Friday, May 5, 2017

நல்ல நல்ல பிள்ளைகள்

By லோ. வேல்முருகன்  |   Published on : 05th May 2017 01:23 AM  |  

இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பெரிய பெரிய தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதற்கு காரணம் படிப்பின் அருமையை அவர்கள் உணர்ந்துள்ளது. மற்றொன்று தங்களால் படிக்க இயலாததை தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதும் தான்.

இவ்வாறு பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்கள் சக்திக்கு அதிகமாக செலவு செய்து படிக்க வைக்கின்றனர். அதனுடன் நில்லாமல் வெளியில் டியூசனுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வரை குழந்தைகள் படிக்கும் சூழ்நிலை உள்ளது. பெரும்பாலான வீடுகளில் விடுமுறை நாள்களில் மட்டும் குழந்தைகளை தந்தை பார்க்கும் நிலை உள்ளது.

இவ்வாறு பார்த்து பார்த்து வளர்க்கப்படும் குழந்தைகள் வெளியுலகம் தெரியாமலேயே வளர்க்கப்படுகின்றனர். பள்ளிகளில் பாடங்களை தவிர்த்து வெளியுலகில் நடக்கும் நிகழ்வுகளையும் கற்றுத் தரவேண்டும். ஆனால் அதற்கு பள்ளிகளுக்கு போதுமான நேரம் இல்லை.

முன்பெல்லாம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகள் செய்வதற்கென்று தாய்மார்கள் ஒரு சில வேலைகள் வைத்திருப்பர். அந்த வேலைகளை செய்த பின்னர் தான் விளையாட்டு படிப்பு எல்லாம். மளிகைக் கடைக்கு அனுப்புவது, தண்ணீர் எடுத்து வருதல் உள்ளிட்ட சிறு சிறு வேலைகள் அதில் அடங்கும்.
அதுபோன்று சிறு சிறு வேலைகளுக்கு குழந்தைகளை அனுப்பும் போது அவர்களுக்கு வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், குடும்ப கஷ்டங்கள் ஆகியவைகள் தெரியவரும். மளிகைக்கடை போன்ற கடைகளுக்கு அனுப்பும் போது அம்மா கூறும் மளிகை சாமான்களை மறக்காமல் வாங்கி வர வேண்டும் என்பதற்காக அந்த குறிப்பிட்ட பெயர்களை மனதில் திரும்ப திரும்பக் கூறி ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பர்.

இதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் கடையில் வாங்கிய பொருள்களுக்கு பணத்தை கொடுத்து மீதி சில்லறை பெறும் போது மனக்கணக்கு போடும் பழக்கமும், சிறு சிறு கணக்குகளில் ஒரு புரிதலும் கிடைக்கும். ஒரு சில நேரங்களில் கூட்டம் குறைவாக இருந்தால் கடைக்கு சென்றவுடன் பொருள்களை வாங்கி வரலாம்.
கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் சற்று நேரம் காத்திருந்து பொருள்களை வாங்க வேண்டும். இது போன்ற அணுகுமுறையால் காத்திருத்தல் என்ற ஒன்று பழக்கத்தில் வருகிறது. சகிப்புத்தன்மை கிடைக்கிறது. வாங்கிய பொருள்களை பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

தந்தை கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் பொருள்களை வாங்கி வந்து உணவு சமைப்பதால், அந்த உணவை வீணாக்கக் கூடாது என்ற எண்ணம் வரும்.
ஆனால் இன்று குழந்தைகளை மளிகைக் கடைக்கு அனுப்புவதும், வீட்டில் சிறு சிறு வேலைகள் செய்ய சொல்வதும் கிடையாது. ஏனென்றால் பள்ளிக்கு சென்றுவிட்டு களைப்புடன் வரும் குழந்தைகளை வேலை சொல்ல பெற்றோருக்கு மனம் வருவதில்லை.

மேலும் தற்போது அன்றாட தேவைகளுக்கென யாரும் தினந்தோறும் மளிகைக் கடைக்கும் செல்வதில்லை. சூப்பர் மார்கெட்டில் வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி இருப்பு வைத்து விடுகின்றனர்.

இவ்வாறு பிள்ளைகளை வேலை வாங்கும் மனம் பெற்றோருக்கு வராததால், பிற்காலத்தில் வீட்டில் எந்தவொரு வேலையையும் அவர்கள் செய்ய முன்வருவதில்லை. இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் தலைதூங்க துவங்குகின்றனர்.

எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெளியுலகை காட்ட வேண்டும். அங்கு மற்ற மனிதர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். இக்கட்டான சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறுங்கள்.

கோடைகால விடுமுறைகளில் நேரம் ஒதுக்கி வங்கி, அஞ்சலகம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்றவற்றுக்கு அழைத்து செல்லுங்கள். வங்கியில் பணம் டெபாசிட் செய்வது, எடுப்பது, காசோலைகள், வரவோலைகள் எடுப்பது அதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் உள்ளிட்டவைகளை நேரடியாக பார்த்து அறிய செய்யுங்கள்.

ரயில், பேருந்து நிலையங்களில் முன்பதிவு செய்வது, முன்பதிவை ரத்து செய்யும் முறை, நகரப் பேருந்துகள் நிற்குமிடம், வெளியூர் செல்லும் பேருந்துகள் நிற்குமிடம் ஆகியவற்றை கட்டாயம் சொல்லித் தரவேண்டும்.
ஏனென்றால் தற்போது அனைத்து ஊர்களிலும் இரண்டு பேருந்து நிலையங்கள் இருக்கும் நிலையில், பெரியவர்களே சில நேரங்களில் எந்த பேருந்து நிலையத்தில் எந்த பேருந்துகள் வரும் என்று தெரியாமல் குழம்பும் நிலை உள்ளது.

இதுபோன்று நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது நிச்சயம் அவர்களுக்கு ஒருநாள் உதவியாக இருக்கும். ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு, உடை, இருப்பிடம். அதுபோல் இதுபோன்ற அடிப்படை விஷயங்களையும் சிறு வயது முதலே கற்று கொடுத்தல் வேண்டும்.

நாம் அன்றாடம் உச்சரிக்கும் வார்த்தைகளை அழகானதாக உச்சரிக்க குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். இந்த வார்த்தை பிரயோகம் என்பது பெரும்பாலான பெற்றோர்களிடத்திலேயே இருப்பது இல்லை. அப்படி இருக்கையில் எப்படி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும்?
எனவே பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம். எல்லாவற்றையும் அவர்கள் கற்று கொடுத்து விடுவார்கள். பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டியது தான் நம் கடமை என்றிருக்கக்கூடாது.

இது போன்ற அடிப்படை விஷயத்திலும் கவனம் செலுத்தி நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்று தந்தால் குழந்தைகள் சமுதாயத்தில் உயரிய இடத்துக்கு செல்வர்.

No comments:

Post a Comment

Metro Rail begins trial run of its first driverless train

Metro Rail begins trial run of its first driverless train On track: One of the challenges is to complete the laying of the track between Poo...