Sunday, May 14, 2017

16 மணி நேரம் பசி, தாகத்தில் வாடிய ராஜ்தானி பயணிகள்

பதிவு செய்த நாள் 13 மே
2017
20:33


ராஞ்சி: ரயில் புறப்பட்டு பல மணி நேரமாகியும், உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த பயணிகள், ரயிலின் பேன்ட்ரி காரை கொள்ளையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.டில்லியில் இருந்து ராஞ்சிக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படாததால், ரயிலின், 'பேன்ட்ரி கார்' எனப்படும் உணவு தயாரிக்கப்படும் பெட்டியை முற்றுகையிட்டனர்.

இது குறித்து, அந்த ரயிலில் பயணம் செய்த, நுஸ்ரா காதுன், 65, என்பவர் கூறியதாவது:கடந்த புதன் கிழமை மாலை, 4:00 மணிக்கு டில்லியில் இருந்து ராஞ்சிக்கு, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ராஞ்சிக்கு செல்ல, 16 மணி நேரம் ஆகும்; இரவு, 9:30 மணியாகியும், குடிநீர் மற்றும் இரவு உணவு வழங்கப்படவில்லை.

ரயில் பெட்டியில் உதவியாளரும் இல்லை. பசி தாங்க முடியாமல், பேன்ட்ரி காருக்கு சென்றவர்கள் அங்கிருந்த உணவுகளை எடுத்து சாப்பிட்டனர். மற்றவர்கள், ரயில் நிற்கும் இடங்களில் தேவையான உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை வாங்கினோம். மறு நாள் காலை, ராஞ்சி ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், தென்கிழக்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, ராஞ்சி ரயில் நிலைய மூத்த மண்டல வர்த்தக மேலாளர் நீரஜ் குமார் கூறியதாவது:

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் கேட்டரிங் சேவையை, வடக்கு ரயில்வே கவனித்து வருகிறது. ரயில் புறப்பட்ட பின், பேன்ட்ரி கார் மற்றும் ரயில் பெட்டிகளில் இருந்த ஊழியர்கள், முன்னறிவிப்பு இன்றி, திடீரென ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும், இரண்டு உதவியாளர்கள் இருப்பர். ஆனால், ராஞ்சி ராஜ்தானியில் ஒரு பெட்டிக்கு ஒரு உதவியாளர் என்று, 17 உதவியாளர்களே உள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024