அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களை இணைத்து 'வாட்ஸ் ஆப்' குழு: சென்னை காவல் ஆணையர் உத்தரவு
By DIN |
Published on : 05th May 2017 04:58 AM |
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொதுமக்களுடன் நல்லுறவை பேணுவதற்கு சென்னை காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த பகுதி பொதுமக்களை இணைத்து கட்செவி அஞ்சலில் குழு தொடங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் இந்த குழுவுக்கு அட்மினாக இருந்து, குழுவை தொடங்குவார். இக்குழுவில் காவல் துறை சார்பில் குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், பீட் ஆபீசர்கள், ரோந்து காவலர்கள் ஆகியோர் இருப்பார்கள்.
பொதுமக்கள் தரப்பில் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், வங்கி மற்றும் அரசு ஊழியர்கள், பள்ளி,கல்லூரி முதல்வர்கள், வணிக வளாகம் மற்றும் ஹோட்டல் பாதுகாப்பு பிரிவு மேலாளர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், வயோதிகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் இருப்பார்கள்.
இந்த குழுக்களை அந்தந்த பகுதி உதவி காவல் ஆணையர்களும், காவல் மாவட்ட துணை ஆணையர்களும் கண்காணிப்பார்கள். இந்த குழுவில் காவல் துறை தொடர்பான பொதுமக்களின் குறைகள், தகவல்கள் பரிமாறப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் ஆகியோர் இது தொடர்பான ஆய்வுக் கூட்டங்களை நடத்துவார்கள்.
இந்த குழுவின் மூலம் பொதுமக்கள் எளிதாக குற்றம் தொடர்பான தகவல்களை போலீஸாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, போக்குவரத்து பிரச்னைகள் தொடர்பான புகைப்படம், விடியோ தொகுப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளிக்க முடியும். அதேவேளையில் காவல் துறை, குற்ற விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் எளிதாக கொண்டு செல்ல முடியும். வயோதிகர்கள் வீட்டில் இருந்தபடியே, தங்களது பிரச்னைகளை போலீஸாரிடம் தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment