Wednesday, July 5, 2017

ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் மக்களுக்காக இயக்கிய மாநகர பஸ் திடீர் நிறுத்தம் 
 
2017-07-05@ 01:53:39

சென்னை: சென்னை புறநகர் பகுதி மக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த மாநகர பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பிள்ளைபாக்கம், கொளத்தூர், நாவலூர், மலைப்பட்டு, சேத்துபட்டு, மணிமங்கலம், கரசங்கால், முடிச்சூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும், மேற்கண்ட பகுதிகளில் இருந்து தாம்பரம் வழியாக குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிக்கும் ஏராளமான மாணவ, மாணவிகளும் சென்று வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், மணிமங்கலம், சேத்துபட்டு, மலைப்பட்டு, கொளத்தூர், பிள்ளைபாக்கம் வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு மாநகர பஸ்கள் (தஎ 583சி, 583 டி) இயக்கபட்டன.

இந்நிலையில் (தஎ 583 சி) ஒரு பஸ் நேற்று முன்தினம் முதல் இயக்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட இந்த பஸ் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதால், தினமும் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை இயக்கப்பட்ட (தஎ 583 சி) மாநகர பஸ் கடந்த 2 நாட்களுக்கு முன் எவ்வித முன் அறிவிப்பின்றி, நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

வசூல் குறைவாக உள்ளதாக காரணம் காட்டி பஸ் சேவையை நிறுத்தி உள்ளனர். கிராமங்களில் இருந்து நகர் பகுதிகளுக்கு செல்லவே மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. பல பகுதிகளில் இதைவிட குறைவாக வசூல் ஆகிறது. வளர்ச்சி அடைந்து வரும் எங்கள் பகுதியில் இயக்கபட்டு வந்த பஸ் சேவையை திடீர் என்று நிறுத்த என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே நிறுத்தப்பட்ட (தஎ 583 சி) மாநகர பஸ்சை மீண்டும் இயக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024