Friday, May 5, 2017

அக்னி நட்சத்திரம் தொடங்கியது சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி

அக்னி நட்சத்திரம் தொடங்கியது சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி
 
அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியதையொட்டி, சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். 
 
சேலம்,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் இரவில் வீடுகளில் பொதுமக்கள் தூங்கமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர, கோடை வெயிலால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதைக்குட்பட்டு வருகிறார்கள். பகலில் அடிக்கும் வெயிலின் உஷ்ணத்தால் உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இது வருகிற 28–ந் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பகல் வேளையில் வழக்கத்தை விட கடுமையாக சுட்டெரிக்கும் வகையில் வெயில் அடிக்க தொடங்கி விட்டது. சேலம் மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக வெயில் 106 டிகிரியை தொட்டு உள்ளது. ஆனால், நேற்று 101.2 டிகிரிதான் வெயில் பதிவாகி இருந்தது.

அனல் காற்று வீசும்
 கடுமையான வெயில் காரணமாக சாலையில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். வெயில் காரணமாக பகலில் இருசக்கர வாகனத்தில் செல்வோரின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
சாலையில் நடந்து செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் தலையில் துப்பட்டாவை போர்த்தியவாறு செல்கிறார்கள். சில பெண்கள் மொபட்டில் செல்லும்போது கண்கள் மட்டும் தெரியும் வகையில் வைத்துக்கொண்டு முகத்தை முற்றிலும் துணியால் மறைத்துள்ளனர். சிலர் குடையை பிடித்து கொண்டும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.

நீச்சல் குளத்தில் கூட்டம் 
 வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு, மோர், கம்மங்கூழ் மற்றும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை பருகி வருகிறார்கள். மேலும் கரும்பு ஜூசும் உடல் உஷ்ணத்தை குறைக்ககூடியது என்பதால் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் ‘சன்கிளாஸ்‘ மூக்கு கண்ணாடியை அணிவதும் அதிகரித்துள்ளது. வெயிலின் அவஸ்தையால் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீட்டில் மின்விசிறியை தவிர்த்து ஏர்கூலர், ஏ.சி.யை பொதுமக்கள் உபயோகிப்பதும் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதே வேளையில் கோடை விடுமுறை விடப்பட்டு வீட்டில் இருக்கும் மாணவர்கள், பொதுமக்கள் சேலம் அரசு நீச்சல் குளத்தில் குளித்து தங்களது உடலை உஷ்ணத்தில் இருந்து தவிர்த்து வருகிறார்கள். இதனால், தினமும் நீச்சல் குளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024