Saturday, August 22, 2015

சினிமா எடுத்துப் பார் 22- எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல்!



ஏவி.எம் எடுக்கத் திட்டமிட்ட அந்த பிரம்மாண்டமான படம் ‘அன்பே வா’. அந்தப் படத்தில் நடித்த பிரபல கதாநாயகர் என்றும் புரட்சி தலைவராக திகழும் எம்.ஜி.ஆர் அவர்கள். திரை உலகம் மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் புகழோங்கி முதலமைச் சராக அரசாண்டவர். திரைப்படங்களில் கதையிலும், காட்சியிலும், பாடல்களிலும் மக்களுக்கு நல்ல கருத்துகளை சொன் னவர். பிறருக்கு உதவிகளைச் செய்து மனித நேயத்தோடு வாழ்ந்து காட்டியவர்.

இப்படி படங்களில் நடித்ததோடு வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர். அதனால் மக்களுக்கு குறிப்பாக பெண் களுக்கு அவர் மீது அன்பும், பாசமும் ஏற்பட்டது. உண்மையாக வாழ்ந்து மக் களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர். அவர் நம்மை விட்டுச் சென்று பல ஆண்டு கள் ஆனாலும், அவர் பெயரைச் சொல் லித்தான் இன்னும் ஓட்டுக் கேட்கிறார் கள். ஏவி.எம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிக்க ஒப்பந்தமானது எல்லோ ருக்கும் மிக மகிழ்ச்சியைத் தந்தது.

எம்.ஜிஆரின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் திரு லோகசந்தர். ‘அன்பே வா’ திரைக் கதையை எம்.ஜி.ஆரை மனதில் வைத்து திருலோகசந்தர் எழுதியிருந்தார். திரைத் துறைக்குப் பெருமை சேர்த்த பல படங் களுக்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸ் இந்தப் படத்தின் வசனகர்த்தா. கதையை எம்.ஜி.ஆரிடம் சொல்வதற்காக அவரு டைய ராமாவரம் தோட்டத்துக்கு ஏவி.எம். சரவணன் சார் தலைமையில் இயக்குநர் திருலோகசந்தரோடு புறப்பட்டோம்.

எங்களைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலில் சாப்பிட்டுட்டு வாங்க பேசலாம்’’ என்றார். அது அவரின் விருந் தோம்பல். உணவு உபசரிப்புக்குப் பிறகு, திருலோகசந்தர் திரைக்கதையைக் கூற எம்.ஜி.ஆர் அவர்கள் ஆர்வமாகக் கேட்டார். ‘‘இதுவரை நான் நடித்து வந்த பார்முலாவுக்குள் இந்தக் கதையை அடக்க முடியாது. வித்தியாசமாக இருக் கிறது. மாறுபட்ட கதைக் களம்.

என்னை யூத்ஃபுல் கதாபாத்திரமாக உருவாக்கி இருக்கிறீர்கள். இது வழக்கமான எம்.ஜி.ஆர் படம் அல்ல; இயக்குநர் திருலோகசந்தர் படம்’’ பெருமையோடு சொன்ன எம்.ஜி.ஆர், ’’படத்தை திரு லோகசந்தர் இயக்கும் விதத்தில்தான் இந்தப் படத்தின் வெற்றி அமையும். ஏவி.எம்மின் ‘அன்பே வா’படத்தில் நடிப் பதைப் பெருமையாக கருதுகிறேன்’’ என்று முழு மனதுடன் ஒப்புக்கொண்டார்.

படத்தின் ஒருங்கிணைப்பு வேலை களை ஏவி.எம்.சரவணன் சார் கவனித்துக்கொண்டார். சரவணன் சார் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிக்கும் படப்பிடிப்புகளுக்குப் போய் எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசுவது அவர் பழக்கம். சரவணன் சாரை அவரது வீட்டில் சரவன் என்றே அழைப்பார்கள். எம்.ஜி.ஆரும் சரவன் என்றே அழைப் பார். ‘அன்பே வா’ படத்தில் நடிக்க வந்ததும் சரவணன் சாரை எம்.ஜி.ஆர் செல்லமாக ‘முதலாளி’ என்றழைக்க ஆரம்பித்தார்.

‘அன்பே வா’ படத்துக்குத் தொடக்க விழா செப்டம்பர் மாதத்தில் நடந்தது. சரவணன் சார் படத்தை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டார். இதை இயக்குநர் திருலோகசந்தரிடம் கூறியதும், ‘‘கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முழு ஸ்கிரிப்டாக தயாராக இருக்கிறது. அத னால் படப்பிடிப்பை விரைவாக முடிக் கலாம்’’ என்று நம்பிக்கைக் கொடுத்தார். சரவணன் சார் தன் விருப்பத்தை அப்புச்சியிடம் சொன்னதும் அவருக்கும் ஆர்வம் அதிகமானது. ‘‘ஆனால் எம்.ஜி.ஆர் கால்ஷீட்டை எப்படி நமக்கு மொத்தமாக ஒதுக்கித் தருவார்?’’ என்று கேட்டார். சரவணன் சார், ‘‘எம்.ஜி.ஆர் அவர்களிடமே கேட்டுப் பார்த்துவிடுகிறேன்’’ என்று கூறினார்.

என்னிடம் ராமாவரம் தோட்டத்துக்கு போன் போட்டு, எம்.ஜி.ஆர் அவர் களிடம் ‘தான் அவரை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் எப்போது வரலாம்' என்றும் கேட்கச் சொன்னார் சரவணன் சார். நான் கேட்டேன். அதற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் ‘‘கால்ஷீட் தேதி விஷயங்கள் என்றால் நீங்கள் மட்டும் வாங்க. வேறு முக்கியமான விஷயம் என்றால் முதலாளியைக் கூட்டிட்டு வாங்க’’ என்றார். தோட்டத்துக்குப் புறப் பட்டோம். சரவணன் சார், எம்.ஜி.ஆரிடம் ‘‘ஒரு முக்கியமான விஷயம். நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். அது முடிந் தால் சந்தோஷம். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் வருத்தப்பட மாட்டோம்’’ என்றார்.

‘‘பில்டப் எதுக்கு முதலாளி. என்ன விஷயம்னு சொல்லுங்க’’ என்றார் எம்.ஜி.ஆர்.

‘‘அன்பே வா படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம்னு ஒரு ஆசை.’’

‘‘அப்படி ஒரு ஆசையா? சத்யா மூவிஸ்ல சாணக்கியா இயக்கத்தில் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் வேலைகள் நடந்துட்டிருக்கு. அதைப் பொங்கலுக்கு வெளியிடலாம்னு திட்டமிட்டிருக்காங்க’’ என்று சொல்லிவிட்டு, ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து சரவணன் சாருடைய விருப்பத்தைக் கூறினார். ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் செட்டியார் மீதும், சரவணன் சார் மீதும் தனி பிரியம் கொண்டவர். அதனால் அவருடைய படத்தை தள்ளி வைத்துக்கொள்ள சம் மதித்தார். சரவணன் சார் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி கூறினார்.

சரவணன் சார் என்னிடம் ‘‘முத்துராமன் மொத்தமா எவ்வளவு நாட்கள் கால்ஷீட் தேவைப்படும்னு சொல்லுங்க?’’ என்றார். நான் ‘’70 முதல் 80 நாட்கள் தேவைப்படும்’’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் அவர்கள், ‘‘முதலாளி அதெல்லாம் விடுங்க. உங்க ஆசைப்படி ‘அன்பே வா’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்’’ என்றார். அப்படி சொன்னதோடு மட்டுமின்றி விரைந்து படத்தை முடிக்க பேருதவியாக இருந்தார். எங்கள் பணிகளையும் வேகப்படுத்தினார். இரவு, பகலாக வேலை பார்த்து படத்தின் நிர்வாக இயக்குநராகவே எம்.ஜி.ஆர். மாறிவிட்டார். பட வேலைகளில் அப்படி ஓர் ஈடுபாட்டுடன் உழைத்தார்.

‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி, அசோகன், நாகேஷ், மனோரமா டி.ஆர்.ராமசந்திரன், முத்துலட்சுமி, இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே பணிபுரிந்தது. ஏவி.எம் ஸ்டுடியோவில் எல்லா அரங்குகளிலும் பெரிய பெரிய செட்டுகள் போடப்பட்டன. அவுட்டோர் ஷூட்டிங் ஊட்டி, சிம்லா என முடிவானது. ஆகமொத்தத்தில் ‘அன்பே வா’ படத்தின் படப்பிடிப்பு நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் ஒரு தனி வரலாறு.

- இன்னும் படம் பார்ப்போம்...

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024