Friday, July 7, 2017

"மூன்றுநாள் ரயில் பயணம்... பிளாட்பாரத்தில் தூக்கம்!" - மகன் வீட்டுக்குச் சென்ற வேலூர் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்


சென்னையில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்ற வேலூர் பெண், முகவரியை மறந்து மூன்று நாள்கள் ரயிலிலேயே பயணித்துள்ளார். ஒரு வாரத்துக்குப்பிறகு அவரை மீட்டு மகனிடம் ஒப்படைத்துள்ளனர் மனிதநேயமுள்ளவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், அன்னனூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் மூதாட்டி ஒருவர், சில தினங்களாக படுத்திருந்தார். பயணிகள் கொடுக்கும் உணவை மட்டும் சாப்பிட்ட அவர், யாரிடமும் உதவி கேட்கவில்லை. யார் இவர்? என்ற கேள்வி பயணிகளில் பலருக்கு எழுந்தாலும் மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை. அந்தவழியாகச் ரயிலை இயக்கும் டிரைவர் அச்சுதன், கண்ணில் அந்த மூதாட்டி தென்பட்டார். உடனடியாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களை இயக்கும் டிரைவர்கள் நடத்தும் 'நல்ல சமாரியன் மீட்பர் குழு'வுக்கு அச்சுதன் தகவல் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் அன்னனூர் ரயில் நிலையத்துக்கு மீட்பு குழுவினரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் சங்கரநாரயணனும் சென்றனர். அவர்கள், மூதாட்டிக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். பிறகு மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது, மூதாட்டி தன்னுடைய பெயர் சேஷம்மாள், மகன் சென்னையில் இருப்பதாகவும் மகள் வேலூர் காட்பாடியில் வசிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், அவர்களுடைய முகவரி மட்டும் தனக்குத் தெரியவில்லை என்று பரிதாபமாக மூதாட்டி சேஷம்மாள் தெரிவித்தார். மேலும், சேஷம்மாள், நடக்க முடியாதளவுக்கு காலில் காயங்களும் இருந்தன. அதுகுறித்து கேட்டபோது பிளாட்பாரத்திலிருந்து தவறி விழுந்துவிட்டதாகக் கண்ணீர்மல்க தெரிவித்தார்.




இதனால் சமூக சேகவரும், சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் வெங்கடேஷுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வெங்கடேஷும், சமூக சேவகி வசந்தி மற்றும் பாலாஜி ஆகியோர் அன்னனூர் ரயில் நிலையத்துக்குச் சென்றனர். சேஷம்மாளை மீட்டு சென்னை போரூரில் உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்ததோடு சிகிச்சையை அளிக்கவும் நடவடிக்கை எடுத்தனர். மறுநாள் வெங்கடேஷ், தன்னுடைய அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். அப்போது காலைப்பத்திரிகையில் சேஷம்மாளைக் காணவில்லை என்ற விளம்பரம் வெங்கடேஷ், கண்ணில் தென்பட்டது. உடனடியாக விளம்பரத்திலிருந்த போன் நம்பரில் பேசினார். அவர், தெரிவித்த தகவல் கேட்டு எதிர்முனையிலிருந்த சேஷம்மாளின் மகன் கிஷோர்பாபுவிற்கு மகிழ்ச்சியடைந்தார். பிறகு, போரூர் முதியோர் இல்லத்துக்குச் காரில் சென்ற கிஷோர்பாபு, சேஷம்மாளைப் பார்த்துக் கண்கலங்கினார். அங்கிருந்து அவரை அழைத்துக்கொண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சேஷம்மாளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து வெங்கடேஷ் கூறுகையில், "அன்னனூர் ரயில் நிலையத்தில் நடக்க முடியாமல் சேஷம்மாள் படுத்திருக்கும் தகவல் எங்களுக்கு தெரிந்ததும், உடனடியாக அங்குச் சென்றோம். அங்கு சேஷம்மாள், முழு விவரத்தையும் எங்களிடம் சொன்னார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் சேஷம்மாள் குடியிருந்து வந்தார்.

சேஷம்மாளின் மகன் கிஷோர்பாபு, சென்னையில் வசிக்கிறார். அங்கு செல்ல தனியாக ரயிலில் வந்துள்ளார் சேஷம்மாள். முதுமை காரணமாக மகனின் முகவரியை மறந்துவிட்டார். இதன்பிறகு, அந்த ரயிலிலேயே மூன்று நாள்கள் பசியுடன் பயணித்துள்ளார். அவரிடம் செல்போனும் இல்லை. இதனால், யாரையும் தொடர்பு கொள்ளமுடியாமல் சிரமப்பட்டுள்ளார். அன்னனூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது இறங்கிய சேஷம்மாள் பிளாட்பாரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், எங்கும் செல்ல முடியாமல் பிளாட்பாரத்திலேயே படுத்துறங்கினார். யாரிடமும் உதவியும் கேட்காமல் அங்கு தங்கியிருந்த சேஷம்மாள் குறித்து எங்களுக்குத் தகவல் கொடுத்தனர். சேஷம்மாளுக்கு 'டிமென்ஷியா' என்ற முதுமை மறதி நோயும் இருப்பது தெரிந்தது. இதனால்தான் அவர் தன்னுடைய மகனின் முகவரியை மறந்துவிட்டு ரயிலில் பயணித்துள்ளார். பிளாட்பாரத்தில் படுத்துறங்கியுள்ளார்" என்றனர். சேஷம்மாளைக் காணாமல் அந்தக்குடும்பம் பரிதவித்துள்ளது. நான், விளம்பரத்தைப் பார்த்து கிஷோர்பாபுவிற்கு போன் செய்ததும் அவரால் மகிழ்ச்சியில் பேச முடியவில்லை" என்றார்.

ஒரு வாரத்துக்குப்பிறகு போரூர் காப்பகத்தில் சேஷம்மாளும் கிஷோர்பாபு மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சந்தித்தபோது கண்ணீர்மல்க கட்டித்தழுவிக் கொண்டனர். தாய், மகன் பாசத்தைக் கண்டு முதியோர்களும் ஆனந்தத்தில் பேச முடியாமல் அமைதியாகினர்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024