Tuesday, April 12, 2016

அரசியலில் இது சகஜமப்பா!...DINAMANI

அரசியலில் இது சகஜமப்பா!...DINAMANI

By  - விக்கிரமசிங்கன் -

தமிழக சட்டப் பேரவையைப் பொருத்தவரை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன், அதே நேரத்தில் சற்றும் தரம் குறைந்துவிடாமல் விமர்சனங்களை எதிர்கொள்பவர் என்கிற பெருமை ராஜாஜியைத்தான் சாரும். சட்டப் பேரவை விவாதங்களில் அவர் சொன்ன பதில்கள் சிரிப்பலையை எழுப்பும். அவரது குட்டிக் கதைகளும், உவமைகளும் எதிர்க்கட்சியினராலும் ரசிக்கப்படும்.
 தமிழக அரசியலில் முதல் முதலில் தரக்குறைவான முறையில் பேசியவர் என்கிற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் பெரியார்தான். திராவிடக் கழகத்திலிருந்து திமுக பிரிந்திருந்த நேரம். திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களைத் தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் "........பயலுவ...' என்று தொடர்ந்து வசைபாடி வந்தார் அவர்.
 அப்போதெல்லாம் திமுக பொதுக்கூட்டங்களில் அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்கென்றே கூட்டம் கூடும். திமுக சாராத பொதுமக்களும் கலந்து கொள்வார்கள். சங்கீதக் கச்சேரிகளில் ரசிகர்கள் தங்கள் விருப்பமான பாடல்களைப் பாடும்படி துண்டுச்சீட்டில் எழுதி அனுப்புவதுபோல, அண்ணாவிடம் துண்டுச் சீட்டில் கேள்விகளை எழுதி அனுப்புவார்கள். அண்ணாவும், எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
 கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர், "பெரியார் உங்களை இப்படித் தரக்குறைவாகத் குறிப்பிட்டு வசைபாடுகிறாரே...?' என்று துண்டுச் சீட்டில் எழுதி அண்ணாவுக்கு அனுப்பினார். அண்ணா தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன், "நாங்கள் அவரைத் தந்தை என்கிறோம். அவரோ எங்களை வேசி மகன் என்கிறார்' என்று கூறிய பதிலால் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
 ஆனால், அதற்குப் பிறகும் பெரியார் திமுகவினரை வசைபாடுவதை நிறுத்தவில்லை. 1962, 1967 தேர்தல்களில் "காமராஜர்தான் பச்சைத் தமிழன். இவர்கள் ................' என்று தொடர்ந்து வசைபாடி திமுகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்தார். 1967-இல் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல்வரான அண்ணா தனது அமைச்சரவை சகாக்களுடன் நேரில் சென்று பெரியாரிடம் ஆசி வாங்கினார். அத்துடன் அவர்களுக்குள் இருந்த பகை விலகியது. தனது பெருந்தன்மையால் அதுவரை வசைபாடிய பெரியாரைத் தனது புகழ்பாட வைத்துவிட்டார் அண்ணா.
 தமிழக சட்டப் பேரவையில், அவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் எழுந்த முதல் தரக்குறைவான பேச்சுக்கு சொந்தக்காரர், இன்று தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாகத் திகழும் கருணாநிதிதான் என்றால் இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை.
 அன்று ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் குறிப்பிடத்தக்க உறுப்பினர் அன்றைய பேசின் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த டி.என். அனந்தநாயகி. ஒருமுறை அவர் சட்டப் பேரவையில் திமுகவை விமர்சிக்கும் விதத்தில், "எங்கே இருக்கிறது திராவிட நாடு?' என்று கேள்வி எழுப்பினார்.
 எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மு. கருணாநிதி எழுந்து நின்றபோது, அவை ஒரு வினாடி மெளனமானது. அவர், "அந்த நாடாவை அவிழ்த்து...' என்று கூறி, சற்று நிறுத்தி, பிறகு, "நான் குறிப்பிட்டது பாவாடை நாடாவை அல்ல, கோப்புகளின் நாடாவை' என்று கூறும்போதே அவையில் ஒரே கூச்சலும் கண்டனமும் எழுந்தன என்று அன்றைய காலகட்டக் காங்கிரஸ் தலைவர்கள் மேடையில் பேசுவதுண்டு.
 தரக்குறைவான மேடைப் பேச்சுகளும், சட்டப் பேரவை விவாதங்களும் 1962-க்குப் பிறகு திமுக கணிசமான உறுப்பினர்களுடன் அவைக்கு வந்தபிறகுதான் தமிழகத்தில் தலைதூக்கியது. திமுகவில் அண்ணா, நெடுஞ்செழியன் போன்ற மிகவும் கண்ணியமாகப் பேசும் தலைவர்களும் நிறையவே இருந்தனர் என்றாலும், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களின் பேச்சுகள் தரக்குறைவாகவே இருந்தன.
 அரசியல் மேடைகளில் காமராஜரும், பக்தவத்சலமும், பின்னாளில் எம்.ஜி.ஆரும். மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கப் பட்டார்கள். கேலி செய்யப்பட்டார்கள். அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதைக் கிண்டல் செய்து மிக அதிகமாகப் பேசப்பட்டது. இவையெல்லாமே, அண்ணாவின் காலத்திற்குப் பிறகுதான் மிகவும் தரம் தாழத் தொடங்கியது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
 தமிழக அரசியலில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானவர்களில் திமுக தலைவர் கருணாநிதியும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரைவிடவும் அதிகமாக விமர்சிக்கவும், கேலி செய்யவும், வசைபாடவும் செய்யப்பட்டவர் இன்றைய முதல்வர் ஜெயலலிதாதான்!
 எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெ, ஜா என்று ஜெயலலிதாவும், வி.என். ஜானகியும் இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டபோதுதான் அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஜானகி அணியைச் சேர்ந்த பலரும் நா கூசாமல் ஜெயலலிதாமீது வைத்த விமர்சனங்கள்தான் தமிழக அரசியலில் மிகவும் தரக்குறைவான விமர்சனங்களாக இருக்கும்.
 வேடிக்கை என்னவென்றால், இப்படி மிகவும் தரம் தாழ்ந்து ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தவர்கள் அனைவருமே 1991-க்குப் பிறகு அவரது அமைச்சரைவையில் அமைச்சர்களாகவும் கட்சிப் பொறுப்புகளிலும் இருந்தனர், இருக்கின்றனர் என்பதுதான். அதை ஜெயலலிதாவின் பெருந்தன்மை என்பதா, இவர்களின் நல்ல காலம் என்பதா தெரியவில்லை.
 ஜாதியைக் குறிப்பிட்டு கருணாநிதி விமர்சிக்கப்படுவதும், பழிக்கப்படுவதும் புதிதொன்றும் அல்ல. அப்படி அவரை விமர்சித்தவர்கள் பட்டியலில் இப்போது வைகோவும் சேர்ந்திருக்கிறார், அவ்வளவே!
 1993-இல் மதிமுக பிரிந்தபோது, அப்போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த நாஞ்சில் மனோகரன் எழுதிய "கருவின் குற்றம்' கவிதையின் சாராம்சமும் இப்போது வைகோ தெரிவித்திருக்கும் கருத்தும் வேறுவேறல்ல. அவர் நாகரிகமாகச் சொன்னார். இவர் கொச்சையாகக் கூறியிருக்கிறார் அவ்வளவே!
 இப்போது வைகோவை அவரது கருத்திற்காகக் கண்டித்திருப்பவர்கள் பட்டியலில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் இருப்பதுதான் நகைச்சுவை. அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த போது, "கருணாநிதி எல்லாவற்றையும் ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்' என்று கூறி வாங்கிக் கட்டிக் கொண்டது அவருக்கு மறந்து போயிருக்கக் கூடும்.
 வெகுண்டு எழுந்த கருணாநிதி, காங்கிரஸ் தலைமையிடம் ஆவேசமாக முறையிட, தில்லியிலிருந்து இளங்கோவனுக்கு "டோஸ்' விழ, அவர் கோபாலபுரத்துக்கு ஓடிப்போய் மன்னிப்புக் கேட்க, அந்தக் கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு 2009 மக்களவைத் தேர்தலில் அவரைத் திமுக தோற்கடிக்க.... அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா... என்று கருணாநிதியும் இளங்கோவனும் இப்போது கைகோத்திருக்கிறார்கள்.
 தமிழக அரசியலில் காங்கிரஸ், ஜனதா, இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சித் தலைவர்கள் யாருமே தரக்குறைவாகப் பேசியதாக சரித்திரம் இல்லை. பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒருவர் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு. தரக் குறைவாகவும், கீழ்த்தரமாகவும் பேசுபவதைப் பெருமையாகவே கருதுபவர்கள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே. அதனால்தான் தேசிய கட்சிகளால் தமிழகத்தில் செல்வாக்குப் பெற முடியவில்லையோ என்றுகூடத் தோன்றுகிறது.
 நாங்கள்தான் ஜனநாயகக் காவலர்கள் என்றும், பலருக்கு வழிகாட்டிகள் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவிலேயே, இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களைத் தடுக்க முடியவில்லை, நம்மால் எங்கே முடியப் போகிறது?
 ÷வைகோ பேசியது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்துவிட்டது. நாம் நனி நாகரிகம் பற்றிப் பேசுகிறோம். அரசியல் கட்சிகளில் இரண்டாம் கட்ட, முன்றாம் கட்டப் பேச்சாளர்கள் பேசுவதைக் கேட்டால், தமிழ் எழுத வராது. கெட்ட வார்த்தைதான் எழுதவரும்.
 ÷அப்படியானால், இது எங்கேபோய் முடியும்? கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபேன்ஸ் கூறியதை மறுபடியும் படித்துப் பாருங்கள். ஜனநாயகம் இருந்தால் அரசியல்வாதிகள் இருப்பார்கள். அரசியல்வாதிகள் இருந்தால் வசைமாரி பொழிவார்கள். தரக்குறைவாகத் தாக்குவார்கள். அரசியலில் இது சகஜமப்பா!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024