Monday, August 10, 2015

திக்குத் தெரியாமல் தவித்த ஸ்வாதி...திடீரென்று கிடைத்த உதவி... நடைபயிற்சி நண்பர்களுக்கு நன்றி!

ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும் படபடத்துக் கொண்டிருக்கிறது! 

'கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர வேண்டிய ஏழைக் குடும்பத்து பெண் ஸ்வாதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கோவைக்கு விமானம் மூலம் சில நல்ல உள்ளங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வழியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்' என்பதுதான் அந்தச் செய்தி.

இதைப் படித்த எல்லோருமே... அந்த நல்ல உள்ளங்களைப் பாராட்டித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள்... அவர்கள் யாராக இருக்கும் என்கிற கேள்வியை எழுப்பியபடியே! நாமும் மனதில் பாராட்டிக் கொண்டே தேடுதலில் இறங்கினோம்... கிடைத்தார் அந்த நல்ல உள்ளங்களில் ஒருவரான சரவணன்!

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் ஒரே மகள் சுவாதி. படித்து வேளாண் விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது எதிர்கால ஆசை. கணவன் இல்லாத நிலையிலும் கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்தார் தங்கப்பொண்ணு. ப்ளஸ்-டூவில் 1,076 மதிப்பெண்கள் எடுத்திருந்த இவரின் விண்ணப்பம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. ஏற்கெனவே தேர்வுபெற்ற மாணவர்கள் சிலர், வேளாண்மைக் கல்வியை விட்டு வேறு படிப்புகளுக்குச் சென்று விட்டதால், ஸ்வாதிக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடக்கும் இறுதிகட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள வருமாறு மின்னஞ்சல் (இமெயில்) அழைப்புக் கடிதம் ஒன்றை ஸ்வாதிக்கு அனுப்பியது வேளாண்மை பல்கலைக்கழகம். அண்ணா கலையரங்கம் என்று இடம் பெற்றிருந்த வாசகத்தை அண்ணா பல்கலைக்கழகம் என்று தவறாக புரிந்துகொண்ட மாணவி ஸ்வாதி, அம்மாவுடன் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதேநேரம் வந்தடைந்தார். ஆனால் அவர் செல்லவேண்டியது கோவை அண்ணா கலையரங்கிற்கு; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அல்ல என தெரியவந்தபோது அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றது மாணவியின் குடும்பம். 

அப்போதுதான் அவர்களுக்கு கைகொடுத்து பேருதவி செய்திருக்கிறார் எம்.சரவணன். டெக் மஹேந்திரா தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் அவரை பாராட்டிவிட்டு, பேசினோம். 

"என்னோட சொந்த ஊரு சேலம் மாவட்டம், சங்ககிரி பக்கத்தில் உள்ள வைகுந்தம். பரம்பரை விவசாய குடும்பம். இதே அண்ணா பல்கலைக்கழகத்தில் படிச்சு முடிச்சு, சென்னையில பல வருஷமா வேலை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் அதிகாலை 6 மணிக்கே எழுந்து நடைபயிற்சி போகும் வழக்கம் உண்டு. நான் படிச்ச அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்தான் நடைபயிற்சி. அங்கு  நடைபயிற்சி போறவங்க எல்லாம் சேர்ந்து குழு அமைச்சிருக்கோம். அதன் மூலமா ஹெல்த் உள்ளிட்ட பல விஷயங்களை பரிமாறிக்குவோம்.
ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபயிற்சி செல்லும் வழியில் சூட்கேஸ் வெச்சிட்டு ஒரு பொண்ணும், கூடவே ஒரு அம்மாவும் குழப்பத்துடனும் தவிப்புமாக நின்னிட்டிருந்ததை பார்த்தோம். மூணாவது சுற்று நடைபயிற்சி வரும்வரை வெள்ளந்தியா அவங்க ரெண்டு பேரும் நின்னுட்டிருந்ததைப் பார்த்தேன். கிராமத்து ஆளுங்க மாதிரி தெரியவே... என்ன ஏதோனு கிட்டபோய் விசாரிச்சோம்.

வேளாண்மை கல்லூரி கலந்தாய்வுக்கு வந்ததாக சொன்னாங்க. அது கோயம்புத்தூர்லதானே நடக்கும். ஒருவேளை சென்னையில் ஏதாவது உறுப்புக் கல்லூரி இருக்கோனு சந்தேகத்தில் வேளாண்மைப் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தரும் எங்க குடும்ப நண்பருமான முருகேசபூபதியை தொடர்பு கொண்டு கேட்டேன். 

‘கோவையில்தான் நடக்கிறது' னு சந்தேகத்தை நிவர்த்தி செய்தார். பிறகு, அந்தப் பெண்ணுக்கு வந்த மின்னஞ்சல் அழைப்புக் கடிதத்தை திறந்து பார்த்தப்பதான்... விஷயம் புரிஞ்சுது.

‘தவறா புரிஞ்சுகிட்டு, பெரிய தப்பை பண்ணீட்டீங்களேம்மா... ஒரு வருஷ படிப்பே போயிடுமே. இன்னும் கொஞ்ச நேரத்துல கோயம்புத்தூர்ல கலந்தாய்வு நடக்கப்போகுது... நீங்க இங்க நின்னுட்டிருக்கீங்களே' னு கண்டிச்சாலும், அந்த விஷயத்தை அப்படியே விட எங்களுக்கு மனசு வரலை. எப்படியாவது அவங்க ரெண்டு பேரையும் கோவைக்கு அனுப்பனும்னு நண்பர்கள் கலந்து பேசினோம். 

பல்கலைக்கழக தொலைபேசிக்கு போன் போட்டப்ப, யாரும் எடுக்கல. அது அலுவலக நேரத்தில் மட்டுமே செயல்படும் தொலைபேசி. அடுத்த முயற்சியாக முன்னாள் துணைவேந்தர்கிட்ட பேசி, அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோட எண்ணை வாங்கி பேசினோம். அவர், சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்துகிட்ட நிலைமையை சொல்லிப் பேசியதில் நாள் தள்ளிவைக்க முடியாது என்றும், நேரத்தை வேண்டுமானால் 8.30 என்று இருந்த கலந்தாய்வை இந்த மாணவிக்கு மட்டும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கலாம்னு பதில் கிடைச்சுது.

உடனே நடைபயிற்சி நண்பர்கள் நாங்கள்லாம் கலந்துபேசி கார் மூலம் விமான நிலையம் அனுப்பி, விமான டிக்கெட்டை எடுத்துக் கொடுத்து, முதல் தடவையா விமானம் ஏறுறதால அதுக்கான ஆலோசனைகளையும் கூறி அனுப்பினோம். சரியாக 11.30 மணிக்கு கோவை விமான நிலையத்தில், எங்க ஏற்பாட்டின்படி தயாரா இருந்த பல்கலைக்கழக வாகனத்தில் ஏறிப்போய், பி.டெக் உணவு தொழில்நுட்பவியல் படிப்பில் இடம் வாங்கிடுச்சு அந்தப் பொண்ணு ஸ்வாதி" என்று நடந்ததை தனக்கே அப்படி ஒரு உதவி கிடைத்த மகிழ்வோடு பேசினார் சரவணன். 

உதவி கேட்கக்கூட தயங்கி நின்ற சூழலில் வலியச்சென்று அவர்களுக்கு பேருதவி செய்த சரவணன் மற்றும் அவருடைய நடைபயிற்சி நண்பர்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருக்கிறது இப்போது.
இதுகுறித்து வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் வேலாயுதம், "பல்கலைக்கழகம் அனுப்பிய மின்னஞ்சலைக்கூட முழுமையாக படிக்க முடியாததால் ஒரு வருட படிப்போ பறிபோக இருந்த நிலையில், அதைக் கைவசப்படுத்திக் கொடுத்த... சரவணன் உள்ளிட்டோருக்கு மக்கள் அனைவருமே நன்றி சொல்லலாம். கிராமத்து மாணவி ஒருவரின் அறியாமையை புரிந்து, கலந்தாய்வை காலநீட்டிப்பு செய்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் நன்றிகள். 

அதேசமயம், பல்கலைக்கழகம் இதுபோன்ற அழைப்புக் கடிதங்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் சேர்த்தே அனுப்பினால், இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்க்கலாம்" என்று வேண்டுகோளும் வைத்தார்.

அதுவும் சரிதானே!

-ஜி.பழனிச்சாமி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024