Thursday, May 4, 2017

"மனநல சிகிச்சை என்பது கர்ணனுக்கான சலுகை!" - நீதியரசர் சந்துரு


உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ள கர்ணனுக்கும் இடையே மோதல் வலுத்துவருகிறது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துருவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

''நீதிபதி கர்ணனுக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையே வலுத்துள்ள இந்த மோதல் எதைக் காட்டுகிறது?''  

''ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியோ அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியோ தவறிழைத்தால் அவரைப் பதவி நீக்கம் செய்யக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில் அப்படிப்பட்ட வேலை பாதுகாப்பை அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. ஆனால், நாடாளுமன்ற கண்டனத் தீர்மானத்தைத் தவிர்த்து வேறு ஏதேனும் தண்டனையை அளிக்க முடியுமென்றால், அதற்குச் சட்டத்தில் இடமில்லை. மேலும், நீதிபதிகள் தாங்கள் அளிக்கும் தீர்ப்புகளுக்காக அவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் குற்ற வழக்குகளை யாரும் தொடர முடியாது. அப்படியான பாதுகாப்பு வளையம் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு உள்ளாகும்போது நீதிபதிகளுக்குக் கிடைக்காது. தொடர்ந்து தவறு செய்துவரும் நீதிபதி கர்ணனைச் சென்னையிலிருந்து கொல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்தபிறகும் அதே தவறுகளைச் செய்துவருகிறார். அவர் மீது சென்னை உயர் நீதிமன்றமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய வேதனையான நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, மூத்த நீதிபதியின் மனைவி ஒருவர் அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். 3 தலித் நீதிபதிகள் உட்பட 21 நீதிபதிகள் அவர் மீது எழுத்துமூலமான புகார்களை நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். இவற்றையெல்லாம் சரியான நேரத்தில் விசாரிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம் அதற்கு முன்னுரிமை கொடுத்து விசாரிக்கத்  தவறியதன் விளைவே தற்போது அதற்கான பலனை அனுபவித்து வருகிறது."

''இந்த மோதல் உருவாக மையப்புள்ளியாக எதனைக் கருதுகிறீர்கள்?''

"ஒருவருடைய பின்னணியை முறையாக விசாரிக்காமல், நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதுதான் இத்தனை குழப்பங்களுக்கும் மையப்புள்ளி. நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் நடைமுறையை இந்தச் சம்பவம் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவரது நியமனத்துக்குப் பரிந்துரை செய்த உயர் நீதிமன்றத்தின் கொலிஜியம் நீதிபதிகளான முகோபாத்தியாயா, மிஸ்ரா, கங்குலி ஆகிய மூன்று பேரும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கர்ணனுடைய நியமனத்துக்கு ஒப்புதல் அளித்த இந்தியத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், 'தனக்கு அவரது பின்னணி பற்றித் தெரியாது' என்று கூறியுள்ளார். எனவே, கொலிஜிய நடைமுறையைக் கைவிட்டுவிட்டு நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு உருவாக்குவதே இத்தகைய கேலிக்கூத்துகளைத் தவிர்க்க முடியும்."

''உச்ச நீதிமன்றம் வரம்பை மீறுகிறதா?''  

''கர்ணன் மீது தொடுத்துள்ள நீதிமன்ற அவதூறு வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 7 மூத்த நீதிபதிகள் விசாரித்து வருகிறார்கள். இன்னும் வழக்கு முடியவில்லை. இதில், வரம்பை மீறுவதற்கு என்ன செயல்பாடு நடந்துள்ளது? கர்ணன் குறித்து புகார் வந்தவுடனேயே உச்ச நீதிமன்றம் உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். ஆனால், தற்போது எடுத்துள்ள நடவடிக்கை அவதூறு குற்றத்துக்கானது. அதில், கர்ணன் குற்றவாளியா... இல்லையா என்பதை இனிமேல்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த வழக்குக்கான ஒத்துழைப்பைத் தராமல் கர்ணன் தன்னுடைய வழியில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதற்கு ஊடகங்களும் அதீத முக்கியத்துவம் அளித்து அதனைப் பெரிதாக்கி வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் 7 பேரின் உத்தரவுகளுக்கும், லெட்டர் பேடில் 4 வரி எழுதி கர்ணன் கையெழுத்திட்டுக் கொடுக்கும் அறிக்கைக்கும் ஒரே அளவு முக்கியத்துவம் கொடுத்துவருவது எந்த விதத்தில் நியாயமாகும்?"

கர்ணன்

''நீதிபதி கர்ணன் என்ன செய்திருக்க வேண்டும்... என்ன செய்திருக்கக் கூடாது?''  

"தலித் சமூகத்திலிருந்து வந்த நீதிபதியான ஒருவர், தன்னுடைய பதவியையும் அதிகாரத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நீதிபதியே ஆஜரானது இதுவே முதல்முறை. சேம்பரில் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது, தலைமை நீதிபதிகளிடம் தனக்கு குறிப்பிட்ட அதிகாரப் பங்கீடு அளிக்க வேண்டும் என்று மிரட்டுவது போன்ற பல்வேறு தவறானச் செயல்களைச் செய்துள்ளார். மேலும், நீதிபதிகளின் மனைவிகளை அசிங்கமாகப் பேசுவது... அதனைத் தட்டிக் கேட்பவர்களை எதிர்த்து 'வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் புகார் அளிப்பேன்' என்று கூறி மிரட்டியிருக்கிறார். இதுபோன்ற தவறானச் செயல்களைத் தவிர்த்துவிட்டு நீதிபரிபாலனை செய்திருந்தால் அவரை யார் குறைகூறுவார்கள்?"

''நீதிபதி ஒருவர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருடைய கருத்தையும், புகாரையும் தெரிவிக்க அவருக்கு உரிமையில்லையா?''

''அரசமைப்புச் சட்டம் 222-வது பிரிவின் கீழ் ஓர் உயர் நீதிமன்றத்தில் நியமனம் செய்யப்பட்ட நீதிபதியை வேறோர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. கர்ணன் இடமாற்றம் செய்யப்பட்ட கொல்கத்தா நீதிமன்றமும் பாரம்பர்யம் மிக்க நீதிமன்றம்தான். தனது ஊர்மாற்றத்தை எதிர்த்து அன்றைய தலைமை நீதிபதியிடம் அவர் முறையீடு செய்தார். அது, ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தன்னுடைய நீதிமன்ற மாற்றத்தை எதிர்த்து அவர் வழக்குத் தொடர்ந்திருக்கலாம். அப்படி வழக்குத் தொடர்ந்தாலும் வெற்றிபெற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான். பதவியிலிருக்கும் நீதிபதி தனது கருத்துகளையும் புகார்களையும் தெரிவிப்பதற்கு முறையான வழிகள் உள்ளன. அவற்றை நீதிபதி கர்ணன் கடைப்பிடிக்கவில்லை. அவருக்குக் கிடைத்த ஆலோசகர்கள் அப்படி. அதனால் அப்படித்தான் நடந்துகொள்வார்.''
நீதிபதி சந்துரு

''நீதிபதிகள் பதிலடி கொடுக்கும் இந்த மனநிலையைப் பார்க்கும்போது, நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விகுறியாக்கும் அல்லவா?''


"கர்ணனின் மனநலன் நலமாக உள்ளதா என்று அறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அது அவருக்குக் காட்டப்பட்ட சலுகை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவக்குழு அறிக்கை அளிக்க முன்வந்தால், அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய தண்டனையை உச்ச நீதிமன்றம் ஒருவேளை தவிர்த்திருக்கும். ஆனால், கர்ணன் உச்ச நீதிமன்ற 7 மூத்த நீதிபதிகளின் மனநிலையையே கேள்விக்குள்ளாக்கிவிட்டார். மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள மாட்டேன் என்று கூறியதன் மூலம் அவர் மீது அனுதாபம் கொள்ளக்கூடிய சூழ்நிலையைத் தவிர்த்துவிட்டார். எனவே, அவருக்குரிய தண்டனையை உச்ச நீதிமன்றம் வழங்கப்போவது உறுதியாகிவிட்டது."

''இந்த மோதல் முடிவுக்கு வர என்ன செய்ய வேண்டும்?''

"சாதாரண இந்தியக் குடிமகன் ஒருவர் கர்ணனைப் போன்று செயல்களைச் செய்திருந்தால் 1971-ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி 6 மாத சிறைத்தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கலாம். இது ஓர் அவதூறுக்கான தண்டனை. ஒவ்வோர் அவதூறும் தனித்தனி தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம். இதுவரை கர்ணன், 'தன்னை நாடாளுமன்ற கண்டனத் தீர்மானத்தின் மூலமே பதவி நீக்க முடியும்' என்று கூறிவந்துள்ளார். மே 23-ம் தேதி ஓய்வடையப்போகும் அவருக்கு அப்படிப்பட்ட நடைமுறையைக் கடைப்பிடிப்பதற்கான வழிகள் இல்லை. ஒருவேளை, அதைவைத்தும் அவர் இவ்வாறு பேசி வரலாம். அதனால் மே 24-ம் தேதி முதல் அவரும் ஒரு சாதாரண குடிமகன்தான். எனவே, அரசமைப்பு பாதுகாப்பு இன்றி நிராயுதபாணியாக நிற்கப்போகும் நமது மகாபாரத கதாநாயகனின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பதுதான் எனது கணிப்பு.''

படங்கள்: தி.ஹரிஹரன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024