நீட் தேர்வின்போது ஆடையைக் கழட்டச் சொன்ன விவகாரம்: 4 கேரள ஆசிரியர்கள் இடைநீக்கம்
நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையைக் கழட்டச் சொன்ன விவகாரத்தில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள குன்கிமங்கலம் பள்ளி ஆசிரியர்கள் நால்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மே 7-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நடத்திய மத்திய பள்ளிக்கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), முறைகேடுகளை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், குன்கிமங்கலத்தில் உள்ள கொவ்வாபுரம் தனியார் பள்ளியில் நீட் தேர்வு நடந்தது. அங்கு தேர்வெழுத வந்த ஒரு மாணவியிடம் மேல் உள்ளாடையை கழட்டுமாறு சில ஆசிரியர்கள் நிர்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆசிரியர்கள் ஷீஜா, ஷஃபீனா, பிந்து மற்றும் ஷாகினா ஆகிய நான்கு பேரை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
மாணவி தனது உள்ளாடையைக் கழட்டி மையத்துக்கு வெளியே இருந்த தாயிடம் கொடுத்துவிட்டு வந்த பிறகே, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோல ஏராளமான மாணவிகளின் ஆடைகளை மாற்றச் சொன்ன சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
நாடு முழுவதும் அதிர்வலைகள்
இத்தகைய சம்பவங்கள் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஏராளமான மாணவர் இயக்கங்களும், அரசியல் தலைவர்களும் இவற்றுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு, தேர்வு மையத்துக்குச் செல்லும் முன்னர் மாணவர்கள் எதிர்கொண்ட அவமானத்துக்கு எதிராக இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடத்தியது. கேரள மனித உரிமைகள் ஆணையம் நடந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment