ரயில் பயணத்தில் பாடாய்படுத்தும் தடக், தடக் சத்தத்துக்கு விரைவில் ‘குட்பை’
2017-07-04@ 21:07:42
வேலூர்: இந்தியாவில் ரயில் சேவை தொடங்கி 160 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ரயில் சேவை முதன் முதலாக மும்பை-தானே இடையே 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படுகிறது. வருங்காலங்களில் இந்தியாவில் புல்லட் ரயில்களும், அதிவேக ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில்களை தற்போதுள்ள தண்டவாளங்களை கொண்டு இயக்க முடியாது. தற்போதுள்ள ஒவ்வொரு தண்டவாளத்தின் நீளம் 13 மீட்டர் கொண்டது. காரணம் ஒரு ரயில் பெட்டியின் நீளம் 13 மீட்டர். எனவே தண்டவாளங்களும் 13 மீட்டருக்கு ஒரு துண்டு என பொருத்தப்பட்டது. இதனால் ரயில்கள் தண்டவாளங்களில் செல்லும்போது ‘தடக், தடக்’ என்ற சத்தம் வரும். இனி இந்த சத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டவாளங்கள் அனைத்தும் கோரக்பூரில் உள்ள செய்ல் கம்பெனி மூலம் தயாரிக்கப்படுகிறது. அங்கு 26 அடி நீளம் கொண்ட தண்டவாளமாக உருவாக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் தண்டவாளங்கள் 26 அடி நீளம் கொண்டதாகவே ெபாருத்தப்படும். அதனால் ரயில்கள் தண்டவாளத்தில் செல்லும்போது தடக், தடக் சத்தம் அதிகம் வராது. இந்த பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது. தெற்கு ரயில்வே பிரிவிலும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பயணிகள் இரைச்சலை அனுபவிக்காமல் பயணிக்கலாம்.
No comments:
Post a Comment