Thursday, July 6, 2017

மருத்துவ படிப்புகளுக்கு கட்டணம் நிர்ணயம் : நிகர்நிலை பல்கலைகளுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள் 05 ஜூலை
2017
23:34

சென்னை: தமிழகத்தில் உள்ள நிகர்நிலை மருத்துவ பல்கலைகளில் மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி 10 நிகர்நிலை பல்கலைகள் மற்றும் தமிழக அரசு பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,க்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப் பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஜவகர்லால் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனு:

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை அரசு அமைத்துள்ள குழு நிர்ணயித்துள்ளது. நிகர்நிலை பல்கலைகளைப் பொறுத்தவரை, அரசு நியமித்த கட்டண நிர்ணயக் குழு எந்த கட்டணத்தையும் நிர்ணயிக்கவில்லை. அதனால், நிகர்நிலை பல்கலைகள் தங்கள் விருப்பம் போல் கட்டணங்களை நிர்ணயித்து கொள்கின்றன. அரசு மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 13 ஆயிரத்து 600 ரூபாய், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2.5 லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 10 முதல் 21 லட்சம் ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிகர்நிலை மருத்துவ பல்கலைகளை அரசியல் பின்னணி, செல்வாக்கு உடையவர்கள் நடத்துகின்றனர். லாப நோக்கில் தான் மருத்துவ கல்லுாரிகள் நடத்தப்படுகின்றன. வர்த்தக நோக்கில் அதிக கட்டணத்தை நிகர்நிலை பல்கலைகள் வசூலிப்பதால் தமிழக அரசுக்கு இரண்டு மனுக்களை அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நிகர்நிலை பல்கலைகளின் நிதிநிலை அறிக்கையை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை நிகர்நிலை மருத்துவ பல்கலைகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜரானார். தமிழகத்தில் உள்ள 10 நிகர்நிலை பல்கலைகளையும் வழக்கில் சேர்த்து முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. மனுவுக்கு பதிலளிக்கும்படி நிகர்நிலை பல்கலைகளுக்கும், தமிழக அரசு, மருத்துவ கவுன்சில், யு.ஜி.சி.,க்கும், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 17க்கு தள்ளிவைத்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024