Tuesday, May 2, 2017

வனமில்லையேல் மழையில்லை

By எஸ். பாண்டி  |   Published on : 01st May 2017 02:29 AM  |   

தேனி மாவட்டத்தில் வெள்ளிமலைப் பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகையாறு தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் நீர்த் தேவையை பல ஆயிரம் ஆண்டுகளாக தீர்த்து வந்தது.
ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின் சாகுபடி முறையில் மாற்றம் செய்ததால், நீர்த்தேவை அதிகரித்தது. பருவமழையும் மாறி, மாறி பெய்ததால் சீரான அளவில் நீர்வரத்தும் இல்லை.

இதனால் அதிக அளவு நீர்வரத்து இருக்கும் காலங்களில் அதனை தேக்கி வைத்து வறட்சி காலங்களில் பயன்படுத்துவதற்காக ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது.

கட்டப்பட்டதில் இருந்து இதுவரை 28 முறை இந்த அணை, தன் முழு கொள்ளளவை எட்டிப் பிடித்துள்ளது. இதில், 1,38,102.45 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலந்துள்ளது என்பது வேதனையான விஷயம்.

ஆனால் இந்த நீரை கண்மாய் மற்றும் குட்டைகளில் தேக்கி வைக்க முடியாமல் போனதற்கு காரணம், அவற்றை முறையாகத் தூர்வாராமல் விட்டதுதான்.

மேலும் வைகை அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், தற்போது அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 20 அடிக்கு மேல் சேறும், சகதியுமாக கிடக்கிறது. இந்த சேறு, சகதியை அகற்ற இதுவரை ஆண்ட எந்த அரசும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்குவது வருசநாடு அருகே உள்ள மூல வைகையாகும். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதி சூற்றுச்சூழல் பூங்கா போன்றது. இங்கு யானை முதல் பல்வேறு வகையான விலங்கினங்கள் உள்ளன.

அதோடு அரியவகை மரங்களும் சிங்கவால் குரங்கு, இருவாட்சிப் பறவை, சாம்பல் நிற அணில் போன்ற அரியவகை பறவை,விலங்கினங்களும் உள்ளன. இங்கு உள்ள வெள்ளிமலைப் பகுதியில் மழை தரும் மரங்களான சோலா, ஆல், அரசு போன்ற மரங்களை வெட்டி சாய்த்து விட்டு, வெப்பக் காற்றை வெளியிடும் இலவம் மற்றும் முந்திரி மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாததால் கேரள வனப்பகுதிக்கு விலங்குகள் இடம் பெயர்ந்து செல்கின்றன. இதனால் பருவநிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, மழை பொய்த்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் மூல வைகையாற்றில் எப்போதும் நீர்வரத்து இருக்கும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக நீரின்றி இந்த ஆறு வறண்டு காணப்படுகிறது. மரங்களை வளருங்கள் என்று கூறுவோர், வெள்ளிமலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக வனங்களை அழிப்பவர்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் பலர் போராடினர். அவர்கள் அன்று போராடியதன் விளைவுதான் இன்று வைகை அணையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி.

எனவே உடனடியாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் நாம் அகற்றியாக வேண்டும்.

மழையை வரவழைக்கும் மரங்களான சோலா, ஆல், அரசு போன்ற மரக்கன்றுகளை வனப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். நீர்வரத்துகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மரக்கன்றுகளை நடுவதால் மழை பொழிவது நிச்சயம் என்று இயற்கை ஆர்வலர்கள் உறுதி கூறுகிறார்கள்.
அண்மையில் வைகை நதியில் தெர்மகோல் மிதக்க விடப்பட்ட திட்டம் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. எந்த அரசியல்வாதியும் தண்ணீர் பற்றாக்குறையை பற்றி கவலைப்படாத நேரத்தில் அதைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓர் அமைச்சர் நினைத்தது நல்ல விஷயம் தான்.

ஆனால் தண்ணீரை மூட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக மழையை பெறுவது தான் நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என நீரியல் நிபுணர்ககள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீட்டுக்கழிவுகள், மண் கழிவுகள் மற்றும் இறந்த உயிரினங்களின் உடல்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு வைகை அணையை வந்தடையும் போது, அவற்றை மீன்கள், நண்டுகள், நீர்க்காக்கைகள், கூழைக்கிடா போன்ற உயிரினங்கள் உட்கொண்டு வந்ததால் நீர் சுத்தமாக்கப்பட்டது.
அவ்வாறு இருக்கும் போது தெர்மகோலை அணை தண்ணீரில் மிதக்க விட்டால் அதில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது. அணை நீரில் உள்ள அனைத்து உயிரினமும் அழிந்து விடும்.

இதனால் தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே அறிவுபூர்வமாக சிந்தித்து வெள்ளிமலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும்.
அத்துடன் வைகை அணையை தூர்வாருவதுடன் ஐந்து மாவட்டங்களில் உள்ள கண்மாய், நீராதாரங்களையும் தூர்வாரி மேம்படுத்த வேண்டும்.
இவை நடைபெற்றாலே பருவமழை தவறாமல் பெய்து, ஆண்டு முழுவதும் ஐந்து மாவட்டங்களுக்கும் வறட்சி இல்லாமல் போகும்.

எனவே குளுகுளு அறையில் அமர்ந்து யோசிக்காமல், களத்தில் இறங்கி நடை
முறைக்கு ஏற்றதை செயல்படுத்தி வறட்சியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024