Wednesday, April 6, 2016

பின் பாக்கெட்டில் வைப்பதை தவிருங்கள்: மொபைல் சேஃப்டி டிப்ஸ்


பின் பாக்கெட்டில் வைப்பதை தவிருங்கள்: மொபைல் சேஃப்டி டிப்ஸ்

VIKATAN NEWS

மொபைல்…இன்றைய தேதியில் எல்லோரோடும் இணைந்த உள்ளங்கை குழந்தை. மொபைல் வாங்குவதோடு மட்டும் நம் செலவு முடிந்து விடுவதில்லை. அதற்கான உபரி செலவுகளும், அதன் பராமரிப்பும் மொபைல் உள்ள காலம் வரை நம்மை துரத்தும். மொபைல் மற்றும் பேட்டரி சீக்கிரம் சேதமடையாமல் செலவுகளை தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம்?

பின் பாக்கெட்டில் வைப்பதை தவிருங்கள்:

மொபைலை பின் பாக்கெட்டில் வைப்பது நிறைய பேருக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதனால் மொபைலுக்கு என்ன பிரச்னை என்கிறீர்களா? நீங்கள் மொபைலை பின் பாக்கெட்டில் வைத்து விட்டு மறந்து போய் எங்கேயாவது அமர்ந்தீர்கள் என்றால் மொபைல் வளையலாம் அல்லது வேறு ஏதேனும் பிரச்னை வரலாம். இவ்வாறு வளைவதால் உங்கள் மொபைல் மற்றும் பேட்டரி சீக்கிரம் பாதிப்படையக் கூடும்.



அதே போன்று எடை அதிகமுள்ள பொருட்களுக்கு கீழே, மொபைல் வைப்பதை தவிருங்கள். ஏனெனில், அதிக எடை உள்ள பொருட்கள் தரும் அழுத்தத்தால் பேட்டரி விரிவடைந்து, வெடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.

அதிக வெப்பம் உள்ள இடங்களை தவிருங்கள்:

அதிகம் வெப்பமுள்ள இடங்களில் மொபைலை வைப்பதால், பேட்டரி அதிவிரைவில் சூடாகி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிக வெப்பமுள்ள இடங்களைப் போலவே அதிகம் குளிரான அதாவது ஜீரோ டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் குறைவான வெப்பநிலை உள்ள இடங்களும் கூட மொபைலின் பேட்டரியை பாதித்து, செல்போனுக்கும் பாதிப்பாக்கும் என்பதை மறக்காதீர்கள்.

மொபைலை எப்போதுமே வைத்திருக்கிறேன் பேர்வழி என எங்கேயும் எடுத்து செல்லாதீர்கள். குறிப்பாக சமையலைறைக்கு. கவனக்குறைவாக நீங்கள் அடுப்பருகிலேயோ அல்லது ஃப்ரிட்ஜ், கிரைண்டர் போன்றவற்றின் அருகிலோ வைத்து விட்டு சென்றால் ஆபத்து உங்கள் ஃபோனுக்குதான். அதிகம் காற்றோட்டமில்லாத இடங்களிலும், உதாரணத்திற்கு தலையணைக்கு அடியில் போன்ற இடங்களில் வைக்காதீர்கள்.

பேட்டரியை பாதுகாக்க சில வழிகள்:

மொபைலில் மெமரி தான் இருக்கிறதே என்று தேவையில்லாத ஆப்ஸ்களை வைத்திருக்காதீர்கள். அது உங்கள் மொபைல் பேட்டரியை சூடாக்குவதுடன் சார்ஜையும் குறைக்கும். அதனால் தேவையான ஆப்ஸ்களை மட்டும் வைத்துக் கொண்டு தேவையில்லாததை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள்.

மொபைல் சூடேறுவது தெரிந்தால் அதை உடனே சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள்.

உங்கள் மொபைலுக்கு என்று உள்ள சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். அதுவே பேட்டரியின் வாழ்வை நீட்டிக்க சிறந்த வழி. இன்னொரு முக்கியமான ஒன்று, மொபைல் சார்ஜ் ஏற்றும் போது அதில் பேசுவது, மெசேஜ் செய்வது போன்ற காரியங்களை தவிருங்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம்.

அதே போன்று பேட்டரி மாற்ற வேண்டிய அவசியம் வரும் பொழுது, ஒரிஜனலயே தேர்ந்தெடுங்கள். சீப்பான விலைக்கு கிடைக்கிறது என்று லைஃப் இல்லாத பேட்டரியை தேர்ந்தெடுக்காதீர்கள். ஏனெனில் ஒரிஜினல் பேட்டரி பல விதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உத்திரவாதத்துடன் நம் கைக்கு கிடைக்கும். ஆனால் விலை மலிவான பேட்டரியில் அதை எதிர்பார்க்க முடியாது.

உங்கள் மொபைல் நீரில் விழுந்துவிட்டால் உடனே சர்வீஸ் சென்டரில் கொடுத்து செக் செய்யுங்கள். பொதுவாகவே நீரானது எலக்ட்ரானிக் ஐட்டங்களை சேதப்படுத்தக் கூடியது. எனவே கவனமாக இருங்கள்.

தொகுப்பு: ச. ஆனந்தப்பிரியா

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024