Friday, November 3, 2017


குப்பையில், 'ஆதார்' அட்டைகள்: மக்கள் அதிர்ச்சி


குப்பையில், 'ஆதார்' அட்டைகள்: மக்கள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், குப்பையில் வீசப்பட்டு கிடந்த, 'ஆதார்' அட்டைகள் மற்றும் முக்கிய கடிதங்களை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி, பழைய பேட்டை பகுதியில், நேற்று காலை, குப்பை அள்ளும் பணியில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். நேதாஜி சாலையில், மூன்று பிளாஸ்டிக் பைகளில் வீசப்பட்டிருந்த குப்பையை அள்ளும் போது, ஆதார் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்ததை பார்த்தனர். பையை கீழே கொட்டி பார்த்த போது, ஏராளமான கடிதங்களும், பிரிக்கப்படாத ஆதார் அட்டைகளும் இருந்தன. அவை, கனகமுட்லு தபால் அலுவலகத்தில் இருந்து, பொதுமக்களுக்கு வழங்க எடுத்து வந்தவை என்பது தெரிந்தது. மேலும், 50க்கும் மேற்பட்ட ஒரிஜினல் ஆதார் அட்டைகள், வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய, ஏ.டி.எம்., கார்டின் பின் எண்கள், நகை அடமான கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய கடைசி நாளுக்கான அழைப்பு கடிதங்கள் கிடந்தன. அத்துடன், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டண விபர கடிதங்கள், எல்.ஐ.சி., கடிதங்கள் என, முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், பிரிக்கப்படாமல், பண்டல்களாக கட்டி போடப்பட்டிருந்தன.
கிருஷ்ணகிரி கோட்ட தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர், சுப்பாராவ் கூறுகையில், ''குப்பையில் வீசப்பட்ட கடிதங்கள் மற்றும் ஆவணங்கள், 2015 மற்றும், 2016ல் டெலிவரி செய்ய வேண்டியவை. ''இது எவ்வாறு நடந்தது என, துறை ரீதியாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையில் வீசப்பட்ட கடிதங்களை, டெலிவரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

news today 23.10.1024