Monday, August 31, 2015

காரோட்டிக்கு பாராட்டுவிழா எடுத்த கலைமேதை என்.எஸ்.கிருஷ்ணன்!..vikatan

950 களின் மத்தியில் பிரம்மாண்டமாக நடந்தது அந்த விழா. விழாவில் பங்குபெற்றோர் அந்நாளைய பிரபல நட்சத்திரங்கள். அந்த விழாவை எடுத்து நடத்தியதும், அந்நாளில் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நட்சத்திரம்தான். ஆனால் இத்தனை அம்சங்களுடன் நடந்த அந்த விழாவின் நாயகன், பிரபல நட்சத்திரமோ, பிரபலமான பிரமுகரோ அல்ல: ஒரு சாதாரண கார் ஓட்டுநர். 
தனக்கு கார் ஓட்டிய ஒரு ஊழியருக்கு பாராட்டு விழா எடுத்த அந்த மனிதர் வேறு யாருமல்ல; “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர்தான்” என மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட  என்.எஸ். கிருஷ்ணன்தான் அது!
அவரது நினைவுநாள் இன்று...

நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில், 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை, தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!

வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணர் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தினார். பிறகு, நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம். பின்னாளில் நாடகங்களில் நடித்துவந்தார். ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் எஸ்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம். ஆனால், 'சதிலீலாவதி'யை முந்திக்கொண்டு  அவரது 2 வது படமான 'மேனகா' வெளிவந்தது. 

மேனகாவின் வெற்றியால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவை மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களான பி.யு சின்னப்பா, தியாகராஜபாகவதர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரையுலகில் புகழடைந்தபின், தானே சொந்தமாக தனது பாத்திரத்தன்மையை வடித்து, அதை படங்களில் பயன்படுத்தினார் கலைவாணர்.
திரைப்படத் துறையில் பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெறுமனே சிரிக்க மட்டுமின்றி, சிந்திக்க வைக்கக்கூடியதாகவும், மேதமையாக இருந்தது அவரது நகைச்சுவை
காட்சிகள். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
'வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு, ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறவிடவே, வழிச் செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசியை தீர்த்தார் கலைவாணர். அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது. மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். கலைவாணர்- மதுரம் ஜோடி திரையுலகில் பெரிதும் பேசப்பட்ட ஜோடி.
நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல், அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. 

என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே,  'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம், சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவரது மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார். 

ஒருமுறை என்.எஸ்.கே  ரஷ்யப் பயணம் மேற்கொண்டார். அதுபற்றி நிருபர்கள் கேட்க, ' ரஷ்யாவில் அக்ரஹாரமும் இல்லை...சேரியும் இல்லை' என்று நறுக் என்று பதில் அளித்தார்.
அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். தனது படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என அவர் நகைச்சுவையாகவும், அதே சமயம் தீர்க்க சிந்தனையோடும் காட்சிகளை அமைத்தார். ஆச்சர்யமாக அத்தனையும் நடந்தேறியது. கலைவாணரின் தீர்க்க சிந்தனையை மக்கள் போற்றினர். 

திமுக மீதும், அதன் தலைவர்கள் மீதும் அன்பு கொண்டவராக இருந்தாலும் எக்காலத்திலும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்குரியவராக கலைவாணர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. எல்லா கட்சியிலும் அவரது அன்புக்குரியவர் இருந்தார்கள். “கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன். அவன் மக்களின் ரசிகன்” என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

'மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி, அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்.
கலைவாணர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரது வாழ்க்கையை முடக்கிப்போட்டது ஒரு வழக்கு. 
'இந்து நேசன்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும்         தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாக கூறி இருவரும் கைதானார்கள். பல்வேறு மாதங்களுக்கு பின், லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப்பின்னும் விடுவிடுவென படங்களில் நடிக்கத் துவங்கினார் கலைவாணர்.

'உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்த அன்று காருக்கு பெட்ரோல் போட்டதுக் கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார். - கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போதெல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பாராம்.  

சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில்தான் அவருக்கு 'கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே.சம்பந்தம் முதலியார்.
மேதைமையான அவரது நகைச்சுவையால் கலைவாணர், தென்னாட்டு சார்லி சாப்ளின் என அழைக்கப் பட்டார். ஆனால் இதற்கு கலைவாணரின் கருத்து என்ன தெரியுமா? "என்னைச் சிலர் தமிழ்நாடு சார்லி சாப்ளின்னு சொல்றாங்க. சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!" என்றார் என்.எஸ்.கே.தன்னடக்கமாக. 

தன்னைத் தேடி வருபவர்களின் துயரங்களை  கேட்டு, அவர்களுக்கு உதவுவதில் அக்கறை காட்டும் மனிதாபிமானி என்.எஸ். கே. ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது இறுதிநாட்களில், அவரிடம் வேலை செய்த ஒருவர், 'தன் மகளுக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது ஒரு விலையுயர்ந்த வெள்ளி கூஜா. அதை எடுத்துக்கொடுத்து, 'என்னிடம் பணமாக கொடுக்க எதுவும் இல்லை. இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்' என்றார். கண்ணீர் பீறிட்டது அந்த ஊழியரிடம் இருந்து. 

தன் மனைவி மதுரத்திடம், “எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்று கூறும் நிலை வந்தால், நான் உயிரோடு இருக்கக் கூடாது!' என்று அடிக்கடி கூறுவாராம். 

இவரால் சினிமாவில் அடையாளம் காணப்பட்டவர்கள் பலர். குமரி மாவட்டம் இப்போதைய கேரளாவோடு இருக்கும் போது,  தமிழர்கள் தாய் தமிழகத்தோடு இணைய வேண்டும் என போராடிய தமிழ் உணர்வாளர்களுக்கு ஆதரவாக நின்றவர்.
தினமும் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம்.  ஏதோதோ காரணம் சொல்லி பணம் கேட்க, இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுகிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, ' ஏமாத்தி அவன் என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத் தானே சாப்பிடப் போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம். அத்தனை மனிதாபிமானி என்.எஸ்.கே

காந்தியை மிகவும் நேசித்த கலைவாணர்,  நாகர்கோவில் நகராட்சி பூங்காவில்  தனது  சொந்த செலவில் காந்தி நினைவுத் தூணை எழுப்பி அதில் கவிமணியின் கவிதைகளை இடம்பெறச் செய்தார். இது இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான கலைவாணர், அதற்காக தன் சொந்த நிலத்தையும் வழங்கியவர். 

சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா. கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின. நகைச்சுவை மேதையான அவர், அதையும் தன் பாணியில்,  'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே!" என்றாராம்.
ஒரு கட்டத்தில் கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார் என்.எஸ்.கே. ஆனால் தொடர்ந்து உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-வது வயதில் காலமானார். தன் நகைச்சுவையால் தமிழகத்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை மேதை தமிழர்களை ஒரே முறை தன் இறப்பின் மூலம் அழவைத்தார்.

உலகிலேயே  நகைச்சுவை நடிகர்களில் இருவருக்கு மட்டும்தான் சிலை அமைக்கப்பட்ட பெருமை உண்டு. ஒருவர் சார்லின் சாப்ளின், மற்றொருவர்  கலைவாணர். 

- த.ராம்
படங்கள் உதவி: என்.எஸ். கே. நல்லதம்பி

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...