Thursday, July 6, 2017

சபாஷ்.. நரிக்குறவ குழந்தைகள் கல்விக்கு உதவிய போலீசார்!




சென்னை: அம்பத்தூரில் சாலை ஓரங்களில் வாழும் நரிக்குறவர் இன மக்களின் குழந்தைகளை போலீசார் பள்ளி கூடத்தில் சேர்த்துள்ளனர். போலீசாரின் இந்த செயல்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ் அருகே உள்ள பிளாட் பாரத்தில் சுமார் 15 க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து அதில் வரும் வருவாயை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயராகவன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் தங்கி இருந்த நரிக்குறவர்களின் குழந்தைகள் சாலை ஓரங்களில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

இதைப்பார்த்த காவல் ஆய்வாளர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதது குறித்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் விசாரித்தார். அதற்கு பதிலளித்த அவர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்ததாகவும், ஆனால் போக்குவரத்து மற்றும் துணிகள் என செலவிட பணம் இல்லாததால் இடையிலேயே நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆய்வாளர் விஜயராகவன் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆணையாளரின் உத்தரவின் பேரில் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பேசி, 7 குழந்தைகளை புதிதாகவும், இடையில் நிறுத்தப்பட்ட 3 குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.

மேலும் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர போக்குவரத்து வசதியும் காவல்துறை சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த செயல்பாடு மக்களிடையே மதிப்பை உயர்த்தும் என கூறப்படுகிறது.

source: oneindia.com

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024