Friday, May 26, 2017

ஹலோ...நான் இன்னும் சாகல!

2017-05-25@ 14:46:26




நன்றி குங்குமம் டாக்டர்

இறந்தவர் எழுந்தால்...

இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு இறுதி சடங்கு செய்துகொண்டிருக்கும்போது, தூக்கம் கலைவது போல திடீரென அவர் எழுந்தால் எப்படி இருக்கும்? சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் முதியவர் ஒருவர் இதுபோல் திடீரென எழுந்ததால் பலரும் அதிர்ச்சியாகி அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள். ஊடகங்களிலும் அடிக்கடி இதுபோன்ற செய்திகளைக் கேள்விப்படுகிறோம். ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்பதை எப்படி உறுதிப்படுத்த வேண்டும் என்ற சந்தேகத்தைப் பொதுநல மருத்துவர் சுந்தர ராமனிடம் கேட்டோம்.

‘‘ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்பதை சில மருத்துவப் பரிசோதனைகளை செய்து உறுதிப்படுத்திய பின்னரே அறிவிக்க வேண்டும். டார்ச் அடிக்கும்போது கண்கள் விரிந்து சுருங்கும் தன்மை இல்லாமல் இருப்பதை வைத்து கண்டுபிடிக்கும் Pupillary reflex test, தலையை நேராக நிமிர்த்தி வலது பக்கம் திருப்பும்போது கருவிழி அதன் எதிர்திசையான இடதுபுறமாகத் திரும்புவது, அதேபோல் தலையை நேராக நிமிர்த்தி இடது பக்கம் திருப்பும்போது கருவிழிகள் அதற்கு எதிர்திசையான வலது பக்கம் திரும்புவதை வைத்து உறுதிப்படுத்தும் Dolls eye movement, சுவாசிக்கும் திறனை உறுதிப்படுத்தும் Apnea test, முக்கியமாக மூளைச்சாவை உறுதிப்படுத்துகிற EEG test போன்ற பரிசோதனைகளின் மூலம்தான் இறப்பை உறுதி செய்ய வேண்டும்.

சிலர் தவறுதலாக நாடித்துடிப்பு இல்லாததை மட்டுமே வைத்து இறந்ததாக உறுதி செய்துவிடுவதுண்டு. அதனால்தான் இதுபோன்ற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். எனவே, ஒருவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதை தகுதிவாய்ந்த மருத்துவர் மூலமே உறுதிசெய்துகொள்ள வேண்டும். சாதாரண மயக்க நிலையை வைத்தோ, நாடித்துடிப்பு குறைந்திருப்பதை வைத்தோ அவசரப்பட்டு ஒருவர் உயிரிழந்துவிட்டார் என்றமுடிவுக்கு வரக்கூடாது’’என்கிறார்.

- க.இளஞ்சேரன்
படம் ஆர்.கோபால்

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024