Wednesday, May 3, 2017

தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்! : மருத்துவ படிப்பு விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி

பதிவு செய்த நாள் 02 மே
2017

23:39 சென்னை: முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு, தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளிடம் இருந்து, 50 சதவீத இடங்களை பெற்று, 'நீட்' தேர்வு அடிப்படையில் நிரப்பும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பாட்டை கண்டித்த உயர் நீதிமன்றம், தலா, ஒரு கோடி ரூபாய் வழக்கு செலவு தொகையும் விதித்தது. முதுகலை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த டாக்டர்கள், 20 பேர் தாக்கல் செய்த மனுக்களில் கூறியுள்ளதாவது:

தனியார் மருத்துவக் கல்லுாரிகளிடம் இருந்து, முதுகலை மற்றும் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், 50 சதவீத இடங்களை அரசு பெற்று, நீட் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், மாணவர்களை சேர்க்க வேண்டும்; அதுவரை, 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் நிரப்ப, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டது.

ரத்தாகவில்லை : மனுக்களை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள், ஆர்.என்.அமர்நாத், ஜி.சங்கரன் ஆஜராகினர். பின், நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: மாநில அரசுகளுக்கும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கும் இடையேயான, 50 : 50 இட பங்கீடானது, முதுகலை மருத்துவக் கல்விக்கான விதிமுறைகளின்படி உள்ளது. இந்த முறையை, எந்த நீதிமன்றமும் ரத்து செய்யவில்லை. இந்த இட பங்கீடு தொடர்பான விதிமுறைகளை எதிர்த்து, இதுவரை வழக்கு தொடரப்படவில்லை. எனவே, மாநில அரசுக்கு, 50 சதவீத இடங்களை, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் அளிக்க வேண்டும்.

கவனிக்கவில்லை : நிகர்நிலை பல்கலைகள், தங்களுக்கென தனிப்பட்ட அந்தஸ்து கோர முடியாது; அவைகளுக்கும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் பொருந்தும். அதில், இடங்கள் பகிர்வு தொடர்பான விதிமுறைகளும் அடங்கும். முதுகலை மருத்துவக் கல்வி விதிமுறைகள் வகுக்கப்பட்டும், அவை முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை, இந்திய மருத்துவ கவுன்சில் கவனிக்க தவறிவிட்டது. தனியார் மருத்துவக் கல்லுாரிகள் ஆதாயம் பெற, அவைகளிடம் இருந்து, 50 சதவீத இடங்களை பெற, மாநில அரசு தவறிவிட்டது.

மாநில அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கூட்டு சேர்ந்து, இடங்கள் பகிர்வு முறையை, தனியார் கல்லுாரிகள் பின்பற்றவில்லை. 50 சதவீத இடங்களை, அரசுக்கு அளிக்காததன் மூலம், தனியார் கல்லுாரிகள் ஆதாயம் அடைந்திருக்க வேண்டும். மாநில ஒதுக்கீடான, 50 சதவீத இடங்களை சேர்க்காமல், பொது கவுன்சிலிங்குக்காக, நிகர்நிலை பல்கலைகளுக்கு என, தனி விளக்க குறிப்பேட்டை, மாநில அரசு வெளியிட்டது, மோசடியான செயல் மட்டுமல்ல, சட்ட விரோதமானது; பொதுநலனுக்கு எதிரானது. எனவே, கீழ்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

l சிறுபான்மை கல்லுாரிகள் தவிர்த்து, தனியார் கல்லுாரிகளிடம் இருந்து, முதுகலை மருத்துவப் படிப்புக்கான ஒவ்வொரு பிரிவிலும், 50 சதவீத இடங்களை, தமிழக அரசு பெற வேண்டும். 'நீட்' தேர்வின் தகுதி பட்டியல் அடிப்படையில், மத்திய கவுன்சிலிங் மூலம், அந்த இடங்களை நிரப்ப வேண்டும்

l நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, 50 சதவீத இடங்களை, அரசின் அறிவிப்பாணை மூலம் கொண்டு வர வேண்டும்

l சிறுபான்மை கல்லுாரிகள், தாங்களாக முன்வராமல், அரசுக்கு, 50 சதவீத இடங்களை வழங்க தேவையில்லை

l சிறுபான்மை நிறுவனங்கள் தவிர்த்து, தனியார் கல்லுாரிகளில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான, 15 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பது செல்லாது; அது, ரத்து செய்யப்படுகிறது. இந்த இடங்களை, மாநில அரசு நடத்தும் மத்திய கவுன்சிலிங்கில் சேர்க்க வேண்டும்
l நிகர்நிலை பல்கலைகளில், முதுகலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளுக்கான கவுன்சிலிங்குக்கு, 2017 - 18ம் ஆண்டுக்கான, மாநில அரசின் விளக்க குறிப்பேடு, ரத்து செய்யப்படுகிறது. இதில், மாநில அரசுக்கான, 50 சதவீத இடங்கள் இடம் பெறாததால், ரத்து செய்யப்படுகிறது.

கவுன்சிலிங் நடத்துவது மாநில அரசு என்பதால், இணையதளத்தில் கீழ்கண்ட விபரங்களை வெளியிட வேண்டும்.

l ஒவ்வொரு கல்லுாரி, பல்கலையில் உள்ள இடங்கள், பிரிவு வாரியாக இடம் பெற வேண்டும்

l நிகர்நிலை பல்கலை உள்ளிட்ட, தனியார் கல்லுாரிகளின் கட்டண விபரங்கள்
l கவுன்சிலிங் போது வராத, மாணவர்களின் பட்டியல்

l அரசு, தனியார், நிகர்நிலை பல்கலையில் சேராத மாணவர்களின் பட்டியல்
l வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்காக, ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் குறித்த விபரங்கள்

l அடுத்த ஆண்டு முதல், எடுக்கப்பட்ட முடிவுகள், நடைமுறைகள் அனைத்தையும், முன்கூட்டியே மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கீழடிக்கு ரூ.1 கோடி! : நீதிபதி கிருபாகரன் உத்தரவில் மேலும் கூறியதாவது: மற்ற மாநிலங்கள் எல்லாம், 50 சதவீத இடங்களை பெற்றிருக்கும் போது, தமிழக அரசு வேண்டுமென்றே, 50 சதவீத இடங்களை கேட்டு பெறவில்லை; இது, கண்டிக்கத்தக்கது. தகுதி வாய்ந்த மாணவர்கள், இதனால்
பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே, தமிழக அரசுக்கு, வழக்கு செலவு தொகையாக, ஒரு கோடி ரூபாய் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடக்கும் அகழாய்வுக்கு பயன்படுத்த வேண்டும்.பொது நலன் பாதிக்கும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடு இருந்ததால், அதற்கும், ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை, மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மையத்துக்கு வழங்க வேண்டும்.

சட்ட விதிகள் மீறப்படுவதை தடுத்து, பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளுக்காக, இந்த வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது. அதிகாரிகளின் அஜாக்கிரதையால், தகுதி படைத்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்; அவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024