Wednesday, May 3, 2017

மேம்பாலம் இருந்தும் வடபழனியில் நெரிசல் குறையவில்லைமுருகா!ஆக்கிரமிப்பை அகற்றாமல் போக்குவரத்தை மாற்றுவதா?

பதிவு செய்த நாள்
மே 02,2017 23:15



சென்னை:கோடம்பாக்கம் - வடபழனி ஆற்காடு சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்பட்ட நிலையிலும், எந்நேரமும் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகருகின்றன. ஆற்காடு சாலையை கடக்க, அரை மணி நேரத்திற்கு மேல் வாகனங்கள் காத்து கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.வடபழனி, 100 அடி சாலை மற்றும் வடபழனி ஆற்காடு சாலை வழியாக தினமும், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால், இரண்டு சாலைகள் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதையடுத்து, 2010ல், வடபழனி, 100 அடி சாலையில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க, இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இருவழிப் பாதைமுதல் மேம்பாலத்தில் வாகனங்களும், 2வது மேம்பாலத்தில், மெட்ரோ ரயிலும் செல்ல திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. வாகனங்கள் செல்வதற்கான மேம்பாலம், பூமியில் இருந்து, 7 மீ., உயரத்தில், 520 மீ., நீளம், 18.6 மீ., அகலத்தில் கட்டப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலம், 69 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

பணிகள் முடிந்த நிலையில், 2016 நவம்பரில், மேம்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இதனால், 100 அடி சாலை மற்றும் வடபழனி ஆற்காடு சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது.கோடம்பாக்கத்தில் இருந்து, வடபழனி நோக்கி வரும் வாகனங்கள், வடபழனி துரைசாமி சாலை, அசோக் நகர், 2 அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலைக்கு சென்றன. அங்கிருந்து, கே.கே.நகர், போரூர் செல்லும் வாகனங்கள், பி.டி.ராஜன் சாலை வழியாகவும், வடபழனி செல்லும் வாகனங்கள், 100 அடி சாலை வழியாகவும் சென்றன. இதனால், 100 அடி சாலை, பி.டி.ராஜன் சாலை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது.

இதையடுத்து, ஒருவழிப் பாதையாக இருந்த கோடம்பாக்கம் -- வடபழனி ஆற்காடு சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.
ஆமை வேகம்

அதில், இருசக்கர வாகனம், கார் மற்றும் ஆட்டோக்கள் போன்ற, இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், கனரக வாகனங்கள், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட துரைசாமி சாலை வழியாக செல்கின்றன.ஒருவழிப் பாதையாக இருந்த வடபழனி ஆற்காடு சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்பட்டதால், போரூரில் இருந்து வரும் வாகனங்கள், வடபழனி, ஏ.வி.எம்., ஸ்டுடியோ அருகில் இருந்து, வடபழனி காவல் நிலையம் வரை, வாகனங்கள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய துாரத்திற்கு, அரை மணி நேரம் ஆகிறது. 'பீக் அவர்' போல் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகருகின்றன. இதனால், அலுவலகம் செல்வோர், குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.

ஆக்கிரமிப்பை அகற்றும் எண்ணமில்லை

வடபழனியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம், கோவில் எதிரே உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் தான். அவற்றை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகளிடம், பலமுறை கோரிக்கை விடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மாநகராட்சி அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், போக்குவரத்தை மாற்ற, போலீசார் முடிவெடுத்தனர். இதையடுத்து, கோயம்பேட்டில் இருந்து அசோக் பில்லர் நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும், 100 அடி சாலை, வடபழனி மேம்பாலத்தின் மேலே சென்று, தெற்கு சிவன் கோவில் தெரு அருகில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு முன் நின்று செல்லும்.அசோக் பில்லரில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் அரசு பேருந்துகள் அனைத்தும், தெற்கு சிவன் கோவில் தெரு முன் நின்றுவிட்டு, மேம்பாலம் வழியாக கோயம்பேடுக்கு செல்லும்.இதனால், கோயம்பேடு செல்லும் பயணிகள், தெற்கு சிவன் கோவில் தெரு முன் ஏற்படுத்தப்பட்டுள்ள, புதிய பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை, இன்றிலிருந்து, தற்காலிகமாக அமலுக்கு வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றாமல், போக்குவரத்தை மாற்றுவது சரியான நடவடிக்கையா என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வடபழனி முருகன் கோவில் எதிரே, சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது, பேருந்துகள் மேம்பாலத்தை பயன்படுத்த செய்யும் வகையில், பேருந்து நிறுத்தம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என, எதிர்பார்க்கிறோம்.வடபழனி போக்குவரத்து ஆய்வாளர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024