Tuesday, April 12, 2016

தேவை பொறுமை எனும் மருந்து

தேவை பொறுமை எனும் மருந்து...DINAMANI

By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் வறட்சிக் கொடுமையால் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள், தாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என மரத்வாடா ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ள சம்பவம் மாணவரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 சமீப காலமாக பள்ளி, கல்லூரி, பல்லைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களிடையே, குறிப்பாக, தொழில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே தற்கொலை எண்ணம் உருவாகி வருவது வேதனை தரும் விஷயம்.
 மாணவர்களைப் பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகமும் வாட்டி வதைப்பது, அதனால் ஏற்படும் மனஉளைச்சல், சோர்வு தான் இத்தகைய தற்கொலைச் சம்பவங்களுக்குக் காரணம் என மனோதத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
 அதிலும் குறிப்பாக, ஏழை, எளிய நடுத்தர மக்களின் பிள்ளைகள் கடினப்பட்டு உழைத்து, படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்ற பின்பு, அவர்களைப் புகழ் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் சேர்த்து விட்டால் அதன் பின்பு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது.
 அங்கு ஏற்கெனவே பயிலும் பணக்காரப் பிள்ளைகளின் நடவடிக்கைச் சூழல்கள், பல்வேறு மொழி பேசும் மாணவர்கள், அவர்களின் நடை, உடை பாவனைகள், தன்னைவிட அதிக மதிப்பெண்களைப் பெற்று விட்ட மற்ற மாணவர்களைக் கண்டு அதனால் ஏற்படும் பொறாமை உணர்வு, கடனை வாங்கி கல்லூரியில் சேர்த்து விட்ட பின்பு, அடுத்து வரும் ஆண்டுகளில் கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் இருக்கும் பெற்றோர்களின் தவிப்பு, அதனால், தாங்கள் கல்லூரி நிர்வாகத்திடமும், சக மாணவர்களிடையேயும் பெறும் அவமானம் இதெல்லாம் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகின்றன.
 படித்தால் வேலை கிடைக்குமா, நாம் பெற்றோர்களை கடனாளியாக்கி விட்டோமே என்ற மனச் சோர்வு, பிடிக்காத பாடப் பிரிவில் மாணவர்களைச் சேர்த்து படிக்குமாறு வற்புறுத்துதல், அரசு ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களைப் புறக்கணித்தல் ஆகியனவும் மாணவர்களுக்குத் தற்கொலை எண்ணங்களைத் தூண்டுகின்றன.
 நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% பேருக்கு மன நோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
 எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்து, பிள்ளைகளைக் கண்டிக்கும் பழக்கம் இல்லாத பெற்றோர்களிடையே வளரும் குழந்தைகளுக்கு, பிறர் கண்டித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாமல் போய்விடுகிறது. பெற்றோர்கள் தங்கள் மன அழுத்தத்தை பிள்ளைகளிடம் காட்டக் கூடாது.
 வளர்ந்து விட்ட தொழில்நுட்ப யுகத்தில் எங்கும் போட்டி, எதிலும் போட்டி என்ற போக்கு அவர்களை பெரும் பரப்பரப்புக்கு ஆளாக்கி விட்டது.
 மாணவர்களின் மனநிலையை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஆசிரியர்களின் பணி இருக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 தங்கள் மீது அக்கறை இருப்பதாலேயே அவ்வப்போது பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்லூரி நிர்வாகமும் கண்டிக்கின்றனர் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
 அவ்வப்போது அபாயகரமான முடிவுகளை எடுப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
 மதிப்பெண்களைக் குறைவாகப் பெற்றுவிட்டால், தங்களின் வாழ்க்கைப் பாதையே மாறி விட்டதாக நினைத்து சில மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை மாய்த்துக் கொள்கிறார்கள்.
 இத்தகையச் சூழ்நிலையில் துன்பங்களையும், துயரங்களையும், போராட்டங்களையுமே துணையாகக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி அடைந்து முன்னுக்கு வந்த வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களை ஆற்றுப்படுத்துல் நடத்த வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கப் போவதில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 அதே நேரத்தில், கல்லூரி நிர்வாகமும் மாணவர்கள், பெற்றோர்கள் - ஆசிரியர்களிடையே நல்லிணக்கம் கொண்டு கல்லூரிக் கட்டணம் கட்ட வசதியில்லாமல் துயரில் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும் வகையில், "நம் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு கண்டிப்பாக வளாக நேர்காணலில் வேலை கிடைக்கும், நீ வேலை கிடைத்த பின்பு கட்டணம் செலுத்தினால் போதும்' என்று கூறி அவர்களின் தற்கொலை எண்ணத்தை கைவிடச் செய்து மகிழ்ச்சி அலைகளை அவர்கள் மனதில் ஏற்படுத்தினால், அவர்கள் படிப்பில் மீண்டும் நாட்டம் செலுத்துவதோடு, தற்கொலை எண்ணமும் மறையும்.
 தோல்வி, துன்பம் ஏற்படும்போது அதைக்கண்டு துவளாமல், அது வெற்றியின் முதல் படிக்கட்டு என்றுணர வேண்டும். குறிப்பாக, பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடையே பொறுமை எனும் மருந்தை ஊட்ட வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024