கல்வி சிறந்த தமிழ்நாடு!!
By ஆசிரியர் |
Published on : 01st May 2017 02:26 AM |
கல்வித்
துறையில் தமிழகத்துக்கு சிறப்பான இடமிருந்த காலம் ஒன்று இருந்தது. அந்தத்
தலையாய இடம், இப்போது டஜன் கணக்கில் பல்கலைக்கழகங்கள் வந்துவிட்ட நிலையில்
மேலும் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல,
தமிழகத்திலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும் சர்வதேச அளவில் கல்வியின்
தரத்துக்காக உயர்த்திப் பிடிக்கப்படுகிறதா என்றால் இல்லை. சில தனியார்
தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களால் தமிழகத்தில் மானம் காப்பாற்றப்பட்டு
வருகிறது என்பதுதான் உண்மை நிலை.
பள்ளிக் கல்வியின் தரமே கேள்விக்குறியாக இருக்கிறது. தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் நமது மாணவர்களால் போட்டியிட முடியாது என்று கூறி விலக்குக் கேட்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோமே தவிர, ஏனைய மாநிலங்களின் கல்வித் தரத்தைவிடத் தமிழகத்தின் கல்வித் தரம் உயர்ந்தது என்று நெஞ்சை நிமிர்த்தி நம்மால் சொல்லிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் உயர்கல்வியில் நாம் சர்வதேச அளவில் போட்டி போட முடியாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
தமிழகத்தின் முக்கியமான மூன்று பல்கலைக்கழகங்கள் சென்னை, மதுரை காமராசர், அண்ணா பல்கலைக்கழகங்கள். இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடந்த 2015 ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் துணைவேந்தர் இல்லாமல் இயங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த இரா. தாண்டவன் கடந்த 2016 ஜனவரி 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இன்று வரை, அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படாமல் பல்கலைக்கழக நிர்வாகம் இயங்கி வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் முக்கியமான தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. சுமார் 426 சுயநிதித் தனியார் பொறியியல் கல்லூரிகளும், ஆறு அரசுப் பொறியியல் கல்லூரிகளும், மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் இந்தப் பல்கலைக்கழத்தின்கீழ் இயங்குகின்றன. அப்படிப்பட்ட முக்கியமான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம். ராஜாராமின் பதவிக் காலம் கடந்த 2016 மே 26-ஆம் தேதி முடிவடைந்தது. அங்கு இன்னும் அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே அடுத்த துணைவேந்தரைப் பரிந்துரைக்க தேடல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதேபோல, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான தகுதியாளர்களைப் பட்டியலிட துணைவேந்தரின் பதவிக் காலம் முடிவடைவதற்குப் பத்து நாள்களுக்கு முன்பே தேடல் குழு அமைக்கப்பட்டு விட்டது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் ராஜாராமின் பதவிக் காலம் முடிந்து ஆறு மாதத்திற்குப் பிறகுதான் தேடல் குழுவே அமைக்கப்பட்டது என்றால் எந்த அளவுக்கு இங்கு கல்வி முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நியாயமாக ஆட்சியாளர்களுக்கும் துணைவேந்தர் நியமனங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கக் கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவுதான் துணைவேந்தர் நியமனங்கள் தாமதிக்கப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுமானால், நமது நிர்வாக துறையில் ஏதோ கோளாறு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 2015 ஏப்ரல் மாதத்திலும், 2016 ஜனவரி மாதத்திலும், 2016 மே மாதத்திலும் மதுரை, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பதவிக் காலம் முடிவடைந்தபோது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நமது நிர்வாக இயந்திரத்தின் மெத்தனத்திற்கு முதல்வரின் உடல்நலக் குறைவு காரணமாக்கப்படுவதை ஏற்க முடியாது.
துணைவேந்தர் இல்லாத நிலையில், உயர்கல்வித் துறைச் செயலரின் தலைமையிலான குழுவால் பல்கலைக்கழகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அதிகாரிகளால் எப்படி பல்கலைக்கழத்தின் அன்றாடப் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும்? துணைவேந்தர் இல்லாததால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஆண்டு நடைபெறவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது சென்னைப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.
பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள், புதிய பாடத்திட்டங்களைப் புகுத்துதல் போன்ற எல்லா செயல்பாட்டிற்கும் துணைவேந்தரின் பங்களிப்பு அவசியம். துணைவேந்தர் இல்லாததால் தமிழகத்தின் முக்கியமான மூன்று பல்கலைக்கழகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததோடு பதிவாளரும்கூட இல்லாத நிலைமை. தமிழகத்திலுள்ள13 பல்கலைக்கழகங்களில் 9 பல்கலைக்கழகங்களுக்கு முழுநேர பதிவாளர் நியமிக்கப்படவில்லை; எட்டு பல்கலைக்கழகங்களில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவி நிரப்பப்படவில்லை.
இத்தனை பிரச்னைக்கும் காரணம் தமிழக அரசு மட்டும்தானா என்றால் இல்லை. தேடல் குழுக்களின் பரிந்துரைகள் ஆளுநர் மாளிகையில் தேங்கிக் கிடக்கின்றன. பத்து நாட்களுக்கு முன்னால் முக்கியத்துவம் இல்லாத தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமித்திருக்கிறார் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். அந்த முக்கியத்துவம் சென்னை, மதுரை காமராஜர், அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு தரப்படாததன் காரணத்தை அவர்தான் விளக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் வேந்தராக இருப்பவர் மாநில ஆளுநர். தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரே நியமிக்கப்படாமல் இருக்கும்போது பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
No comments:
Post a Comment