Monday, August 10, 2015

ஆயிரம் தொழில் செய்திடுவீரே!

கால மாற்றத்துக்கு ஏற்ப, நமது பழக்கவழக்கங்களும் மாறிவிட்டன. கூட்டுக் குடும்பங்கள் தனித்தனிக் குடும்பங்களாக உருமாறிவிட்டன. குலத் தொழில் முறை அழிந்து வருகிறது.
"கால் காசுன்னாலும் கவர்மெண்ட் காசு வாங்கணும்னு' சொல்வார்கள். அது இப்போது குதிரைக் கொம்புதான். 100 காலிப் பணியிடத்துக்கு பல்லாயிரம் பேர் போட்டியிடுகின்றனர்.
வாழ்க்கைச் சக்கரத்தைச் சுழற்ற ஒவ்வொருவரும் ஒரு தொழிலையோ, ஒரு பணியையோ செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது குழந்தைப் பருவத்திலேயே, எதிர்காலத்தில் என்ன பதவியை அடைய வேண்டும் என்பதைப் பெற்றோர் அக் குழந்தையின் மனதில் பதிய வைக்
கின்றனர்.
இப்படி ஒவ்வொருவரும் தமது கனவை நனவாக்க முயற்சிக்கும்போது, இறுதியில் ஒரே பட்டியலில் லட்சக்கணக்கானோர் சேர்ந்து விடுகின்றனர். தேவையோ சில இடங்கள். விரும்புவோரோ பல ஆயிரம். இதில் சாமர்த்தியசாலிகள், திறமைசாலிகள் தமது கனவை நனவாக்கிக் கொள்கின்றனர். மீதமுள்ளோரின் கனவு பகல் கனவாகிறது. இந்த சமுதாயம் அவர்களுக்குச் சூட்டும் கூடுதல் பட்டம் "வேலையில்லா பட்டதாரி'.
வேலைவாய்ப்பு இல்லாததால், அவரது மனம் வேறு வழியை நாடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையை இழக்கிறார். சிந்தனைகள் மாறுகின்றன. இதில் சிலர் சமூக விரோதச் செயல்களில் இறங்கு
கின்றனர்.
2009-இல் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் 9.4 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருந்தனர் அல்லது தனது தகுதிக்கேற்ற வேலை அவர்களுக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011-இல் இது 10.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்துவந்த ஆண்டுகளிலும் இது ஏறுமுகமாகவே உள்ளது.
நாட்டின் மக்கள்தொகை சுமார் 127 கோடி. அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லை. பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஆலைகளில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில்களை விரிவுபடுத்த பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்கின்றனர். ஆனால், அவை உரிய காலத்தில் செயல்பாட்டுக்கு வருவதில்லை. அன்னிய முதலீடுகள் வருவதற்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள்.
வேலையில்லாத் திண்டாட்டம் என்பது வளர்ந்த நாடுகளிலும் உள்ளது. மக்கள்தொகை அதிகமுள்ள நம் நாட்டில் மனித ஆற்றல் கொட்டிக் கிடக்கிறது. அந்த ஆற்றலை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால், அது ஆபத்தில் முடியும்.
வீடுகளில் சோம்பிக் கிடக்கும் மனித ஆற்றலை முறையாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம். உள்ளது. 'An Idle mind is a Devil's Workshop' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அத்தகைய நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை, வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்து வருகிறது. மக்கள்தொகை பெருக்கமும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
தற்போது அரசு வேலையையோ அல்லது தனியார் நிறுவனத்தில் அதிக ஊதியம் கிடைக்கும் வேலையையோ ஓர் இளைஞர் எதிர்பார்த்திருக்கும் நிலையில், அந்த வேலை கிடைக்கும் வரை ஏதாவது ஒரு வேலையைச் செய்வோம் என்று செய்யத் தொடங்குகிறார். ஆனால், பலருக்கு கிடைத்த வேலையைச் செய்வோம் என்ற மனநிலை இன்னும் ஏற்படவில்லை.
தற்போது மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் பல்வேறு தொழில்களைச் செய்து, தங்களது வருமானத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர்.
நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 66 சதவீதம் பேர் 18 முதல் 35 வயது வரையில் உள்ளனர். தங்களது திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்று இவர்கள் மருகி வருகின்றனர். ஒரே துறையில் திறமையுள்ள அத்தகைய இளைஞர்கள் அந்தந்தப் பகுதியில் இணைந்து, முதலீடு செய்து, தொழில் நிறுவனங்களையோ, சேவை நிறுவனங்களையோ தொடங்கி, வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஏழ்மைக்கு வேலையில்லாத் திண்டாட்டமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. கிராமங்களில் இருந்து அனைவரும் நகரங்களுக்குப் படையெடுப்பதால், நகரங்களில் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அதனால், கிராமங்களில் விவசாய மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து, அதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொழில் வளம் நிறைந்திருக்கும். அதை முறையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டும் பட்டப் படிப்பு படித்து முடித்துவிட்டு வெளியே வருவோருக்கும், அவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்புக்கும் இடையே இடைவெளி அதிகமிருக்கிறது. இதைக் குறைக்க வேண்டும்.
உதாரணமாக, ஒரு பொறியியல் கல்லூரியில் இருந்து ஒரு குறிப்பிட்ட பாடத்தில் 300 பேர் படித்து முடித்து வெளியே வருகின்றனர் என்றால், அவர்களுக்கு அந்தக் கல்லூரி அமைந்திருக்கும் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்தி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.
தற்போது சென்னைக்கு அடுத்து, பிற நகரங்களான சேலம், கோவை, மதுரை, திருச்சி ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளில் பெரிய அளவிலான வளர்ச்சியை எட்டும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் கோவை நகரம் மட்டும் ரூ.25,000 கோடி முதலீட்டைப் பெறும் என்றும் கூறப்படுகிறது.
இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்திரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!
என்ற முண்டாசுக் கவியின் கனவை நனவாக்க இளைஞர்கள் சபதமேற்க வேண்டும். அக் கனவு நனவாகும் நாளே நன்னாள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024