Tuesday, April 12, 2016

பாதுகாப்பான வாணவேடிக்கை..

பாதுகாப்பான வாணவேடிக்கை...DAILY THANTHI
THALAYANGAM

பழையகாலங்களில் கடைபிடித்துவரும் பல மரபுகள், வழக்கங்கள், காலப்போக்கில் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கேற்ப மாறினாலும், இறைவழிபாட்டு தலங்களில் உள்ள சில மரபுகள் மட்டும் மாற்றம் காணாமலேயே இருக்கிறது. பழையகாலங்களில் கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களில் பக்தர்களை அதிகம் ஈர்க்கும்வகையில், சிறப்பு வழிபாட்டுமுறைகள் கடைபிடிக்கப்படுவதோடு, தீபங்களால் அலங்கரிக்கப்படுவதும், வழிபாட்டுதலங்களுக்கு முன்புறம் நாதஸ்வரம், மேளம், நையாண்டி மேளம், கரகாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கிராமிய கலைகள் இடம்பெறுவதும், அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருவிழாவின் இறுதிநிகழ்ச்சியாக வாணவேடிக்கைகள் நடத்துவது எல்லா ஊர்களிலும் ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதுபோல, கேரளாவில் உள்ள கொல்லம் நகரத்தின் மிக அருகில் இருக்கும் பரவூரில் உள்ள புற்றிங்கல் தேவி திருக்கோவிலில் நடந்த வாணவேடிக்கை, பல உயிர்சேதங்களையும், ஏராளமானவர்களுக்கு காயமும் ஏற்படுத்தி, இந்தியாவையே உலுக்கிவிட்டது. இந்த திருக்கோவிலில் மீனா–பரணி திருவிழா முடியும் அன்று நடந்த வாணவேடிக்கை இதுவரையில் 110 பேர்களுக்குமேல் பலிவாங்கிவிட்டது. 400 பேர்களுக்குமேல் பலத்தகாயத்தோடு பல்வேறு மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி என்பதோடு, இருகோஷ்டிகளுக்கு இடையே வாணவேடிக்கை போட்டியே நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வாணவேடிக்கையை பார்க்க இரவு முழுவதும் காத்திருந்திருக்கிறார்கள். அதிகாலை 3.30 மணிக்கு வானத்தில் போய் வெடிக்கவேண்டிய ஒரு வாணவெடி கீழேவிழுந்து அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி அருகிலே வெடிகள் சேமித்துவைக்கப்பட்டிருந்த அறைக்குள் விழுந்து, அங்கிருந்த வெடிகள் எல்லாம் மொத்தமாக வெடித்ததால் இவ்வளவு உயிர்கள் இழப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், 1.5 கி.மீ. சுற்றளவில் உள்ள வீடுகளில் எல்லாம் பெரியசேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்டவுடன், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். நரேந்திரமோடி அனைத்து உதவிகளையும் வழங்கியிருக்கிறார்.

‘ஆபத்து காலத்தில் உதவுபவர்தான், உண்மையான நண்பர்’ என்ற வகையில், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெறும் ஆறுதல் வார்த்தைகளை மட்டும் கூறாமல், உடனடியாக தமிழகத்திலிருந்து மருத்துவ நிபுணர்களையும், தேவையான மருந்துகளையும் அனுப்பியது, தமிழர்களின் தயாளகுணத்தை பறைசாற்றியுள்ளது. இந்த வாணவேடிக்கை இவ்வளவு சோகமயமானது என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற திருவிழாக்கள், மக்கள் கூடும் இடங்களில், வாணவேடிக்கை தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது. பழையகாலங்களில் கோவில்களுக்கு அருகில் திறந்தவெளி மைதானங்களில் வாணவேடிக்கைகளை நடத்துவார்கள். ஆனால், இப்போதோ கோவில்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் வந்துவிட்டன. வெடிமருந்து விதிகள்படி, எந்த ஒரு வாணவேடிக்கைகள் என்றாலும், பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு இடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் நடத்தப்படவேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, பட்டாசுவெடிக்கும் நிகழ்ச்சிகளெல்லாம் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை கண்டிப்பாக நடத்தக்கூடாது என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. இதுபோல, 15 கிலோ எடை அளவுக்குத்தான் பட்டாசுகள் வெடிக்கப்படவேண்டும். ஆனால், பரவூரில் நடந்த வாணவேடிக்கையில் இந்தவிதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

கோவில் திருவிழாக்களில் வாணவேடிக்கை என்பது நமது பாரம்பரிய நடைமுறையில் ஒன்றாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் சப்பரம் தூக்கிக்கொண்டு வரும்போதும், தேர் இழுத்துக்கொண்டு வரும்போதும் அதற்கு முன்பு வாணவேடிக்கைகள் நடத்தப்படுவது மரபு. அதற்கு தடைவிதிப்பது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, வாணவேடிக்கைகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு கோவில் நிர்வாகம், கிராம நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, ஆபத்தில்லாத வாணவேடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024