந்த 2001-ல் நான் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோதே கோரிக்கை விடுத்தேன். அதை இப்போது, ஜெயலலிதா 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்றால், ஓட்டுக்காகவே சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். அடுத்து அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வர இந்த விஜயகாந்த் விடமாட்டான்.
 
கரூர் மாவட்டம் புகளூரில் தமிழ்நாடு காகித ஆலை உள்ளது. இதில் 800 பேர் அதிகாரிகள் என்றால் 700 பேர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கடந்த தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். தற்போது உங்கள் ஆட்சியில் அந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தீர்களா?. மக்களுக்கு நான் என்றும் துரோகம் செய்ய மாட்டேன். அதிமுக கூட்டணியில் இருந்தபோது பால் விலை, பேருந்து கட்டணம் உயர்ந்ததை தட்டிக்கேட்டேன். அதை பொறுக்காத ஜெயலலிதா, என் மீது அவதூறுகளை பரப்பினார். இதனால்தான் அந்தக் கூட்டணியில் இருந்து விலக நேரிட்டது.

தி.மு.க. என்று ஒரு கட்சி இருக்கக்கூடாது என அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தேன். மக்கள் தகுந்த பாடம் புகட்டினால் இரண்டு கட்சிகளுமே இல்லாமல் போய் விடும். மக்களுக்கு இலவசமாக பொருட்கள் கொடுப்பதாக ஆளுங்கட்சியினர் சொல்கிறார்கள். இலவசமாக கொடுக்கும் அனைத்தும் பொதுமக்களாகிய உங்கள் பணம்.  எத்தனை இலவசங்கள் அறிவித்தாலும் இனி யாரும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடமாட்டார்கள். மக்களுக்காக விஜயகாந்த் வாழ்ந்தான் என சரித்திரம் பேச வேண்டும். எந்த இடத்திலும் நான் யாரையும் கண்டு பயப்பட மாட்டேன். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான நானும் இல்லை. தி.மு.க.வும் இல்லை. நான் சட்டசபைக்கு போகவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அங்கு நடப்பது என்ன? ஜெயலலிதாவை புகழும் ஒரு இடமாகவே உள்ளது. அதனால்தான் சட்டசபை நிகழ்வுகளை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்கிறேன்.

சட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி ஆகும் என்கிறார்கள். நான் அந்த பணத்தை தருகிறேன். நிகழ்வை ஒளிபரப்பச் சொல்லுங்கள். அப்போது நான் சட்டசபைக்கு போக தயாராக உள்ளேன். சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 'விவசாயிகள் யாரும் தற்கொலை செய்யவில்லை' என கூறுகிறார்.  ஆனால் ஜெயலலிதா 3 பேர் மட்டும் தற்கொலை செய்ததாக கூறுகிறார். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், நீங்கள் அனைவரும் உத்தமர்தானா?. மக்களுக்கு துரோகம் செய்யும் யாரையும் விடமாட்டேன்.

இடைத்தேர்தலில், ஜெயிக்கபோவது ஆளுங்கட்சியினர்தான். அதனால்தான் நாங்கள் போட்டியிடவில்லை. இன்னும் 6 மாதத்தில் நடக்கபோகும் தேர்தலில் நீங்கள் டெபாசிட் இழக்க போகிறீர்கள். டெபாசிட் இழக்க வைப்பது இளைஞர்களாகிய உங்களின் கடமை.
என் மீது போடப்படும் வழக்குகளை பற்றி பயப்பட மாட்டேன். தேர்தலின்போது மோடியா? லேடியா என பேசினார்கள். இப்போது மோடி வென்றதும் ஜெயலலிதா ஓடோடி செல்கிறார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போலீஸ் நிலையத்துக்கு செல்வதற்கு முன்பாகவே அவரை தாக்குவதற்காக செருப்பு, முட்டைகளை தயாராக வைத்திருக்கிறார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் மிலிட்டரி கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்கிறார்கள். அவர்களை தூண்டி விடுவதே ஜெயலலிதாதான். இவர்தான் தமிழகமே மதுஒழிக்க போராடியபோது அந்த போராட்டத்தை திசை திருப்பியவர். மதுவை ஒழிக்கப் போராடிய காந்தியவாதி சசிபெருமாளின் சாவில் மர்மம் உள்ளது. அந்த மர்மத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்" என்றார்.

-சி.ஆனந்தகுமார்
 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024