Thursday, May 4, 2017

20 இளைஞர்கள் வெட்டிய மூன்று கிணறுகள்! காவிரி கடந்த பாதை இப்போது எப்படி இருக்கிறது? பகுதி -3 #Cauvery #Hogenakkal

மு.நியாஸ் அகமது


நம் உடலில் இருக்கும் ஆன்மாவுக்கு நிகரானது ஆற்றில் ஓடும் நீர்'' என்பார் தத்துவஞானி ஹென்றி. அப்படியானால், நீரை மாசுப்படுத்துவது என்பது நம் ஆன்மாவை மாசுப்படுத்துவதாகும்தானே...? இதையே இப்படி யோசித்துப்பாருங்கள், அந்த நீரைக் கைப்பற்றுவது அது, ஓடும் நிலப்பரப்பில் வாழும் அத்தனை உயிர்களையும் கைப்பற்றுவதுதானே...? ஆம், நீரெனப்படுவது அதிகாரம். நீரைக் கைப்பற்றினால் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடலாம். நீரை விஷமாக்கினால், அதிகாரத்தை நிலைகுலையச் செய்யலாம். அதனால்தான், 18-ம் நூற்றாண்டில் சென்னையைக் கைப்பற்ற சென்னை மின்ட் பகுதியில் உள்ள ஏழுக்கிணற்றில் விஷம் கலக்கத் துடித்தான் நவாப். அதே ஏழுக்கிணற்றை முற்றும் முழுவதுமாகத் தனதாக்கிக்கொள்ள மக்கள் மீது வன்முறையை ஏவினான் ஆங்கிலேயன். தாகத்தை மட்டும் தீர்க்கவல்லதல்ல நீர், அதிகாரப்பசியைத் தீர்க்கவல்லது நீர்தான். இதை நாம் சரியாகப் புரிந்திருக்கிறோமா... உணர்ந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. ஆனால், தர்மபுரியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் மிகச்சரியாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், நீரைப் பரவலாக்க அதாவது அதிகாரத்தைப் பரவலாக்க உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

“முப்பது நாள்கள்... இருபது இளைஞர்கள்... மூன்று கிணறுகள்!”

 
சென்ற அத்தியாயத்தில் ஐந்து தனி நபர்கள் இணைந்து ஆறு ஏரிகளை, ஓர் ஓடையை புனரமைத்ததைப் பார்த்தோம்தானே...? உங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகமும், தயக்கமும் எழுந்திருக்கும்... “அவர்களால் சாத்தியமாகி இருக்கிறது. இது எப்படி எங்களால் சாத்தியமாகும்? அதிகாரத்தை எதிர்த்து, ஆட்களைத் திரட்டி... மக்களை இணைத்து ஏரிகளை மீட்டெடுப்பது எங்களால் இயலாது. அதற்கு அதிக நேரம் தேவை. பணத்தைக்கூடச் செலவழித்துவிடலாம். ஆனால், நேரத்தைச் செலவழிப்பது முடியாத காரியம்” என்று யோசித்திருப்பீர்கள். என்னிடம் பேசிய பலரும் இதைத்தான் சொன்னார்கள். இந்தத் தயக்கங்களுக்கு எளிய தீர்வைச் சொல்கிறார்கள்... இருபது இளைஞர்கள்.

''நீரை மீட்க... நிலத்தடி நீரை உயர்த்த அதிக உழைப்பு எல்லாம் தேவையில்லை. காலையில் கொஞ்சம் ஓய்வுநேரத்தையும், குறைந்த உழைப்பையும் செலவிட்டாலே போதும்'' என்கிறார்கள் தர்மபுரி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.

இவர்கள் செய்ததெல்லாம் என்னவோ எளிய விஷயம்தான். ஆனால், கிடைத்ததெல்லாம் மகத்தான பலன். ஆம், இருபது இளைஞர்கள்... முப்பது நாட்கள் தொடர்ந்து உழைத்து... மூன்று கிணறுகளை வெட்டி இருக்கிறார்கள்.

இனி அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்...

“சில ஆண்டுகளுக்கு முன், எங்கள் பகுதியில் ஒரு தோல் தொழிற்சாலை ல்பட்டுவந்தது. 'தொழிற்சாலை வந்தால் நல்லதுதானே... அதனால் வேலை வாய்ப்புக் கிடைக்கும்' என்று முதலில் மகிழ்ந்தோம். ஆனால், அந்தத் தொழிற்சாலை சில ஆண்டுகளிலேயே விஷத்தை உமிழத் தொடங்கியது... நிலத்தடி நீரை உறிஞ்சியது. அத்துடன், அந்த நீரையும் மாசுப்படுத்தியது. தண்ணீரில் உப்பு ஏறி, அந்தத் தண்ணீர் டி.டி.எஸ் 2,300-க்கு மேல் உயர்ந்தது. சராசரியாக, 500 டி.டி.எஸ் உள்ள தண்ணீர்தான் குடிக்க உகந்தது. இந்தப் பகுதி நீர் முழுவதும் குடிக்கப் பயனற்றதாகிப் போனது. என்ன செய்யலாம் என்று பலருடன் உரையாடியபோது, அவர்கள் சொன்ன ஆலோசனை 'கிணறு வெட்டுங்கள்' என்பதுதான்.

முதலில் பெரிதாக எந்த நம்பிக்கையும் இல்லாமல்தான் பணியைத் தொடங்கினோம். அதிக நபர்கள் எல்லாம் இல்லை. இருபது பேர் தினமும் மூன்று மணி நேரம் செலவிட்டு முப்பது அடியில் கிணறு வெட்டினோம். அந்தச் சமயத்தில் சரியாக மழையும் பெய்தது. மழை நீர் கீழே இறங்க இறங்க... நிலத்தடி நீரும் உயர்ந்தது. தண்ணீரின் டி.டி.எஸும் குறையத் தொடங்கி இருக்கிறது” என்கிறார் தர்மபுரி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி.

இந்த அனுபவம் தந்த உற்சாகத்தில், இவர்கள் தொடர்ந்து பொது இடங்களில் கிணறு வெட்டும் பணியில் இறங்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு ஒருங்கிணைப்பளர் உமாசங்கர், “இதே டி.டி.எஸ் பிரச்னை இந்தப் பகுதியில் பல இடங்களில் இருக்கிறது. அதனால், சில இடங்களை அடையாளம் கண்டு அங்கு கிணறு வெட்டத் தொடங்கி இருக்கிறோம். இப்போது, இந்தப் பணி அதே தர்மபுரியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்துகொண்டிருக்கிறது. மழை பெய்தால், இந்தப் பகுதியில் ஆங்காங்கே தேங்கும் நீர் இந்தக் கிணற்றை வந்து அடைவதுபோல வடிவமைத்திருக்கிறோம். இதற்கு நல்ல பயனும் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது” என்கிறார் அவர்.

“கிணறு வைத்த வீடு!”

முன்பெல்லாம் அனைத்து ஊர்களிலும், வீடுகளிலும் கிணறுகள் இருந்தன. பொதுக் கிணறுகள் பெருமிதங்களின் சின்னமாக இருந்தன. ஆனால், எந்தப் புள்ளியில் அது தன் பெருமிதங்களை உதிர்த்தன என்று தெரியவில்லை. இரண்டு தசாப்தங்களில் கிணறுகள் அனைத்தும் தொலைந்து, அந்த இடங்களை ஆழ்துளைக் கிணறுகள் பிடித்தன. அனைத்தையும் பணமாகவே பார்க்கும் நிறுவனங்களும், நிறுவனமயமாகி... நிறுவனங்களுக்காக மட்டுமே பணி செய்யும் அரசுகளும் ஆழ்துளைக் கிணறுகளை ஊக்குவித்தன. பெரும்பசியுடன் இயங்கிய ஆழ்துளைக் கிணறுகள், அந்தப் பகுதியில் இருந்த அனைத்து நீர்வளங்களையும் உறிஞ்சி நம் நிலத்தைப் பாலையாகிவிட்டுச் சென்றுவிட்டன. கிணறுகள் இல்லாமல், ஆழ்துளைக் கிணறுகள் வற்றி, ஏரிகள், குளங்கள் தூர்ந்த நிலையில் இப்போது நாம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் காவிரியிலிருந்து உறிஞ்சிக்கொண்டிருக்கிறோம். இன்று காவிரியும் வற்றத் தொடங்கிவிட்டது... நாளை என்ன செய்யப் போகிறோம்...?

காவிரியை மீட்டல் என்பது... ஆழ்துளைக் கிணறுகளை ஒழிப்பதிலும், மீண்டும் கிணறுகள் வெட்டுவதிலும்... பொதுக் கிணறுகள் பயன்பாட்டைக் கொண்டுவருவதிலும் இருக்கிறது. இதை இன்று... இப்போதே தொடங்காமல் போனால், நம் நிலம் பாலையாகத்தான் போகும்!

இருபது இளைஞர்கள், முப்பது நாள்கள் செலவிட்டு, மூன்று கிணறுகளை வெட்டி இருக்கிறார்கள். இந்த இளைஞர்களின் படிப்பினைகளை அப்படியே உள்வாங்கி, பரப்புவோம். வாருங்கள், புதுக் கிணறுகள் செய்வோம். அப்படியே, இருக்கும் கிணறுகளையும் தூர்வார்வோம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024