கேட்கச் சகிக்காத ஓசையும், பார்க்கச் சகிக்காத காட்சியும் எது என்று யாராவது கேட்டால் இப்படி பதில் சொல்லலாம் - குழந்தையின் பிஞ்சு மேனியில் விழுகின்ற அடிச் சப்தமும், அதைத் தொடர்ந்து அந்தக் குழந்தை மலங்க மலங்க விழித்து அழத் தொடங்கும் காட்சியும் என்று.
மக்களில் பலருடைய கோபதாபங்களுக்கும் வடிகால்களாக இருப்பவை குழந்தைகள்தான் என்றால், அது மிகைக் கூற்றாகாது.
சாப்பாடு சரியில்லாதது, எதிர்பாராத நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவது, பிடிக்க வேண்டிய பேருந்தையோ, ரயில் வண்டியையோ தவற விடுவது, பிடித்த தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க முடியாமல் போவது என்று காரணம் எதுவானாலும் சரி, திட்டுகளையும், அடிகளையும் வாங்குவது அவரவர் வீட்டுக் குழந்தைகள்தான் என்றாகி விட்டது.
ஒரு தனியார் மருத்துவமனையில் கண்ட காட்சி இது. குறும்புத்தனத்துடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு மூன்று வயதுக் குழந்தை மருத்துவர் அறைக்கு வெளியே விடப்பட்டிருந்த காலணிக்குள் தனது கால்களை ஆர்வத்துடன் நுழைத்துப் பார்த்தது.
அடுத்த நொடி, குழந்தையின் முதுகில் அதன் தந்தை ஓர் அறை விட, வலி தாங்காமல் அந்தக் குழந்தை அழுது துடிக்க, சுற்றி இருந்த அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அடுத்தவர் காலணியை அணிந்து கொள்வது சரியில்லை என்று சொல்லிக் கொடுக்கக்கூடப் பொறுமையில்லாத தகப்பனின் ஆத்திரம் அந்தக் குழந்தையின் முதுகைப் பழுக்க வைத்து விட்டது.
மருத்துவமனைதான் என்றில்லை, பேருந்து, ரயில் பயணம், திருக்கோயில்களின் கூட்ட நெரிசல், ரேஷன் கடை அலைக்கழிப்புகள், உறவு வீட்டு நிகழ்வுகள் போன்ற பல சந்தர்ப்பங்களிலும் பெற்றோர்களின் மனக் குமுறல்களுக்கான வடிகால்களாக அமைவது குழந்தைகள்தான்.
பெற்றோர்கள் எதிர்பார்ப்புக்கேற்ப படிக்க வேண்டும், நிறைய மதிப்பெண்கள் பெற வேண்டும், விளையாடாமல் இருக்க வேண்டும், சொல்லும் வேலைகளைச் செய்ய வேண்டும், இவற்றைச் செய்யத் தவறினால் அடி உதைகளை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இன்றும் பல குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இருக்கத்தான் செய்கின்றன.
டெஸ்டுல தொண்ணூறு மார்க்குக்கு குறைந்தால் பயலே பின்னி எடுத்துடுவேன் என்று மீசை முறுக்கும் தகப்பன்களையும், என் பெண்ணை இன்னும் கொஞ்ச நேரம் டியூஷன்ல உக்கார வெச்சுக் கையை ஒடிங்க டீச்சர் என்று கான்வென்ட் ஆசிரியையிடம் கோரிக்கை வைக்கும் தாய்மார்களையும் தெருவுக்குத் தெரு பார்க்கத்தான் செய்கிறோம்.
இப்படிப்பட்ட பெற்றோர்களுக்காகவே சில காலம் கடந்த சொலவடைகள் தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொண்டு நடமாடுகின்றன.
"அடியாத மாடு படியாது, அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்பனவற்றைக் கூறியே குழந்தைகளின் மீதான பெற்றோரின் வன்முறைக்கு இங்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது.
மதிப்பெண் என்ற ஒற்றை மந்திரச் சொல்லை வெற்றி கொள்வதற்காக நமது கல்விச் சாலைகளில் வதைபடும் சிறுவர்களின் நிலை சொல்லி முடியாதது.
மாணவர்களை உடல்ரீதியாகத் தண்டிக்கக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் பல இருந்தாலும், அவர்கள் தத்தமது ஆசிரியப் பெருமக்களால் தண்டிக்கப்படுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன.
கல்விக் கட்டணத்தைச் செலுத்த இயலாத பெற்றோர்களுடைய இயலாமைக்கு அவர்களின் குழந்தைகளை உடல், மனரீதியாகத் தண்டிக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் இன்று வரை எந்தச் சட்ட, திட்டங்களுக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை.
அதிகச் செல்லம் கொடுப்பதால் பிடிவாத குணம், அடங்க மறுக்கும் தன்மை கொண்ட குழந்தைகள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களைச் சமாளிப்பது என்பது பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு ஒரு பெரும் பிரச்னைதான்.
அதுபோன்ற குழந்தைகளைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்தக் குழந்தைகளையும் அடித்தும், அடக்கியும்தான் வளர்க்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.
"செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' என்பது திருவள்ளுவரின் அறிவுரையாகும். பெற்றவர்களாயினும் சரி, ஆசிரியர்கள் உள்பட மற்றவர்களாயினும் சரி தத்தமது கோபதாபங்களைத் தங்களைவிட வலியவர்களிடம் காட்ட முடியாதபோது, தங்களை ஒருபோதும் எதிர்க்க முடியாத குழந்தைகளிடம் காட்டுவது எந்தவிதத்தில் சரியாக இருக்க முடியும்.
தங்களை யார் அடித்தாலும் சிறிது நேரத்தில் அதை மறந்துவிட்டு, அடித்தவர்களிடமே மீண்டும் வந்து அவர்கள் காலைக் கட்டிகொண்டு சிரிக்கும் குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற முகங்களை ஒருமுறை நினைத்துப் பார்த்தால், மீண்டும் ஒருமுறை அவர்களை அடிக்கக் கை நீளுமா, மனம்தான் வருமா?
அது மட்டுமன்று, அடி உதைகளுக்குப் பழகிப் போகும் குழந்தைகள் மனதில் நாளடைவில் பயம் விட்டுப் போகும். அடிதானே, வாங்கி விட்டுப் போவோம் என்ற மனோநிலைக்கு அவை வந்துவிடும் சாத்தியம் உண்டு. அவர்களே பிற்காலத்தில் வன்முறையாளர்களாய் மாறுகின்ற அபாயத்துக்கும் சாத்தியம் இருக்கிறது.
நமது சமுதாயத்தில் ஏற்கெனவே வன்முறையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை போதாதா, நாம் வேறு புதிய புதிய வன்முறையாளர்களை உற்பத்தி செய்வானேன்?.
எந்த நியாயமான காரணமானாலும் சரி, குழந்தைகளின் மேல் பெற்றோர்கள் வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம். எந்தப் பிரச்னைக்கும் வன்முறை என்பது தீர்வாகாது.
அதிலும், குழந்தைகளின் மீதான வன்முறை என்பது ஒரு தீர்வு அன்று, அதுவே ஒரு சமுதாயப் பிரச்னையாகும்.
No comments:
Post a Comment