Thursday, July 6, 2017

நிகர்நிலை மருத்துவப் பல்கலை மாணவர் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பதிவு செய்த நாள் 05 ஜூலை
2017
23:41

மதுரை: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு பட்டியலில், தமிழக நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளை சேர்க்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி வள்ளியூர் முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: 'நீட்' தேர்வுக்கு பின், மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறை துவங்கிஉள்ளது.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகள்படி, மருத்துவக் கல்லுாரிகளில் பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் அரசு, தனியார், நிகர்நிலை மருத்துவப் பல்கலைகள் உள்ளன. இவற்றில், விதிகள்படி அகில இந்திய ஒதுக்கீடு அடிப்படையில் 15 சதவீத இடங்கள் நிரப்பப்படும். மாநில அரசு நிறுவிய மருத்துவக் கல்லுாரிகள், சிறுபான்மை மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளில், பொது கலந்தாய்வு அடிப்படையில் 85 சதவீத இடங்களை நிரப்ப மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு கையேட்டில், நிகர்நிலை மருத்துவப் பல்கலை கல்லுாரிகளில் உள்ள மருத்துவ படிப்பு விபரங்களை குறிப்பிடவில்லை.சுகாதாரத்துறை செயலர், 'நிகர்நிலை மருத்துவப் பல்கலை படிப்பிற்கான இடங்கள் பொது கலந்தாய்வில் வராது,' எனக் கூறியுள்ளார். பொது கலந்தாய்விலிருந்து, நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளை விலக்கி வைக்கும் நோக்கில் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால், 85 சதவீத இடங்களை அவர்களே பூர்த்தி செய்வதுபோல் ஆகிவிடும்.
புதுச்சேரி உட்பட அண்டை மாநிலங்களின் நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளில், பொது கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழகத்தில் நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு பட்டியலில், நிகர்நிலை மருத்துவப் பல்கலைகளை சேர்க்க வேண்டும்.

மருத்துவப் படிப்புகள், இடங்கள், கட்டணம் உள்ளிட்ட இதர விபரங்களை, பல்கலை மானியக்குழு விதிகள்படி (யு.ஜி.சி.,) வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு முருகன் மனு செய்திருந்தார்.நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சாமிநாதன் அமர்வு தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக்குழு செயலர், இந்திய மருத்துவக் கவுன்சில் செயலர், மத்திய கேபினட் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜூலை 14 க்கு ஒத்திவைத்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024