Friday, July 7, 2017

குழந்தைகள் தோல்வியும் பழக வேண்டும்... ஏன் தெரியுமா?#GoodParenting




அது ஒரு கல்யாண வீடு. உறவுகளின் கேலி கிண்டல்ளுக்கு மத்தியில் குழந்தைகளின் ரகளையும் கலகலப்பு சேர்ந்தது. சொந்தங்கள் புதுப்புது விளையாட்டுகளில் களம் இறங்கினர். வெற்றிபெற்றால் பரிசு என்று சொல்லப்பட்டது. போட்டியும் கமெண்டுமாக சுட்டிகள் கூட்டம் களம் இறங்கியது. கல்யாணப் பெண்ணின் அம்மா சாந்தி, விசேஷத்துக்கு வந்த ஒரு குழந்தைகூட மனம் வருத்தப்படக் கூடாது என்பதில் கவனமாகச் செயல்பட்டார். மியூசிக்கல் சேர் போட்டியின் ஒவ்வொரு ரவுண்டிலும் வெளியேறிய குழந்தைகளுக்கும் பரிசு கொடுத்து புன்னகைக்கச் செய்தார். இது சரியா?

அது ஒரு பூங்கா... அங்கு சற்றுமுன்பு அறிமுகமான குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். சந்துருவுக்கு திடீரென கீழே விழுந்து முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் பதறியடித்து உதவ முன்வந்தனர். சந்துருவை அள்ளிக்கொண்ட அவன் அம்மாவோ, ''நான் உன்கூட இருக்கேன் சந்துரு. உனக்கு எதுவுமில்லை. சரியாகிடும்'' என அன்பு வார்த்தைகளால், அவன் விழுந்ததை மறக்கவைக்க முயற்சி செய்தார். இப்படி வலியே அறியாமல் நம் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டுமா?

ஷாப்பிங் செல்லும்போதெல்லாம் பார்க்கும் பொருள்களில் எதையாவது வாங்கித் தரச்சொல்லி அடம்பிடிப்பாள் மித்ரா. தராவிட்டால் முகம் சோர்ந்துவிடும். அவள் கேட்பதற்கும் மேலாக வாங்கித் தந்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் அம்மா சித்ரா. ஆனாலும், மித்ரா எதிலும் திருப்தியடையாமல் எல்லாவற்றையும் கேட்டு சித்ராவை திகைக்கவைப்பாள். குழந்தைகள் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தருகிறார் மனநல ஆலோசகர் பாபு ரங்கராஜன், ''ஒற்றைக் குழந்தைகள் மட்டுமே உள்ள நியூக்ளியர் குடும்பங்களில், குடும்பத்தின் மொத்த கவனமும் குழந்தை மீதே குவிகிறது. அவர்கள் பசியை உணரும் முன்பே உணவூட்டப்படுகிறது. விளையாட்டுப் பொம்மைகள் வாங்கிக் குவிக்கப்படுகிறது. குழந்தை தனக்கு எது தேவை என்று யோசிப்பதற்கான வாய்ப்பே கொடுக்கப்படுவதில்லை. பெற்றோரின் அதீத கவனிப்பு, அவர்களின் வாழ்விலிருந்து அனுபவம் வழியாகக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது.



நாம் எதிர்பார்க்கும் எல்லாம் உடனே கிடைத்துவிடாது. சிலவற்றுக்குக் காத்திருக்க வேண்டும். தோல்விகளையும் சந்திக்க வேண்டி வரும் என்பதைக் குழந்தைகள் உணராமல் வளர்க்கப்படுகின்றனர். சிறு வயதில் தான் நினைத்தது கிடைக்காவிட்டால், அந்தக் குழந்தை அழுகையாகவும் அடம்பிடித்தலாகவும் வெளிப்படுத்தும். அதன் அழுகையை நிறுத்துவதற்காகவும் மனம் வருந்தக்கூடாது என்ற நோக்கத்திலும் கேட்பதை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். இது தவறான நடைமுறை. குழந்தை வளர்ப்பில் பெற்றோர் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. ஒரு குழந்தை நல்ல விஷயங்களைச் செய்யும்போது, பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே குழந்தை தவறு செய்யும்போது தண்டிப்பதால், குழந்தை கோபம்கொள்கிறது. இங்கே தண்டிப்பதற்குப் பதிலாக, 'நீ செய்தது தவறு' எனப் புரியவைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

குழந்தைகளின் சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் தோல்வியில் முடியும்போது, சமாதானப்படுத்துவது தவறு. மாறாக, 'நடந்தது நடந்துவிட்டது அடுத்து என்ன செய்யலாம்?' என்று உங்கள் குழந்தையிடமே கேளுங்கள். தோல்விக்கான காரணங்களை குழந்தைகளிடம் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கலந்துரையாடுங்கள். எதையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்று ஆலோசித்து தன்னை மதிப்பிட்டுக்கொள்ளும் வாய்ப்பை குழந்தைக்குக் கொடுங்கள். தன்னிடம் மாற்ற வேண்டிய குறைகள் இவைதான் என்று குழந்தைகள் மனம் பட்டியலிட்டுக்கொள்ளும். அவற்றை மாற்றவும் முயற்சி செய்யும். இதுபோன்ற விஷயங்கள் குழந்தைக்குள் தானாகவே நடக்கும். தோல்வியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, அந்தக் குழந்தைக்குள் பிராப்ளம் சால்விங் திறன் வளரும்.

வாழ்வில் எப்போதும் ஏதாவது ஒரு தோல்வி அல்லது ஏமாற்றத்தை நாம் சந்தித்தாக வேண்டும் என்ற இயல்பை குழந்தைகள் புரிந்துகொள்ளட்டும். கீழே விழுந்து அடிபடுவதும் வலிப்பதும் இயல்பு என்பதைப் புரிந்துகொள்ளட்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் இது பொதுவானதே. அப்போதுதான் பிரச்னைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் யோசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதற்கு வாய்ப்பற்ற குழந்தைகள்தான் தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்காகவோ, கல்லூரியில் எதிர்பார்த்த படிப்பு கிடைக்காமல் போனதற்காகவும் தற்கொலை வரை போகின்றனர். வாழ்வின் இன்பதுன்பங்கள் இரண்டையும் குழந்தைகள் தெரிந்துகொள்ளும் வகையில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. இதற்கான சந்தர்ப்பங்கள் வரும்போது அவர்கள் வலியிலிருந்து வெளியில் வர நாம் உதவலாம். ஆனால், வலியே தெரியாத மாதிரி வளர்க்கக் கூடாது'' என்கிறார் பாபு ரங்கராஜன்.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024