Tuesday, May 2, 2017

மூன்று நாள்களில் ரூ. 500 கோடி வசூலை அள்ளியது பாகுபலி 2

By DIN  |   Published on : 01st May 2017 03:28 PM  |
baahubali_2_90xxcc

ஒரு இந்தியப் படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 500 கோடி வசூல் அடைவது சாத்தியமா?

கனவில் கூட நினைக்கமுடியாத இந்த வசூலை அடைந்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது பாகுபலி 2.

முதல் நாளன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் சேர்த்து ரூ. 121 கோடி அள்ளியது. ஹிந்தியில் ரூ. 41 கோடியும் இதர மொழிகளில் ரூ. 80 கோடியும் கிடைத்தது. அதன்பிறகு நாளுக்கு நாள் அதன் வசூல் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

ஹிந்தி பாகுபலி 2 இந்தியாவில் முதல் மூன்று நாள் வசூலாக ரூ. 128 கோடியைப் பெற்றுள்ளது. வெள்ளியன்று ரூ. 41 கோடி, சனி ரூ. 40.5, ஞாயிறு ரூ. 46.5 கோடி. இது ஒரு சாதனை வசூல். சுல்தான், டங்கல் படங்களை விடவும் டப்பிங் படமான பாகுபலி 2 அதிக வசூல் அள்ளியிருப்பது பாலிவுட்டை அசரவைத்துள்ளது. ஹிந்திக்கு என எந்தவொரு பாலிவுட் நடிகர்களையும் படத்தில் நுழைக்காமல் தென்னிந்திய நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட பாகுபலி 2, முதல் மூன்று நாள் வசூலில் இதர ஹிந்திப் படங்களின் வசூலை மிஞ்சியிருப்பது மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது முதல் மூன்று நாள்களில் இந்தியா முழுக்க ரூ. 385 கோடி வசூலாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் இதன் சாதனைப் பயணம் தொடர்கிறது.

வட அமெரிக்காவில் முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 65 கோடி வசூல் கிடைத்துள்ளது. அமெரிக்காவில், கடந்த வார இறுதியில் அதிக வசூல் பெற்ற படங்களில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது பாகுபலி 2. இதனால் ஹாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு இந்தியப் படத்தால் டாப் 10-ல் இடம் பிடிக்கமுடியும் என்று நிரூபித்துள்ளது. வெளிநாடுகளில் முதல் மூன்று நாள்களில் ஒட்டுமொத்தமாக ரூ. 120 கோடி கிடைத்துள்ளது.  

இதையடுத்து உலகம் முழுக்க முதல் மூன்று நாள்களில் ரூ. 500 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று இதுவரையிலான அத்தனை சாதனைகளையும் உடைத்துள்ளது பாகுபலி 2. இதற்கு முன்பு வேறு எந்த இந்தியப் படமும் வசூலில் இத்தகைய சாதனைகளைப் படைத்ததில்லை. ஒரே மொழியில் என இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என நான்கு மொழிகளிலும் வசூலில் சாதனை படைப்பதால் ஒட்டுமொத்தமாக இத்தகைய வலுவான வசூலைப் பெறமுடிகிறது.

இன்று விடுமுறை தினம். கோடை விடுமுறை காலம் வேறு. எனவே இந்தப் படத்தின் வசூலும் சாதனை முறியடிப்புகளும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024