'மிஞ்சியது எதுவும் இல்லை... எஞ்சியது வெறுங்கைதான்!' - சவுதியிலிருந்து திரும்பியவர்கள் நிலை
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க, அந்நாட்டு அரசு வழங்கிய பொது மன்னிப்பைப் பயன்படுத்தி, 20 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்.இப்போதெல்லாம் சட்டப்படி தண்டனை வழங்கி சிறையில் அடைப்பதைவிட, 'பொது மன்னிப்பு ' கொடுத்துவிடவே சவுதி அரசு விரும்புகிறது. 'விசா முடிந்தும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள், வொர்க் பெர்மிட் இல்லாமல் பணிபுரிபவர்கள் எனச் சட்டத்துக்குப் புறம்பாகத் தங்கியிருப்பவர்கள் 90 நாள்களுக்குள் தாங்களே முன்வந்து ஒப்புக்கொண்டுவிட்டால், தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்; எந்தப் பிரச்னையும் இல்லாமல் தாயகம் திரும்பலாம் ' என சவுதி அரசு அறிவித்திருந்தது. சவுதி அரசின் இந்த அறிவிப்புக்கு, அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மே 1-ம் தேதி வரை சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 20,321 இந்தியர்கள், தாய்நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இதில், 1,500 தமிழர்களும் உள்ளனர்.
விண்ணப்பித்தவர்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம். கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் கடைநிலைத் தொழிலாளர்கள் இவர்கள். ரியால், ரூபாயாக மாறும்போது கிடைக்கும் கூடுதல் தொகைக்கு ஆசைப்பட்டு சவுதி சென்றவர்கள்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகவேல் கலீஜ் `டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், 'சவுதியில் விசா காலம் முடிந்த பிறகும் நான்கு ஆண்டுகள் தங்கி பல இடங்களில் வேலை பார்த்துவிட்டேன். யாருமே முறையான சம்பளம் தரவில்லை. இங்கே இருப்பதைக் காட்டிலும் தாயகம் திரும்புவது நல்லது என முடிவுசெய்துவிட்டேன். கிடைக்க வேண்டிய சம்பளமும் கிடைக்கவில்லை; தங்கியிருந்த இடமும் படுமோசம். நல்ல சாப்பாடுகூட சாப்பிடவில்லை. இத்தனை ஆண்டுகளாக இங்கே தங்கியிருந்து நான் சம்பாதித்தது என்று எதுவுமே இல்லை. கஷ்டப்பட்டு வேலைபார்த்தால் குடும்பத்தைக் கரை சேர்த்துவிடலாம் என்ற நினைப்பில்தான் இங்கே வந்தேன். எனது நினைப்பில் மண் விழுந்துவிட்டது. வெறுங்கையுடன்தான் தமிழ்நாட்டுக்குப் போகிறேன். அங்கே போய் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை' என்று வேதனையுடன் கூறியுள்ளார். முருகவேல் மட்டுமல்ல, சவுதியில் கூலிவேலைக்குச் சென்றிருக்கும் இந்தியர்களின் உண்மைநிலை இதுதான். மிஞ்சியது என்று எதுவும் இல்லை; எஞ்சியது வெறுங்கைதான்.
சவுதியில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு, பொது மன்னிப்பு வழங்குமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டது. இதை ஏற்றுதான் சவுதி அரசு 'பொது மன்னிப்பு' அறிவித்தது. விண்ணப்பிப்பவர்கள் அவர்களது சொந்த பணத்தில்தான் நாடு திரும்ப வேண்டும். பாஸ்போர்ட் இல்லாத நிலையில் அவர்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறும் வகையில் இந்தியத் தூதரகம் வழியாகப் போக்குவரத்துக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். சவுதியில் உள்ள இந்தியத் தூதரகம் தேவையான உதவிகளை இந்தியர்களுக்குச் செய்துவருகிறது.
சவுதியில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி அனில் கூறுகையில், ``சவுதி முழுவதும் 21 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டும் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பயன்படுத்திக்கொள்ள முன்வராதவர்கள், இப்போதாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்தியத் தூதரகத்தில் அனைத்து உதவிகளும் கிடைக்கும் '' எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment