Tuesday, April 12, 2016

எரிகிற வீட்டில்...!

எரிகிற வீட்டில்...!
By ஆசிரியர்
First Published : 11 April 2016 01:47 AM IST   DINAMANI

கேரள மாநிலம், பரவூர் அருகே உள்ள புற்றிங்கல் கோயில் திருவிழாவில் நேரிட்ட வெடிவிபத்தில் 106 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் மிகப்பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கோயில் தரைமட்டமாகிவிட்டது. பல நூறு பேர் தீக்காயம் அடைந்து கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கோயில் விழாவில் வழக்கமாக நடைபெறும் இரு குழுக்களுக்கு இடையேயான வாண வேடிக்கைப் போட்டிக்கு இந்த ஆண்டு காவல் துறை தடை விதித்தது என்றும், இதனால் கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதி இல்லாமலேயே வாண வேடிக்கை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காலம் காலமாக நடந்துவரும் இக்கோயில் வாண வேடிக்கை போட்டியை ஏன் காவல் துறை தடுத்தது என்பது புரியாத புதிர்.

தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளம் மற்றும் தமிழ்நாட்டில், கோயில் திருவிழாகளில் வாண வேடிக்கை என்பது விழாவுடன் பிரிக்க முடியாத மரபாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இத்தகைய வாண வேடிக்கை என்பது கோயில் விழாக் குழுவின் செலவாக அமையும். ஆனால் கேரளத்தில், பெரும்பாலும் அந்தக் கோயில் சார்புடைய கிராமத்தினர் தங்களுக்குள் வசூல் செய்து வாண வேடிக்கை நடத்துகிறார்கள்.

புற்றிங்கல் பகவதி அம்மன் கோயில் மட்டுமன்றி, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மாறா பகவதி அம்மன் கோயில் திருவிழாவிலும் வெடி விழா இரு கிராமத்தினருக்கு இடையே போட்டியுடன் நடத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது. எந்த கிராமத்தின் வெடிகள் அதிக சப்தத்துடன் வெடிக்கின்றன, வாணப்பூக்கள் எவ்வளவு அழகாக இருந்தன என்பதை வைத்து யாருடைய வெடிவிழா சிறப்பாக இருந்தது என்பதைத் தீர்மானிப்பார்கள்.

திருச்சூர் பூரம் விழாவின் முடிவில், நள்ளிரவுக்குப் பின், திருச்சூர் வடக்குநாதன் கோயில் மைதானத்தில் நடைபெறும் வாண வேடிக்கை மிகவும் பிரபலமானது. பூரம் விழா நாளில், மாலைப்பொழுதில் யானையின் மீது இரு தரப்பினரும் வண்ண அலங்காரக் குடைகளை மாற்றும் அழகை ரசித்த பிறகு, இரவு வாண வேடிக்கையை ரசிக்காமல் கூட்டம் கலைவதில்லை.

புற்றிங்கல் பகவதி அம்மன் கோயில் வெடிவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே வாண வேடிக்கை போட்டி கூடாது என்று காவல் துறை கூறியதால், இதை ஏற்க மறுத்து கோயில் நிர்வாகத்தினர் கடைசிவரை அதிகாரிகளுடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. அனுமதி கிடையாது என்று முடிவு செய்த பிறகு, பல்லாயிரம் மக்கள் கூடும் பகுதியில் வெடிமருந்துகளைக் குவித்து வைக்க அனுமதித்தது ஏன்? அனுமதியின்றி விழாக் குழுவினர் வாண வேடிக்கை நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன், தடுப்பு நடவடிக்கையாக காவலர்களை அங்கே நிறுத்தி வைக்கத் தவறிய காவல் துறை மீது யார் வழக்குப் பதிவு செய்வார்கள்?

வெடிவிழா நடத்தப்படும் கோயில்கள் அனைத்திலுமே இதற்கென தனி மைதானம் கோயில் முன்பாக அல்லது கோயில் அருகே இருக்கும். வாண வெடி தயாரிப்போர் ஒருசில நாள்களுக்கு முன்பாகவே அங்கே வந்து, வாண வெடிக்கான குழிகள் அமைக்கவும், மூங்கில் கோபுரம் அமைக்கவும் தொடங்கிவிடுவார்கள். அந்த மைதானத்துக்குள் யாரும் நுழையாமல் பார்த்துக்கொள்வார்கள். வெடிவிழா வழக்கமாக இரவு 11 மணிக்கு மேல்தான் தொடங்கும். அந்த நேரத்தில் மின்சாரத்தை துண்டித்துவிடுவதே வழக்கம். அந்த நேரத்திலும், வாண வேடிக்கை குழுவினரின் ஆட்கள் அந்த மைதானத்தின் எல்லையில் நின்று யாரும் உள்ளே போகாதபடி கண்காணிப்பார்கள்.

இத்தனை நடைமுறைகளையும் மீறி, வாண வெடி மருந்துகள் கோயில் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ஒரு தீப்பொறி விழுந்து விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுவது பல சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. வாண வேடிக்கை நடக்கும் மைதானத்தில் எத்தனை பெரிய விபத்து நடந்தாலும், வாண வெடி ஊழியர்கள்தான் பலியாவார்கள். பார்வையாளர்கள் இத்தனை பேர் பலியாக வாய்ப்பில்லை. வாண வெடி மேலெழாமல் பக்கவாட்டில் பறக்கும்போது சில பார்வையாளர்கள் பாதிக்கப்படுவதுண்டே தவிர, இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் சாகவும், 200 பேர் காயமடையும்படி ஆனதில்லை.

காவல் துறை கடைசி வரை அனுமதி வழங்க மறுத்ததால், அவசர அவசரமாக இந்த வாண வேடிக்கையை நடத்தி முடித்துவிட வேண்டும் என்கின்ற முனைப்புதான் தவறுகளுக்கும், விபத்துக்கும் காரணமாக இருந்ததா? அல்லது கேரளத்தில் இத்தகைய வெடி விழாகளை ஒழித்துவிட வேண்டும் என்கிற சதி வலைப்பின்னல்தான் இதற்கு அச்சாரமா?

இந்த விபத்துக்கான காரணங்களை நிச்சயமாக ஒரு குழு ஆய்வு செய்து சொல்லும். ஆனால், அவர்கள் காவல் துறையைக் குற்றம் சொல்லப்போவதில்லை. இனி எல்லா கோயில்களிலும் வாண வேடிக்கைகளைக் கட்டுப்படுத்துவார்கள். காவல் துறையினர் முன்னிலையில், அவர்கள் அனுமதிக்கும் வெடிகளை மட்டும், அனுமதிக்கும் எண்ணிக்கையில் வெடிக்கும்படி பரிந்துரைக்கலாம்.

கோயில்களில் யானைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இப்போது கோயில்களில் வாண வேடிக்கையும் கூடாது என்று ஒலிமாசுக்கு எதிரான ஆர்வலர்களால் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அவசர அவசரமாகப் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கேரளம் விரைந்திருக்கிறார்களே, இது அப்பட்டமான அரசியல் ஆதாய முயற்சியாகத் தெரியவில்லையா? "எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்!' என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...