சுற்றுச்சூழல் காப்போம்
By பாறப்புறத் இராதாகிருஷ்ணன் |
Published on : 04th May 2017 01:22 AM |
பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாட்டால் சுற்றுப்புறச் சூழல் மாசு, கடல் வளம், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, மண் வளம், விலங்கினங்களுக்கு ஆபத்து என்பது தொடர் கதையாகி விட்டது. நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகி பூமிப் பந்தை அசுத்தமாக்கி வருகின்றன.
பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் மக்க பல ஆண்டுகளாகும். மழை நீர் மண்ணில் புக முடியாமல் போவதோடு, நிலத்தடி நீர் ஊற்றுக் கண்களை மறைத்து, தாவரங்கள் வளராமல் தடுப்பதற்கும், மழை இன்மைக்கும் காரணமாகிறது.
இதனால், சுற்றுச்சூழல் பாதிப்படைந்து மனிதர்களுக்கு பல நோய்கள் வர காரணமாவதுடன், கால்நடைகள் உட்பட இந்தப் பூமியில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள் மெல்ல அழிந்து வருகின்றன.
முன்பெல்லாம் கடைகளுக்குப் போனால் துணிப் பையுடன் போவோம்.கடைக்காரரும் செய்தித் தாள்களில் பொருள்களை லாவகமாக மடித்து சணல் கயிற்றில் கட்டிக் கொடுப்பார்.
இன்று, சூப்பர் ஸ்டோர்களும், மால்களும் பெருகி விட்ட நிலையில், ஏற்கெனவே பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி வைக்கப்பட்ட பொருள்களை சுயசேவையின் மூலமே எடுத்து கணினி மூலமாக விலைப் பட்டியல் பெற்று பின்னர் பணம் கொடுத்து வாங்கி வருகிறோம்.
முன்பெல்லாம் உணவகங்களில் உணவுப் பொருள்களை இலையில் மடித்துக் கொடுப்பார்கள். அவைகளை தூர எறிந்தாலும் எளிதில் மக்கி விடும். இட்லி, தோசை போன்ற உணவு வகைகளை இலையில் மடித்தும், சாம்பார், ரசம், சட்னி, தேநீர் போன்ற திரவ உணவுகளை பாத்திரம் மற்றும் குவளைகளில் ஊற்றியும் கொடுத்தக் காலம் மறைந்து விட்டது.
பெரும்பாலான உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பாலிதீன் தாள்களும், பைகளுமே பயன்படுத்தப்படுகின்றன.
வாழை இலையில் உணவு சாப்பிட்டால் வயிறு உபாதைகள் ஏற்படாது. இலையில் உள்ள பச்சையம் குடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். சில உணவகங்களில் மருத்துவ குணம் கொண்ட வாழை இலைக்குப் பதில் மெல்லிய பாலிதீன் தாள்களில் உணவு வழங்கப்படுகிறது. இதில் சாப்பிடுவோர் ஒவ்வாமை, வயிற்றுப் போக்கால் அவதிப்படுகின்றனர்.
அதாவது, சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக், பாலிதீன் பைகளில் கொண்டு செல்வதால், சூடு மற்றும் எண்ணெய் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான வேதிப் பொருள்கள் உணவு பொருள்களுடன் கலந்து அவை புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் தைராய்டு நோய் ஏற்படவும் காரணமாகிறது.
சில உணவகங்களில் வாழை இலை போன்ற பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துகின்றனர். இதில் சூடான உணவுகளை பரிமாறும்போது, அதிலுள்ள மெழுகு உணவுடன் கலக்கிறது. பச்சை நிற சாயம் உணவுடன் கலந்து உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.
இந்தப் பச்சை செயற்கை இலைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், பிளாஸ்டிக் தாளில் சூடாக உணவு பொருள்களை வைத்து உட்கொள்வது தவறு என்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடைகளில் மட்டுமே அவசரத் தேவைகளுக்காக விற்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் இன்று கெளரவப் பொருளாகி திருமணம் உட்பட அனைத்து விழாக்களிலும் புகுந்துவிட்டது.
பயன்படுத்தபட்டு மீதமுள்ள நீருடன் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களால், கிடைத்தற்கரிய நீரும் வீணாவதுடன் அந்தப் பாட்டில்களுக்குள் கொசுக்களும் புகுந்து சுற்றுப் புறங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு நோய்களைத் தருகின்றன.
உலகில் சீனாவும், பங்களாதேஷும் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவதை தடை செய்துள்ளன. இந்தியாவில் 40 மைக்ரானுக்கும் குறைவான பாலிதீன் பைகள் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பழங்கால கட்டடங்கள், கோயில்கள் போன்றவற்றில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளிலும் பாலிதீன் பைகளின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், சபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்கள், பாலீதீன் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல நடவடிக்கையை அனைத்துத் திருக்கோயில்களிலும் பின்பற்றலாம்.
எதிர்கால சந்ததியினரையும், பூமியையும் காக்க வேண்டுமென்றால் பொருள்கள் வாங்க கடைக்குச் செல்லும் போது துணி பைகளையே எடுத்துச் செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவில்லையெனில், கடல் வளமும், நில வளமும், நீர் வளமும் முற்றிலும் அழிந்து விடும்.
குழந்தைகளுக்கும் பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகளைக் கற்றுத் தர வேண்டும். அரசும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கவும், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பாலீதீன் பைகளை, மெழுகு தடவிய கப்களை உபயோகப்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
இயற்கையும், சுற்றுச் சூழலும் மாசடையாமல் இருக்க பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை தவிர்ப்போம்; தூய்மை இந்தியா உருவாகப் பாடுபடுவோம்.
No comments:
Post a Comment