மல்லையா தர முன்வந்த ரூ.4,000 கோடியை நிராகரிப்பது ஏன்?- உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் விளக்கம்
மல்லையா தனது உள்நாட்டு, வெளிநாட்டு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கிகளுக்கு மல்லையா செலுத்த வேண்டிய கடன் தொகையான ரூ.9,000 கோடியை திருப்பிச் செலுத்துவதற்கான மல்லையாவின் இரண்டு யோசனைகளையும் வங்கிகள் கூட்டமைப்பு நிராகரித்தது.
வியாழக்கிழமையன்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ரொஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று நடைபெற்ற விசாரணையில், மல்லையா மார்ச் 31, 2016 வரையிலான அவர், அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு உள்ள உள்நாட்டு, அயல்நாட்டு சொத்து விவரங்களை கோர்ட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, மல்லையா கடனை திருப்பி அளிக்க மேற்கொண்ட யோசனைகளை வங்கிகள் மறுத்ததையும் ஏற்றுக் கொண்டது.
சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் அதே வாக்குமூல அறிக்கையில் நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார் என்பதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது கடன் தொகை திருப்பி செலுத்தும் விவகாரத்தில் வங்கிகளுடன் மல்லையா அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டுமென்றால் மல்லையா ஆஜராவது மிக முக்கியம் என்று நீதிமன்றம் கருதுகிறது.
மேலும், முதலில் மல்லையா தனது நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறு ஒரு பெரிய தொகையை வங்கிகளிடத்தில் செலுத்த வேண்டும் என்ற வங்கிகளின் நிபந்தனையையும் ஏற்ற உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 21-ம் தேதியன்று தனது சொத்து விவர வாக்குமூலத்தில் வங்கிகள் கேட்கும் முதற்கட்ட தொகையாக எவ்வளவு செலுத்த முடியும் என்பதையும் குறிப்பிட வலியுறுத்தியுள்ளது.
வங்கிகள் தரப்பில் ஆஜரான ஷியாம் திவான், ராபின் ரத்னாகர் டேவிட் ஆகிய வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடத்தில் கூறும்போது, மல்லையா முதலில் ரூ.4000 கோடி தொகையை திருப்பி அளிக்க முன்வந்ததை வங்கிகள் கூட்டமைப்பு நிராகரித்தது என்றனர்.
மேலும், “மிகப்பெரிய தொகை விவகாரமாகும் இது. எனவே அவர் தனது நியாயமான, இறுதியுமான, முழுமையுமான சொத்து விவரங்களை வெளியிடச்செய்வதுதான் சரியாக இருக்கும். இந்தத் தொகைகளை அளிப்பதில் நிச்சயமின்மைகள் உள்ளன. எனவே அவர் ஒரு நம்பகமான பெரிய தொகையை டெபாசிட்டாகச் செலுத்தினால்தான் அர்த்தமுள்ள பேச்சு வார்த்தையை தொடங்க முடியும், அதற்கு அவர் நேரில் ஆஜராவதும் அவசியம். இதற்காக மூத்த வங்கி அதிகாரிகளும் நீதிமன்ற அறைக்கு வருவார்கள்” என்றனர்.
இதற்கு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், 2010 முதல் 2012 வரை தொடர்ச்சியாக சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளோம் என்றார்.
உடனே நீதிபதி நாரிமன், “அதனால் என்ன? ஏன் இப்போது புதிய சொத்து விவரங்களை அறிவித்தால் என்ன” என்று எதிர்கேள்வி கேட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள் விசாரணையை ஏப்ரல் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் விஜய் மல்லையாவின் சொத்து விவர வாக்குமூலங்கள் குறித்த தங்களது கருத்தை வங்கிகள் கோர்ட்டுக்கு ஏப்ரல் 25-ம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்
No comments:
Post a Comment