Sunday, August 30, 2015

வெங்காய தட்டுப்பாடு மேலும் ஒரு மாதம் நீடிக்கும்!'

சென்னை: தற்போது நிலவி வரும் பெரிய வெங்காயத்தின் தட்டுப்பாடு இன்னும் ஒருமாதம் நீடிக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் சந்தைகளில் வெங்காயம் கிடைப்பதிலும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100க்கும், இன்னும் பல இடங்களில் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னைக்கு ஆந்திராவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு நிலவவில்லை என்றபோதிலும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 என்ற அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், இந்த விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் சின்ன வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது.

''இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் மழை குறைவு என்பதால் மகாராஷ்ட்ரா உள்பட பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விளைச்சல் குறைவாக உள்ளது. எனவே, மற்ற இடங்களுக்கு வரும் வெங்காயத்தின் அளவும் குறைந்திருக்கிறது. இதனால், பல மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

வழக்கமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 70 லாரிகளில் வெங்காயம் வரும். தற்போது 50 லாரிகளில் மட்டுமே வருகிறது. இந்த வெங்காய தட்டுப்பாடு இன்னும் ஒரு மாதம் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்கின்றனர் வெங்காய மொத்த வியாபாரிகள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024